ரூ.101 கோடிக்கு அல்ட்ரா டெக், கர்நாடகா வங்கி, எல் அன் டி பங்குகள்.. ஆனாலும் எளிமையாக இருக்கும் முதியவர்..!

ரூ.101 கோடிக்கு பங்குகள் வைத்திருக்கும் முதியவர் ஒருவர் மிகவும் எளிமையான சாதாரணமான வீட்டில் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தற்காலத்தில் ஒரு சில லட்சங்கள் வைத்திருப்பவர்கள் கார், பங்களா என வசதியாக இருக்கும் நிலையில் கேரளாவை சேர்ந்த முதியவர் ஒருவர் ரூ.101 கோடிக்கு பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளார். அவர் எல் அன் டி நிறுவனத்தின் பங்குகளை மட்டும் ரூ.80 கோடிக்கு வைத்துள்ளார். அதேபோல் அல்ட்ராடெக் சிமெண்ட் பங்குகள் 20 கோடிக்கும் கர்நாடக வங்கி பங்குகள் ஒரு கோடிக்கும் வைத்துள்ளார்.

ஆனால் அவருடைய வீடு மிகவும் சாதாரணமாக உள்ளது. மேல் சட்டை கூட போடாமல் மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதள பயனாளி ஒருவரால் பகிரப்பட்டுள்ள நிலையில் லட்சக்கணக்கான பார்வையாளர்களை பெற்றுள்ளது. மேலும் இந்த வீடியோவுக்கு ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ்களும் பதிவாகி வருகிறது.

இதுகுறித்து முன்னணி பங்குவர்த்தக நிறுவனம் வைத்திருக்கும் ஒருவர் கூறியபோது, ‘எல் அன் டி, அல்ட்ராடெக் மற்றும் கர்நாடக வங்கியின் பங்குகள் மிகவும் நல்ல பங்குகள், இந்த பங்குகள் இன்னும் மிகப்பெரிய தொகையை அவருக்கு கொடுக்கும்’ என்று கூறியுள்ளார். இன்னொரு நபர் இந்த ரூ.101 கோடி மதிப்புள்ள பங்குகளினால் அவருக்கு குறைந்தபட்சம் ரூபாய் 6 லட்சம் டிவிடெண்ட் கிடைக்கலாம் என்று தெரிவித்தார்.

ஆனால் அதே நேரத்தில் ஒரு சிலர் அவரது செயலுக்கு சற்று நெகடிவ் கமெண்ட் பதிவு செய்துள்ளனர். பணத்தை பொருத்தவரை பயன்படுத்தாமல் இருந்தால் அது மதிப்பற்றதாகிவிடும். பணம் வைத்திருந்து என்ன பிரயோஜனம்? பணம் என்பது ஒரு எரிபொருள் போன்றது. ஒரே இடத்தில் வைத்திருந்தால் அதனால் எந்த பயனும் கிடையாது. எளிமையாக இருப்பது ஒரு நல்ல விஷயம் தான். ஆனால் அதே நேரத்தில் பணம் வைத்திருப்பவர்கள் தங்களுக்காக ஒரு சில செலவை செலவழித்துக் கொள்வது தப்பில்லை. பணம் போதுமான அளவுக்கு இருக்கும்போது அந்த பணத்தை அனுபவிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்னொரு பங்குவர்த்த நிறுவனத்தை வைத்திருக்கும் பிரபலம் இது குறித்து கூறியபோது, ‘ஒரே நிறுவனத்தின் பங்குகளை வருடக்கணக்கில் வைத்திருப்பது புத்திசாலித்தனம் என்று நான் சொல்ல மாட்டேன். அவ்வப்போது சரியான நேரத்தில் லாபத்தை பதிவு செய்ய கற்றுக் கொள்ள வேண்டும். அதன் பிறகு அந்த பங்கு குறையும்போது மீண்டும் அதே பங்குகளை வாங்கி முதலீடு செய்யலாம்’ என்று கூறியிருந்தார்.

‘உதாரணமாக யூனிட்டெக் போன்ற நிறுவனத்தின் பங்குகளை இன்னும் பலர் வைத்திருப்பதை நான் அறிவேன். அந்த பங்கு நல்ல விலையில் உச்சத்தில் இருந்த போது அதை விற்று இருக்க வேண்டும். ஆனால் அதை விற்காமல் வைத்திருப்பதால் தற்போது அது குப்பை பங்காக மாறிவிட்டது. பங்கு வர்த்தகத்தை பொருத்தவரை ஒரு பங்கு உச்சத்தில் இருக்கும் போது விற்றுவிட்டு அதன் பிறகு அந்த பணத்தை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் அந்த பங்கு இறங்கும்போது வாங்க வேண்டும். இதுதான் பங்கு வர்த்தகத்தின் முக்கிய தந்திரம்’ என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் ஒரு சிலர் அந்த முதியவர் பங்குகளை விற்காமல் அப்படியே வைத்திருந்ததை பாராட்டி வருகின்றனர். எல்லா நிறுவனத்தின் பங்குகளும் ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் மிகப் பெரிய அளவில் ஒரு சில நிறுவனங்களின் பங்குகள் சரியாது. எனவே சரியான பங்குகளை தேர்வு செய்து அந்த பங்குகளை விற்காமல் நீண்ட காலத்திற்கு வைத்திருந்தால் கண்டிப்பாக அந்த பங்குகள் நல்ல வருமானத்தை கொடுக்கும் என்று கூறியுள்ளனர்.

ஒரு முறையான சேமிப்பு என்பது நீண்ட காலத்திற்கு மிகப்பெரிய லாபத்தை கொடுக்கும் என்பது இந்த முதியவர் மூலம் கற்றுக் கொண்டோம் என்றும் பலர் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்துள்ளனர்.

ஒரு நல்ல பங்கை தேர்வு செய்து அந்த பங்கில் தொடர்ச்சியாக முதலீடு செய்து கொண்டே வரவேண்டும் என்றும் ஒருவேளை அந்த பங்கு குறைந்தாலும் அதை அதிக அளவு வாங்குவதற்கான வாய்ப்பாகத்தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவ்வாறு செய்தால் குறைந்தது 30 வருடம் கழித்து அந்த பங்குகள் மிகப்பெரிய லாபத்தை கொடுத்திருப்பதை கண்கூடாக காணலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.