தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 30ஆம் தேதி நடக்க இருப்பதாக தகவல் வெளியானது. அதே நேரத்தில் நேரு ஸ்டேடியத்தில் இந்த இசை வெளியீட்டு விழா நடைபெற இருந்த நிலையில் அரசிடமிருந்து இன்னும் அனுமதி கிடைக்கவில்லை என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் ‘லியோ’ இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பாளர் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரசியல் விமர்சகர் ஒருவர் தனது சமூக வலைதளத்தில் ‘லியோ’ படத்தின் ஆடியோ விழாவிற்கு அனுமதி கொடுக்காமல் ஆளுங்கட்சியிலிருந்து இழுத்தடித்து வருவதாகவும் ஒரு சில பேரங்கள் நடந்து கொண்டிருப்பதாகவும் பதிவு செய்திருந்தார்.
ஆனால் அந்த பதிவுக்கு ‘லியோ’ படத்தின் தயாரிப்பாளர் மறுப்பு தெரிவித்திருந்தார். இந்த செய்தி முழுக்க முழுக்க பொய்யானது என்றும் எந்த வித அரசியல் அழுத்தங்களும் இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ‘லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென ‘லியோ’ தயாரிப்பாளர் தனது சமூக வலைதளத்தில் ‘லியோ’ இசை வெளியிட்டு விழா ரத்து என கூறப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்கள் அதிக அளவில் டிக்கெட் கேட்பதாலும் ஒரு சில பாதுகாப்பு காரணங்களுக்காகவும் இந்த விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அவ்வப்போது ‘லியோ’ படத்தின் அப்டேட்டுகள் வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பின் குறிப்பாக ’இந்த இசை வெளியீட்டு விழா ரத்துக்கு பின்னணியில் அரசியல் அழுத்தம் இருப்பதாகவோ அல்லது வேறு ஏதும் காரணம் இருப்பதாகவோ யாரும் கற்பனை செய்து கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் அவரது இந்த பதிவில் பலர் இந்த இசை வெளியீட்டு விழா ரத்துக்கு அரசியல் பின்னணி தான் காரணம் என்று கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர். ‘லியோ’ படத்தின் முக்கிய பகுதிகளின் ரிலீஸ் உரிமையை ஆளுங்கட்சி தரப்பில் கேட்டதாகவும் அந்த பேரம் படியும் வரை அனுமதி அளிக்கவில்லை என்றும் கூறியுள்ளனர். ஆனால் அதே நேரத்தில் ஆளுங்கட்சியின் நிர்ப்பந்தத்திற்கு பணியாமல் விழாவையே ரத்து செய்யும் அளவிற்கு தயாரிப்பாளர் துணிச்சலான முடிவை எடுத்துள்ளதாகவும் சில நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.
‘லியோ’ ஆடியோ விழா ரத்து என்ற முடிவு கண்டிப்பாக விஜய் எடுத்ததாக தான் இருக்கும் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். விஜய் அரசியல் கட்சி விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் அவருக்கு இப்படி ஒரு நெருக்கடியான நிலை வந்திருப்பதை பார்க்கும்போது அவர் கண்டிப்பாக சரியான முடிவை தான் எடுத்து இருப்பார் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
மொத்தத்தில் ‘லியோ’ ஆடியோ வெளியீட்டு விழா ரத்து குறித்து விஜய் ரசிகர்களால் பகிரப்பட்டு வரும் கருத்துக்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.