எஸ்.பி.பி வராத காரணத்தால் கிட்டிய வாய்ப்பு.. மேடைப் பாடகர் மலேசியா வாசுதேவன் பின்னணிப் பாடகராக மாறிய நிகழ்வு!

Published:

தமிழ் சினிமாவில் டி.எம். சௌந்தரராஜன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், யேசுதாஸ் என புகழ்பெற்ற பாடர்கள் அனைத்து படங்களையும் தங்களது குரல் வளத்தால் ஆட்சி செய்ய அவர்களுக்கு மாற்றாக தனது அடிநாதக் குரலில் ரசிகர்களைக் கவர்ந்தவர்தான் மலேசியா வாசுதேவன். ரஜினியின் புகழ்பெற்ற பல பாடல்களைப் பாடிய குரலுக்குச் சொந்தக்காரர்.

மலேசிய நாட்டில் தமிழ்க்குழு ஒன்றில் பாடியும், மேடை நாடகங்களிலும் நடித்து வந்த வாசுதேவன் சென்னை வந்து இளையராஜாவின் குழுவில் இணைந்து மேடைப் பாடகராக அறிமுகமானார். ஒருமுறை 16 வயதினிலே படப்பிடிப்பில் ஆட்டுக்குட்டி முட்டையிட்டு என்ற பாடலைப் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடுவதாக இருந்தது. திடீரென அவருக்கு உடல் நலம் குன்ற இளையராஜா அப்போது மலேசியா வாசுதேவனை பாட வைத்திருக்கிறார்.

அந்தப் பாடல் ஹிட் ஆகி பட்டிதொட்டி எங்கும் ஒலிக்க மலேசியா வாசுதேவன் புகழ் பரவியது. ஆனால் அதற்கு முன்னர் ஜி. கே. வெங்கடேசு இசையமைப்பில் “பொல்லாத உலகில் ஒரு போராட்டம்” என்ற படத்தில் பாலு விக்கிற பத்தம்மா… என்ற பாடலில்தான் இவர் அறிமுகமானார்.

பலரது ரிங்டோனாக ஒலித்த சரவணன் மீனாட்சி ஏலோ.. ஏலேலோ பாடல்.. அடேங்கப்பா இந்த ஹிட் பாட்டெல்லாம் இவர் பாடியதா..!

தொடர்ந்து இளையராஜா இசையில் ஏராளமான பாடல்களைப் பாடி ரசிகர்களைக் கவர்ந்தார் மலேசியா வாசுதேவன். தொடர்ந்து கோடைகாலக் காற்றே, அள்ளித் தந்த பூமி, அடியாடு பூங்கொடியே, தங்கச் சங்கிலி எனப் பல பாடல்கள் புகழ் பெற்றன. மணிப்பூர் மாமியார் படத்தில் ஆனந்த பூங்காற்று, கன்னிராசியில் சுகராகமே பாடல்களை பழைய பாடல்களின் சாயலில் வித்தியாசமாக பாடியிருப்பார். கோழி கூவுது படத்தில் பூவே இளைய பூவே பாட்டுக்கு முன் அவர் பேசிய டயலாக் அந்த கால காதல் இளசுகளின் மனம் கவர்ந்த டயலாக்காக இருந்தது.

முரட்டுக் காளை படத்தில் வரும் ரஜினியின் ஓப்பனிங் பாடலான பொதுவாக எம்மனசு தங்கம் என்ற பாடலைப் பாடி தொடர்ந்து ரஜினிக்கு பல பாடல்களைப் பாடினார். மேலும் நடிப்பிலும் தீராத ஆர்வம் கொண்ட இவர் ஒரு கைதியின் டைரி படத்தில் வில்லனாக நடித்தார். அதன் பின்னர் பல படங்களில் நடிக்கவும் தொடங்கினார். கிட்டத்தட்ட 85 தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். முதல் வசந்தம், ஊர்க்காவலன், ஜல்லிக்கட்டு என வெற்றிப் படங்கள் பலவற்றில் வில்லனாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார். ஆனந்த் இயக்கிய “மலர்களிலே அவள் மல்லிகை” என்ற படத்திற்கு கதை, வசனம் எழுதினார்.

மலேசியா வாசுதேவன் 1980’களில் ஒரு சில தமிழ்த் திரைப்படங்களுக்கு இசையமைத்தார். குறிப்பாக சாமந்தி பூ, பாக்கு வெத்தலை மற்றும் ஆயிரம் கைகள் போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்தார். இவரது மகன் பிக்பாஸ் யுகேந்திரனும் பிரபல பின்னணிப் பாடகர் மற்றும் நடிகராக இருக்கிறார்.

மேலும் உங்களுக்காக...