நீங்களே அவரை இப்படி பேசலாமா.. தனுஷை மறைமுகமாக தாக்கிய SK.. பழைய வீடியோவை பகிர்ந்து எமோஷனல் ஆன ரசிகர்கள்..

Published:

நடிகர் சூரி பெரும்பாலும் இதுவரை காமெடி கதாபாத்திரங்களில் அதிகம் நடித்து வந்த சூழலில், தற்போது முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார். அந்த வகையில் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தில் முன்னணி நாயகனாக நடித்திருந்த சூரி, அடுத்ததாக கருடன் திரைப்படத்திலும் ஒரு சிறந்த கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்திருந்தார்.

இந்த படங்கள் அடுத்தடுத்து வெற்றியை பெற்ற நிலையில் தொடர்ந்து ஹீரோ அல்லது முக்கிய கதாபாத்திரங்களை தேர்வு செய்தும் சூரி நடித்து வருகிறார். அந்த வகையில் அடுத்ததாக சூரியின் நடிப்பில் கொட்டுக்காளி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. கூழாங்கல் திரைப்படத்தை இயக்கிய பி.எஸ். வினோத் ராஜ் இந்த திரைப்படத்தையும் இயக்கி உள்ளார். சூரி, அன்னா பென் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளையும் வென்றிருந்த நிலையில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி திரையரங்கிலும் வெளியாக உள்ளது. சூரியின் கதாபாத்திரம் பெரிய அளவில் ட்ரெய்லர் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளதால் திரைப்படமும் பரவலாக பேசப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி ஒரு சூழலில் கொட்டுக்காளி திரைப்படத்தை தயாரித்த நடிகர் சிவகார்த்திகேயன் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் தெரிவித்த கருத்து ஒன்று தற்போது அதிகம் சர்ச்சையாகி உள்ளது. விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு மூலம் கவனம் ஈர்த்த சிவகார்த்திகேயன், அதன் பின்னர் ஆங்கராக மாறியதுடன் மெரினா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து தனுஷின் 3 படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்த சிவகார்த்திகேயன், அதே தனுஷ் தயாரிப்பில் எதிர்நீச்சல் என்ற திரைப்படத்திலும் நடித்து முன்னணி நடிகராக குறுகிய காலத்தில் உயர்ந்திருந்தார். இதனைத் தொடர்ந்து மெல்ல மெல்ல உயர்ந்து தற்போது டாப் இடத்திலும் இருக்கும் சிவகார்த்திகேயன், நிறைய படங்களையும் தயாரித்து வருகிறார்.

நல்ல உயரத்தில் இருந்தாலும் தனுஷ் தான் அவரை அறிமுகப்படுத்தினார் என ஒரு கருத்து பரவலாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே, இது பற்றி மறைமுகமாக பேசிய சிவகார்த்திகேயன், “யாரையும் கண்டுபிடித்து இவர்களுக்கு வாழ்க்கை கொடுத்தேன் என்றும் இவர்களை நான் தான் தயார் செய்தேன் என்றும் சொல்ல மாட்டேன்.

என்னை அப்படி சொல்லி சொல்லியே பழக்கி விட்டார்கள். ஆனால் நான் அப்படிப்பட்டவன் கிடையாது” என சிவகார்த்திகேயன் கூறி உள்ளார். மேடையில் சிவகார்த்திகேயன் பேசியது தனுஷை மறைமுகமாக தாக்குவதாகவும் ரசிகர்கள் குறிப்பிட்டு வந்தனர்.

சிவகார்த்திகேயன் கூறுவது போல மற்ற பிரபலங்கள், சிவகார்த்திகேயனை வளர்த்து விட்டது தனுஷ் தான் என கூறினாலும் ஒரு போதும் தனுஷே அப்படி சொன்னதில்லை. ஆனால், தன்னை எதிர்நீச்சல் மூலம் பிரபலம் ஆக்கியது தனுஷ் தான் என சிவகார்த்திகேயனே ஒரு மேடையில் பேசி உள்ளார். அது மட்டுமில்லாமல், வருங்காலத்தில் சூப்பர் ஸ்டாராக வரும் தகுதி சிவகார்த்திகேயனிடம் இருப்பதாக தனுஷ் தன்னிடம் கூறியதை வெற்றிமாறன் ஒருமுறை தெரிவித்திருந்தார்.

இப்படி நல்ல எண்ணம் படைத்த தனுஷை மறைமுகமாக சிவகார்த்திகேயன் கூறியது ஒரு மிதப்பில் தான் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

மேலும் உங்களுக்காக...