Sunitha and Sachana : தமிழில் ஒளிபரப்பாகி வரும் எட்டாவது பிக் பாஸ் சீசன் தற்போது மூன்றாவது வாரத்தையும் மிக வெற்றிகரமாக முடிக்கவுள்ளது. இதுவரை வெளியேறிய இரண்டு போட்டியாளர்களும் ஆண்கள் அணியில் இருந்த அர்னவ் மற்றும் ஃபேட்மேன் ரவிந்தர் ஆகியோர் தான். ஆனால் இந்த வாரம் முதல் முறையாக ஒரு பெண் போட்டியாளர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார் என்பதும் உறுதியாகி உள்ளது. அந்த வகையில் தர்ஷா குப்தா 3 வது ஆளாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
அதே வேளையில் வீட்டில் இருக்கும் மற்ற சில போட்டியாளர்களுடன் ஒப்பிடும் போது தர்ஷாவின் விளையாட்டு சிறப்பாக தான் இருந்தது என்றும் அப்படி இருந்த போதிலும் அவர் வெளியேறுவது நியாயமானது இல்லை என்றும் பலரும் விமர்சித்து வருகின்றனர். மக்கள் வாக்குகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டாலும், பிக் பாஸ் என்ற ஒரு நிகழ்ச்சி என்று வரும்போது நிச்சயமாக சுற்றி நிறைய விமர்சனங்கள் இருக்கத்தான் செய்யும்.
ஆனால், இவை அனைத்திற்கும் மத்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சி மிக வெற்றிகரமாக தான் சென்று கொண்டிருக்கிறது. மேலும் இந்த நிகழ்ச்சியில் பலரின் ஃபேவரைட் போட்டியாளர்களாக முத்துக்குமரன், பவித்ரா, தர்ஷிகா, சௌந்தர்யா, ஜெஃப்ரி உள்ளிட்ட பலரும் இருந்து வர சுனிதாவின் ஆட்டம் அதிகம் பேருக்கு பிடிக்காமலும் எரிச்சலூட்டும் வகையிலும் இருந்து வருகிறது. ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடி வந்தாலும் போகப்போக தனக்கு ஏற்றது போல மற்றவர்களை குறை கூறுவதும் அதே நேரத்தில் தனக்கு தேவைப்படும் போது அதை சாதாரணமாக பயன்படுத்திக் கொள்வதும் என இருந்து வருகிறார்.
இருவர் சண்டை போடும்போது அதற்கு நடுவே சென்று வேண்டுமென்றே அதனை இன்னும் மோசமாக ஆக்கும் வேலையை சுனிதா செய்து வருவதாக ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். இதற்கு சிறந்த உதாரணமாக தான் சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்திருந்தது. கடந்த வாரம் அன்ஸிதா மற்றும் சாச்சனா ஆகியோருக்கிடையில் சாப்பாட்டு விஷயத்தில் சண்டை நடக்க, வீடே இரண்டாய் உடைந்து போயிருந்தது.
அந்த சமயத்தில் அன்ஸிதாவுக்கு ஆதரவாக நின்று பேசும் சுனிதா, சாச்சனா கோபத்தில் உணவை குப்பையில் கொட்ட போகும்போது மிகுந்த ஆவேசத்தில் சாப்பாட்டை இப்படி வீணடிக்க கூடாது என்றும் மிக கடுமையாக சுனிதா பேசி இருப்பார். ஆனால் அதற்கு அப்படியே நேர்மாறான ஒரு விஷயத்தை சுனிதா சமீபத்தில் செய்துள்ளார்.
தனது தட்டில் கொஞ்சம் சாப்பாடு மீதம் இருக்க அதை யாருக்கும் தெரியாமல் அவர் குப்பை தொட்டியில் தட்டுவதும் தெரிகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் சாச்சனா செய்யும்போது மட்டும் ரொம்ப ஆவேசமாக பேசி விட்டு தனக்கென வரும் போது இப்படி குறிப்பிடலாமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே நேரத்தில் சுனிதாவுக்கு ஆதரவாக நிற்கும் பலரும் அந்த தட்டில் அதிகம் சாப்பாடு மீதமில்லை என்றும், சாச்சனா செய்ததுக்கு போல இது இல்லை என்றும் கூறி வருகின்றனர்.