தற்போது கோடிகளில் தமிழ்ப்படங்கள் தயாராகி வருகிறது. ஹீரோவின் சம்பளமோ மொத்த பட்ஜெட்டில் பெரிய தொகையை விழுங்கி விடுகிறது. அதன்பிறகு தயாரிப்பாளர்கள் படத்தை கடனை உடனே வாங்கி எடுப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறார்கள்.
படம் வெளியாகி வெற்றி பெற்றால் தான் அவர்களுக்கு மறுவாழ்வு. இல்லாவிட்டால் அவர்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி சின்னாபின்னமாகி விடுகிறார்கள்.
அதே நேரம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்கள் கதை தரமாக இருக்கும்பட்சத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுவிடுகின்றன. தயாரிப்பாளர்களுக்கு கணிசமான லாபத்தையும் ஈட்டித் தருகின்றன. அந்தக் காலத்தில் அப்படி ஒரு படம் வெளியானது. இந்தப் படத்தின் மொத்த பட்ஜெட்டே 32 ஆயிரம் தான்.
இந்தப் படத்திற்கு ஹீரோ வாங்கின சம்பளம் வெறும் 140 ரூபாய் தான். ஆச்சரியமாக இருக்கிறதா, வாங்க பார்க்கலாம்.
1940களில் ஹீரோ என்றாலே அவருக்கு சகல வித்தைகளும் அத்துப்படியாக இருக்க வேண்டும். சண்டை போடத் தெரியணும். பாட்டுப்பாடத் தெரியணும். அதே நேரம் நல்லா நடிக்கவும் தெரியணும். ஆனால் இவற்றை எல்லாம் தகர்த்து எறிந்தவர் தான் காமெடி நடிகர் டி.ஆர்.ராமச்சந்திரன்.
இவர் கண்கள் உருண்டையாக பெரிதாக இருக்கும். வித்தியாசமான பாடி லாங்குவேஜ் உடையவர். காமெடி, முட்டாள்தனம், குறும்புத்தனம், புத்திசாலித்தனம், அப்பாவித்தனம், வெட்கம், காதல் உணர்ச்சி என அத்தனை முகபாவங்களையும் கனகச்சிதமாகக் கொண்டு வந்து விடுவார்.
காமெடி நாயகர்களை ஹீரோவாக்கும் வித்தையைத் தொடங்கியவர் அவர் தான். இவர் ஹீரோவாக நடித்த ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’ படத்தில் சிவாஜி தான் இரண்டாவது கதாநாயகன்.

சிறுவயதில் படிப்பு ஏறவில்லை. நடிக்க வந்துவிட்டார். நாடகத்தில் வாய்ப்பாட்டு, ஆர்மோனியம் கற்றார்.1936ல் மதுரை ஜகந்நாத அய்யர் நடத்திய நாடகக் கம்பெனியில் மாதம் 3 ரூபாய் சம்பளத்தில் நடித்தார். 1938ல் ‘நந்தகுமார்’ படத்தில் டி.ஆர்.மகாலிங்கத்தின் நண்பனாக நடித்தார்.
2ம் உலகப்போர் நடந்த சமயத்தில் மக்கள் மன இறுக்கமாக இருந்தனர். இந்த நேரத்தில் காமெடிப் படங்கள் எடுத்தால் நல்லாருக்கும்னு நினைத்தனர். அதனால் ஏவி.மெய்யப்பச் செட்டியாரும், பம்மல் சம்பந்த முதலியாரும் காமெடி படம் எடுக்க நினைத்தனர். தாங்கள் எழுதிய ‘சபாபதி’ என்ற காமெடி நாடகத்தையே படமாக்கினர்.
1941ல் டி.ஆர்.ராமச்சந்திரன் ஹீரோவாக நடித்தார். பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. இந்தப் படத்தின் மொத்த பட்ஜெட்டே 32 ஆயிரம் தான். ஹீரோவின் சம்பளம் 140 ருபாய். இந்தப் படத்திற்குப் பிறகு டி.ஆரின் புகழ் பரவியது.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.


