பிரியா படத்துக்கு ரஜினி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஒரே படத்தில் உச்சம் தொட்ட சூப்பர் ஸ்டார்.

By John A

Published:

இன்று இந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் ஸ்டாராக ஜொலித்துக்கு கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் ஒரு நடிகர் என்பதையும் தாண்டி அவர் படத்துக்கு எகிறியிருக்கும் மார்க்கெட் என்பது பல ஆயிரம் குடும்பங்களை வாழ வைக்கிறது என்பது தான் நிஜம். ரஜினி படத்தில் இருந்தால் அந்தப் படம் வசூல் மழை பொழியும் என்பது எழுதப்படாத விதி. இதனாலேயே ரஜினி படங்களின் ஓப்பனிங் என்பது இந்தியாவில் எந்த நடிகருக்கும் இல்லாத அளவாக பிரம்மாண்டமாக இருக்கும்.

ரஜினி நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஜெயிலர் படத்துக்கு அவர் வாங்கிய சம்பளம் சுமார் 210 கோடி என்று கூறப்படுகிறது. இப்படி சூப்பர் ஸ்டார் படம் என்றாலே படத்தின் பட்ஜெட்டில் பாதி அவர் சம்பளத்திற்கே சென்று விடுகிறது. ஏனைய 50 சதவீத பட்ஜெட்டில் தான் ஒட்டுமொத்த படமும் எடுக்கப்படுகிறது. ஆனால் இன்று இத்தனை கோடிகளைத் தொட்ட ரஜினியின் ஆரம்ப காலச் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

அவர் கண்டக்டராகப் பணியாற்றிய போது ரூ. 350 வழங்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து சினிமாத் துறையில் வந்த பிறகு ஆயிரம், இரண்டாயிரம் எனத் தரப்பட்டது. 16 வயதினிலே படத்தில் பரட்டையாக நடித்த ரஜினியின் சம்பளம் 2,000 தான் என்பது பலருக்கும் தெரியாத தகவல். உடன் நடித்த கமல், ஸ்ரீதேவி ஆகியோர் அப்போது உச்ச நட்சத்திரங்களாக இருந்ததால் அவர்களின் சம்பளம் ரஜினியைக் காட்டிலும் பல மடங்கு உயர்வு.

தொடர்ந்து ஹிட் கொடுக்க ஆரம்பித்த பின்னர்தான் ரஜினியின் சம்பளம் எகிறியிருக்கிறது. இந்நிலையில் பிரியா படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு ரஜினிக்கு வந்திருக்கிறது. எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் பஞ்சுஅருணாச்சலம் இப்படத்தினைத் தயாரித்தார்.

இங்கிலீஷ் டியூனா இருந்தா என்ன? இந்தா எழுதிக்கோங்க.. ஆங்கில இசைக்கு தரமான தமிழ் வரிகள் கொடுத்த கண்ணதாசன்..

இப்படத்தில் நடிக்க ரஜினியிடம் பஞ்சு அருணாச்சலம் என்ன சம்பளம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அப்போது ரஜினி தற்போது ஒரு படத்திற்கு ரூ.35,000 வாங்கிக் கொண்டிருக்கிறேன். இந்தப் படம் சிங்கப்பூர், மலேசியா என வெளிநாட்டில் ஷுட்டிங் என்கிறீர்கள் எனவே 15,000 போதும் என்றிருக்கிறார்.

பஞ்சு அருணாச்சலம் ரஜினியை நிமிர்ந்து பார்த்து, உன் மார்க்கெட் நிலவரம் என்னவென்று தெரியாதா? வெளியே உன்னுடைய படத்தினை விநியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் போட்டி போட்டு வாங்கிக் கொண்டு லாபம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். உனக்கு யாரும் சொல்லவில்லையா. உனக்கு ரூ. 1லட்சம் சம்பளம் .. இல்லை வேண்டாம் 1 லட்சம் ராசியாக இருக்காது.. 1,10,000 சம்பளம் என்று முதன் முதலாக ரஜினிக்கு சம்பளத்தினை பிரியா படத்திற்காக லட்சத்தைத் தாண்டி கொடுத்திருக்கிறார் பஞ்சு அருணாச்சலம்.

மேலும் ஏ.வி.எம். ஒரு படம் தயாரிக்க எண்ணிய போது பஞ்சு அருணாச்சலம் ரஜினியின் பெயரைக் கூறியிருக்கிறார். அப்படி ஏ.வி.எம். உருவாக்கத்தில் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய மாபெரும் வெற்றிப்படம் தான் முரட்டுக்காளை. இப்படித்தான் ரஜினியின் சம்பளம் படிப்படியாக பல மடங்கு வளர்ந்திருக்கிறது.