புரட்சித்தலைவர் எம்ஜிஆருடைய பல படங்களில் நடித்திருந்தாலும், நடிகர் திலகம் சிவாஜியின் மீதும் மிகுந்த மரியாதையும் அன்பும் வைத்திருந்தார் தேங்காய் சீனிவாசன். அதனால் தான் அவருடனும் நிறைய படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
ஒரு சில படங்களில் சிவாஜியோடு நடிக்கக்கூடிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்தாலும் சிவாஜியைச் சுற்றியுள்ள சில நபர்கள் அவரைக் குழப்பி விட்டனர். இதன் காரணமாக அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
அதனால் அவருடன் தொடர்ந்து நடிக்க முடியவில்லை. இதைவிட அவருடன் தொடர்ந்து நட்பாக இருக்க முடியவில்லையே என்ற ஏக்கம் தான் என் மனதை வாட்டியது. அப்படிப்பட்ட சூழலில் எங்களுக்குள் இருந்த கருத்து வேறுபாட்டை அடியோடு அகற்றி இருவரையும் சேர்த்து வைத்த பெருமைன்னா முக்தா சீனிவாசனையேச் சேரும்.
அதன்பிறகு சிவாஜியுடன் பல படங்களில் சேர்ந்து நடிக்கிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதற்கு எல்லாம் காரணமாக இருந்த முக்தா சீனிவாசனுக்குத் தான் நன்றி சொல்லிக் கொண்டு இருந்தேன் என ஒரு பத்திரிகை பேட்டியிலே தேங்காய் சீனிவாசன் கூறியுள்ளார்.
தேங்காய் சீனிவாசனின் இயற்பெயர் சீனிவாசன். இவர் கல் மனம் என்ற நாடகத்தில் தேங்காய் வியாபாரியாக நடித்துப் புகழ் பெற்றதால் தேங்காய் சீனிவாசன் என்று அழைக்கப்பட்டார்.
அதுவும் அப்போது அந்த நாடகத்தைப் பார்க்க நகைச்சுவை நடிகர் கே.ஏ.தங்கவேலு வந்துள்ளார். அவர் இவரது கதாபாத்திரத்தைப் பார்த்ததும் தேங்காய் சீனிவாசன் என்றே அனைவரும் இவரை அழைக்க வேண்டும் என்று கூறினார். அன்று முதல் இந்தப் பெயரே இவருக்கு நிலைத்துவிட்டது. பெயர் ராசியோ என்னவோ மனிதர் காமெடியில் பிச்சி உதறுகிறார்.
இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம். இவரது தந்தை பெயர் ராஜவேல் முதலியார். தாயார் பெயர் சுப்பம்மாள். தந்தை நாடக எழுத்தாளர், நடிகர் என பன்முகத்திறன் கொண்டவராக இருந்தார். அவரைப் போலவே தானும் வர வேண்டும் என்ற எண்ணத்தில் பல நாடகங்களில் தேங்காய் சீனிவாசன் நடித்தார்.
தந்தை எழுதிய கலாட்டா கல்யாணம் என்ற மேடை நாடகத்தில் அறிமுகமானார். இவர் நடிப்பில் உதயகீதம், கை கொடுக்கும் கை, தங்கமகன், தில்லுமுல்லு, கழுகு, பில்லா, ஆறிலிருந்து அறுபது வரை, தர்மயுத்தம், தியாகம், பல்லாண்டு வாழ்க, காசே தான் கடவுளடா ஆகிய படங்கள் மறக்க முடியாதவை.
கண்ணை உருட்டிக்கொண்டு இவர் திரு திருவென விழித்த படி பேசும்போது சிரிப்பே வராதவர்களும் களுக்கென்று வாய்விட்டுச் சிரித்து விடுவார்கள்.