வலிகளுடன் வாழ்ந்து மறைந்த ஸ்வர்ணலதா.. அந்த அழகுக் குரலுக்கு பின் இருந்த சோகம்

Published:

பிரபல திரைப்பட பின்னணி பாடகி ஸ்வர்ணலதா அவர்களின் நினைவு தினம் இன்று செப் 12 (2010). கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர். கடந்த 1989ஆம் ஆண்டு முதல் பின்னணிப் பாடகியாக திகழ்ந்தார்.

தாய் மொழியான மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, உருது, படகா ஆகிய மொழிகளில் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார்.
எம்.எஸ்.விஸ்வநாதனால் நீதிக்கு தண்டனை (‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா…’) படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சொர்ணலதாவுக்கு, அடுத்தடுத்து ஏராளமான வாய்ப்புகளை இளையராஜா வழங்கினார்.

பின்னர் ஏ.ஆர்.ரஹ்மான், தேவா உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களின் படங்களிலும் நிறைய பாடல்களை ஸ்வர்ணலதா பாடியுள்ளார். 1989லிருந்து மேடைகளில் பாடி வந்தாலும், கேப்டன் பிரபாகரன் படத்தில் இடம்பெற்ற ‘ஆட்டமா தேரோட்டமா…’ ஒரே பாடல் அவரை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது.

சத்ரியன் படத்தில் இசைஞானி இளையராஜா இசையில் ‘மாலையில் யாரோ மனதோடு பேச…’ என்ற பாடலைப் பாடியதன் மூலம் இசை ரசிகர்களின் இதயங்களில் நீங்காத இடம்பெற்றார் சொர்ணலதா.

அதன் பிறகு சின்னத்தம்பி, சின்னவர், சின்ன ஜமீன், குருசிஷ்யன், தளபதி, வள்ளி, வீரா, என் மன வானில் என ஏராளமான படங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

பாரதிராஜாவின் கருத்தம்மா படத்தில் ரஹ்மான் இசையில் இவர் பாடிய ‘போறாளே பொன்னுத்தாயி…’ பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது. பாடல் பாடுவது தவிர கீ போர்ட், ஹார்மோனியம் வாசிப்பதிலும் வல்லவர் ஸ்வர்ணலதா.

ஸ்வர்ணலதாவை பற்றி ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என்றால், அபூர்வமான குரலை பெற்றவர் . பொதுவாக பெண் பாடகர்கள் யாராவது பின்னணி பாடல்களை பாடினால், அந்த பாடலை பாடியது யார் என்று கண்டுபிடிப்பது பெரிய கடினம். ஆனால் இந்த பாட்டு பாடியது ஸ்வர்ணலதாவேதான் என்று உறுதியாகவே ரசிகர்களுக்கு தெரிந்துவிடும். அந்த அளவுக்கு ஒரு பரிச்சயம் வாய்ந்த குரல் ஸ்வர்ணலதா குரல்.

அவரது உச்சரிப்பை கேட்டால், இவர் தாய்மொழி தமிழ் இல்லை என்று சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள்.மலையாள தேசத்தில் பிறந்த மாயகுரல் கொண்ட பெண். அவ்வளவு வளம் கொழிக்கும் உச்சரிப்பு ஒவ்வொரு பாடல்களிலும் இருக்கும்.

காலத்தால் அழியாத பாடல்களை பாடிய ஸ்வர்ணலதா

அவரது பாடல்கள் ஒவ்வொரு ரசனையும் உச்சமாகவும் சோகம் என்றால் அதைவிட சோகமாக ஒரு பாடலை பாடிவிட முடியாது. மகிழ்ச்சியின் உச்சமாகவும், துள்ளலின் உணர்வும், ரணத்தின் வலிகள் என்றால் அப்படியே எதிரொலிக்கும பாடல்களை பாடும் போதே ஸ்வர்ணலதா உணர்வுகளை கொண்டுவந்துவிடுவார்.

ஸ்வர்ணலதா தனது 23 வருட சினிமா வாழ்க்கையில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 7,500-க்கும் மேற்பட்ட பாடல்களை பெரிய புகழ் பெற்றிருந்தாலும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் துயரமானது. தாய்-தந்தையரை சிறு வயதிலேயே இழந்தார்.

எவரிடமும் பேசிக்கொள்ளாத தனிமை விரும்பியான ஸ்வர்ணலதா,அமைதியான சுபாவம் கொண்டவர்.இவரது வருமானத்தை நம்பித்தான் குடும்பமேஇருந்தது.குடும்பபாரத்தை தாங்கியபடி மிகப்பெரிய உச்சம் அடைந்தார். இவர் பாடல் பாட வந்த காலத்தில் சித்ரா, ஜானகி உச்சியில் இருந்தனர். அவர்களுடன் ஸ்வர்ணலதாவும் மிகவும் உச்சம்பெற்றார். எவனோ ஒருவன் வசிக்கிறான் என்று அலைபாயுதே படத்தில் ஸ்வர்ணலதா பாடிய பாடல் இன்றைக்கு உள்ள 2கே கிட்ஸ்க்கும் 90ஸ் கிட்ஸ்க்கும் மிகவும் பிடித்த பாடல் ஆகும்.

80ஸ் கிட்ஸ், 90ஸ் கிட்ஸ், 20 கிட்ஸ் என மூன்று தலைமுறைகளை கவர்ந்த ஸ்வர்ணலதா உச்சத்தை பிடித்த போதும், கடைசிவரை திருமணம் என்ற பந்தத்திற்குள் அவரால் நுழைய முடியவில்லை. எல்லா உணர்வையும் பாடல்களை காட்டியவருக்கு, இயற்கை வேகமாக அழைத்து கொண்டது.

நுரையீரல் பாதிப்பால் பலவாறாக அவதிப்பட்டு, சிகிச்சையும் பலன் இன்றி 37 வயதிலேயே மரணமடைந்து விட்டார். ஒருவர் எத்தனை வருடங்கள் வாழ்ந்தார் என்பதை விட எத்தனை செயல்கள் அந்த வாழ்நாளில் அவர் செய்தார் என்பது தான் முக்கியம். இளம் வயதிலேயே பல லட்சம் மக்களின் அன்பை பெற்று மறைந்தவரின் குரல் ஏனோ மனதை விட்டு போகவே மறுக்கிறது. போறாளே பொன்னுத்தாயி, எவனோ ஒருவர் வாசிக்கிறான் என்ற பாடலை எப்போது கேட்டாலும் மனம் உடைந்தே போகிறது.

 

மேலும் உங்களுக்காக...