தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளவர் டப்பிங் ஜானகி. அதுமட்டுமின்றி ஏராளமான சீரியல்களிலும் நடித்துள்ளார். இது தவிர தனது சினிமா பயணத்தின் ஆரம்ப காலத்தில் குரூப் டான்சராகவும் இருந்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த டப்பிங் ஜானகி ஒன்பது வயது முதல் நடிக்க தொடங்கிவிட்டார். முதலில் சின்னச்சின்ன கதாபாத்திரங்களில் நடித்த அவர் சில படங்களில் முக்கிய கேரக்டர்களிலும் நடித்தார். இது நம்ம ஆளு திரைப்படத்தில் நாயகி ஷோபனாவின் அம்மாவாக இவர் நடித்திருப்பார்.
அதே போல் ரஜினிகாந்த் நடித்த ராஜாதி ராஜா என்ற திரைப்படத்தில் ரஜினிக்கு அம்மாவாகவும் நடித்திருந்தார். டப்பிங் ஜானகி ஏற்றெடுக்கும் காதாபாத்திரங்கள் பெரும்பாலும் மிகவும் சாந்தமாகவும் அமைதியாகவும் சோகம் மற்றும் செண்டிமெண்ட் கலந்த வகையில் இருக்கும். அவரது அற்புதமான நடிப்பின் மூலமாக ரசிகர்களையும் எளிதில் கவர்ந்தார்.
விஜயகாந்துடன் என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான், அர்ஜுனின் ‘மனைவி ஒரு மாணிக்கம்’, பாக்யராஜ் நடித்த அவசர போலீஸ் 100, அரவிந்த்சாமி நடித்த மறுபடியும் உள்ளிட்ட பல படங்களில் நடித்த டப்பிங் ஜானகி, விக்ரமன் இயக்கத்தில் உருவான கோகுலம், விஜயகாந்த் நடித்த எங்க முதலாளி உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் நூற்றுக்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களிலும், கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.
திரை உலகில் அம்மா நடிகை என்றால் உடனே டப்பிங் ஜானகியை கூப்பிடு என்று கூறப்படும் நிலையில் அவர் ஒரு காலத்தில் இருந்தார். மேலும் இவருக்கு சின்னத்திரையிலும் ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தது. சன் டிவியில் ஒளிபரப்பான அக்சயா, புஷ்பாஞ்சலி ஆகிய தொடர்களில் நடித்த அவர் அதன் பிறகு சொர்க்கம், அத்திப்பூக்கள், சந்திரலேகா, பாசமலர், ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார். மேலும் தெலுங்கு சீரியல்களிலும் இன்னும் டப்பிங் ஜானகி நடித்து வருகிறார்.
நடிகை டப்பிங் ஜானகிக்கு இந்த பெயர் எப்படி வந்தது என்பது பற்றி சுவாரஸ்யமான பின்னணி உள்ளது. கடந்த 80-களில் சவுகார் ஜானகி மற்றும் பாடகி ஜானகி ஆகிய இருவரும் பிரபலமாக இருந்த நிலையில் இவருக்கு ஒரு பெயர் வைக்க வேண்டுமே என்பதற்காக முதல் பட இயக்குனர், டப்பிங் ஜானகி என்று அப்போது பெயர் வைத்தார். இவர் அதிக படங்களில் டப்பிங் செய்பவர் என்பதால் அந்த பெயர் இவருக்கு ஏற்பட்டது. பின்னாளில் அந்த பெயரே இவருக்கு நிரந்தரமாகவும் மாறிவிட்டது.
நடிகை டப்பிங் ஜானகி, ராமகிருஷ்ணன் என்ற ராணுவ வீரரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய கணவர் கடந்த 1997 ஆம் ஆண்டு காலமான நிலையில் தற்போது தனது குழந்தைகளுடன் அவர் சென்னையில் வசித்து வருகிறார். இன்றும் கூட அவர் டப்பிங் செய்து வருவதுடன் சின்ன சின்ன கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.