40 வருடங்களுக்கு முன்பே ஒரு ‘வாடகைத்தாய்’ கதை.. நெருப்புடன் விளையாடிய முக்தா சீனிவாசன்..!

By Bala Siva

Published:

இன்றைய காலகட்டத்தில் வாடகைத்தாய் என்பது சர்வசாதாரணமாக உள்ளது என்பது அறிந்ததே. சமீபத்தில் நயன்தாரா கூட வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுக் கொண்டார். ஆனால் 40 வருடங்களுக்கு முன்னர் வாடகைக்தாய் என்பது ஒரு கெட்ட வார்த்தையாக மக்கள் மத்தியில் இருந்தது. ஒருவரது குழந்தையை இன்னொருவர் சுமப்பதா என்ற மனநிலைதான் அன்றைய காலகட்டத்தில் இருந்தது.

ஆனால் அந்த காலகட்டத்திலும் ஒரு வாடகைத்தாய் கதையை நெருப்புடன் விளையாடுவது போல் கையாண்டு மிகச் சிறப்பாக ஒரு திரைப்படத்தை இயக்குனர் முக்தா சீனிவாசன் எடுத்திருந்தார். அந்த படம் தான் ‘அவன் அவள் அது’.

உதவி ஒளிப்பதிவாளராக இருந்தவர் திடீரென நடிகையான அதிசயம்..‘நெஞ்சத்தை கிள்ளாதே’ வெற்றிக்கதை..!

சிவக்குமார், லட்சுமி, ஸ்ரீபிரியா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான இந்த படத்தை முக்தா சீனிவாசன் இயக்கியிருந்தார். விசு இந்த படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதியிருந்தார்.

இந்த படத்தின் கதைப்படி சிவகுமார் – லட்சுமி ஜோடிக்கு திருமணமான நிலையில் பேரக் குழந்தை பார்க்க வேண்டும் என சிவகுமாரின் தந்தை ஆசைப்படுவார். ஆனால் திடீரென ஒரு ஆபரேஷன் காரணமாக லட்சுமிக்கு குழந்தை பெற முடியாத நிலை ஏற்படும் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைகின்றனர்.

avan aval adhu2

இந்த நிலையில் தான் கணவனின் உயிர் அணுக்களை கொண்டு இன்னொரு பெண்ணை கருவுற செய்து குழந்தை பெற முடிவு செய்கிறார் லட்சுமி. இதற்காக அவர் அனாதை பெண்ணான ஸ்ரீபிரியாவை அழைத்து வந்து அவரிடம் சம்மதம் பெற்று தாய்மை அடைய வைக்கிறார்.

தான் சுமக்கும் குழந்தை யாருடையது என்று தெரியாமலேயே ஸ்ரீபிரியா அந்த குழந்தையை சுமந்து வரும் நிலையில்தான் ஒரு கட்டத்தில் அது யாருடைய குழந்தை என்பது ஸ்ரீபிரியாவுக்கு தெரிய வருகிறது. இதனால் லட்சுமி பரபரப்பு அடைகிறார்.

‘எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்’.. 500 படங்கள் நடித்த ‘முதல் மரியாதை’ நடிகரை ஞாபகம் இருக்கின்றதா?

நீ எந்த காரணத்தைக் கொண்டும் என்னுடைய கணவனை சந்திக்க கூடாது என்று நிபந்தனை விதிக்கிறார். ஆனால் சிவகுமார் மற்றும் ஸ்ரீபிரியா இருவரும் போனில் பேசிக் கொள்கின்றனர். அப்பொழுது அவர்கள் இருவருக்கும் இடையே ஒரு ஈர்ப்பு வருகிறது. அதன் பின்னர் என்ன ஆனது? ஸ்ரீபிரியா குழந்தையை பெற்றுக் கொடுத்தாரா என்பதுதான் இந்த படத்தின் கிளைமாக்ஸ்.

இந்த படத்தில் லட்சுமி மற்றும் ஸ்ரீபிரியா ஆகிய இருவருக்கும்தான் முக்கிய கேரக்டர்கள். இருவரும் போட்டி போட்டுக் கொண்டு நடித்தார்கள். லட்சுமி ஒரு அபாரமான நடிகை, அவர் நடிக்கும் படத்தில் நடித்தால் நீ காணாமல் போய்விடுவாய் என்று ஸ்ரீபிரியாவிடம் பலர் கூறினார்கள்.

ஆனால் தன்னாலும் லட்சுமிக்கு இணையாக நடிக்க முடியும் என்று சவாலுடன் இந்த கேரக்டரில் ஸ்ரீபிரியா நடித்திருந்தார். அவரது கேரக்டருக்கு தான் பாராட்டுக்கள் குவிந்தது.

avan aval adhu1

இந்த படத்தின் படப்பிடிப்பின்போது லட்சுமி, ஸ்ரீபிரியா மற்றும் மனோரமா ஆகிய மூவரும் நெருங்கிய தோழிகள் ஆகிவிட்டனர். இவர்கள் படப்பிடிப்பின் போது செய்த அரட்டை காரணமாக முக்தா சீனிவாசன் ஒரு கட்டத்தில் வெறுத்து, ‘இனிமேல் உங்கள் மூவரையும் வைத்து படம் எடுக்க மாட்டேன்’ என்று கோபமாக திட்டினாராம். ‘அவருடைய சாபமா என்னமோ தெரியவில்லை, அதன் பிறகு நாங்கள் மூவரும் சேர்ந்து நடிக்கவே இல்லை’ என சமீபத்தில் ஸ்ரீபிரியா ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

மொத்தத்தில் நெருப்பில் நடக்கிற மாதிரி ஒரு கதையை தேர்வு செய்து அந்த கதையை மிகச் சிறப்பாக கையாண்டு வெற்றி பெற்றார் முக்தா சீனிவாசன். இந்த படம் வெளியானபோது ஊடகங்கள் இந்த படத்தை கொண்டாடின. ஒரு சிக்கலான கதையை இவ்வளவு அருமையாக வேறு யாராலும் எடுக்க முடியாது என்று விமர்சனங்கள் எழுதினர்.

அட்டர் பிளாப் ஆன படத்தை மீண்டும் எடுத்து சில்வர் ஜூப்ளி ஹிட்டாக்கிய விசு.. என்ன படம் தெரியுமா?

இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். அவர் கம்போஸ் செய்த நான்கு பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின. குறிப்பாக, ‘இல்லம் சங்கீதம் அதில்’ என்ற பாடல் இன்று வரை பிரபலமாக இருக்கிறது.