16 வயதினிலே குருவம்மா.. தமிழ் சினிமாவின் செல்லமான ‘அக்கா‘ காந்திமதியின் திரைப்பயணம்

By John A

Published:

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களுக்கெல்லாம் அம்மாவாக நடித்து இழுத்து இழுத்துப் பேசும் தனது தனிப்பட்ட குரலால் ரசிகர்களை மகிழ்வித்தவர் காந்திமதி. காந்திமதி திரையில் வந்தாலே அந்தக் காட்சிகளில் கலகலப்புக்கு கொஞ்சமும் பஞ்சமிருக்காது.

குருவம்மா’, ‘ஒச்சாயி கிழவி’, ‘கஞ்சப்புருஷனின் மனைவி’ என நடிப்பு ராட்சஷசியாகத் திகழ்ந்த காந்திமதிக்கு சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீதும் கூத்தின் மீது அப்படியொரு ஈடுபாடு, மானாமதுரையை சொந்த ஊராகக் கொண்ட இவர் கோயில் திருவிழா, ஊரில் ஒரு விழா என்றால் குதூகலமாகிவிடுவார். வள்ளி திருமணம் முதலான நாடகங்களை விடிய விடிய கண்கொட்டாமல், பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, வீட்டில், அக்கம்பக்கத்தில் நடித்துக்காட்டுவார்.

நடிப்பின் மீது கொண்ட ஆர்வமும் வெறியும்தான் நாடகத்துக்குள் இவரைக் கொண்டு வந்து சேர்த்தது. அந்தக் காலத்தில் வெகு பிரபலமாக இருந்து எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் நாடகக் குழுவில் சேர்ந்து நடிக்கத் தொடங்கினார். இவரின் நடிப்பும் வசனமும் குறிப்பாக வசன உச்சரிப்பும் தனித்து இவரை அடையாளம் காட்டியது.

ஜெய்சங்கருக்கு முதல்படமான இரவும் பகலும் படம் தான் காந்திமதிக்கும் முதல்படம். ஒரு காட்சி, கூட்டத்தில் ஒருவர், ஒரேயொரு வசனம். என்று நடித்தவருக்கு ஜெயகாந்தனின் ‘யாருக்காக அழுதான்’ படம் திருப்பு முனையைக் கொடுத்தது. எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்டோரின் கருப்பு வெள்ளை, கலர் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். எம்ஜிஆருக்கு அம்மா, சிவாஜிக்கு அம்மா என்றெல்லாம் நடித்திருக்கிறார்.

தீவிர முருக பக்தராக இருந்து கிறிஸ்தவ சாதுவாக மாறிய பழம்பெரும் நடிகர்.. சிவாஜிக்கே டஃப் கொடுத்த ஏவிம் ராஜன்

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய கதவு திறந்த படம், பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’. படத்தில் சப்பாணி, மயிலு, பரட்டையன், டாக்டர் எல்லோரும் நம் நினைவில் நிற்கிறார்கள். அதேபோல் இன்றைக்கும் நம் மனதில் நிற்கிற குருவம்மா கேரக்டரை அவ்வளவு சுலபமாக எவரும் மறந்துவிட முடியாது.

மயிலின் அம்மா குருவம்மா… அச்சு அசலான கிராமத்து அம்மா. வந்த வம்படியை விடாமல், நீயா நானா என்று பார்த்துவிடுகிற ஆவேச அம்மா. மானம் போய்விட்டதை அறிந்து துடித்துக் கதறி, உயிர்விடுகிற யதார்த்த எளிமையான மாந்தராக, அம்மாவாக, குருவம்மாவாக அப்படியொரு அவதாரம் எடுத்தார் காந்திமதி.

கவுண்டமணிக்கு ஜோடியாக, பாரதிராஜாவின் ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் தனது பிறகு கே.பாக்யராஜின் ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்தில் கல்லாபெட்டி சிங்காரத்தின் மனைவியாக, பாக்யராஜின் அம்மாவாக இவர் கொடுத்த அலப்பறை செம காமெடி.

முன்னணி நடிகர்களே இல்லாமல் பாக்யராஜ் செய்த மகத்தான சாதனை.. திரைக்கதையின் பிதாமகனாக ஜொலித்தது இப்படித்தான்

இந்த சமயத்தில்தான் எம்.ஏ.காஜாவின் ‘மாந்தோப்பு கிளியே’ வந்தது. படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தமிழகத்தின் பட்டிதொட்டிகளில், வீடுகளில் நடைபெறும் விசேஷங்களில், லவுட் ஸ்பீக்கரில், ‘மாந்தோப்பு கிளியே’ காமெடியும் ‘16 வயதினிலே’ ஒலிச்சித்திரமும் ஓடின. ஊரே அமைதியாகக் கேட்டு ரசித்தது. கஞ்சக் காமெடியைக் கேட்டு வெடித்துச் சிரித்தது. சுருளிராஜன் – காந்திமதி இல்லையென்றால், ‘மாந்தோப்புக் கிளியே’ வெற்றிப்படமாக அமைந்திருக்காது. இன்றைக்கும் மனங்களில் நின்றிருக்காது.

‘அக்கா…’ என்று ‘கரகாட்டக்காரன்’ படத்தில் சண்முகசுந்தரம் பேசுகிற வசனம் பிரபலம். அந்த அக்காவாக, ராமராஜனின் அம்மாவாக சிறந்த நடிப்பை வழங்கியிருப்பார் காந்திமதி. திரையுலகில் எல்லோருக்கும்… கமல் உட்பட சகலருக்கும் காந்திமதி அக்காதான். ‘அக்கா அக்கா’ என்று அன்புடன் பழகுவார்களாம். கமல், தன் படங்களில் ஏதேனும் ஒரு கேரக்டர் கொடுத்துவிடுவார்.

‘அபூர்வ சகோதரர்கள்’ முதலில் எடுக்கப்பட்டு 20 நாளுடன் நின்றுவிட்டது. அப்போது மெக்கானிக் கமலுக்கு அம்மாவாக காந்திமதிதான் நடித்தார். பிறகுதான் மனோரமா. ‘உங்க அம்மாவோட காலைத்தொட்டு கும்பிடணும்டோய்’ என்ற பாடல், படத்தின் 75வது நாளில் இருந்து இடைவேளையில் திரையிடப்பட்டது. அப்போது கமலும் காந்திமதியும் ஆடிய பாடலைப் பார்ப்பதற்காகவே அடுத்தடுத்து வந்தார்கள் ரசிகர்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக, காந்திமதியை ‘குருவம்மா’வாக்கிய பாரதிராஜா, ‘மண்வாசனை’ படத்தில், ‘ஒச்சாயி’ கிழவியாக ஆக்கியிருந்தார்.  கலைத்துறையில் சகலகலா வித்தகியாகத் திகழ்ந்த காந்திமதியை தமிழ் சினிமா சரியாகக் கொண்டாடப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.