ஒரு மொழியில் சூப்பர் ஹிட்டான படங்களை இன்னொரு மொழியில் ரீமேக் செய்வது என்பது பல ஆண்டுகளாக நடந்து வரும் ஒரு முயற்சி என்பதும் இவ்வாறாக ரீமேக் செய்யும் படங்கள் பெரும்பாலும் வெற்றி பெறும் என்பதும் தெரிந்ததே. அந்த வகையில்தான் தெலுங்கில் சூப்பர் ஹிட்டாகி 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடிய ஒரு படத்தை தமிழில் ரஜினிகாந்த்தை வைத்து ரீமேக் செய்ய அந்த படம் படுதோல்வி அடைந்தது என்பது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அந்த படம் தான் அதிசய பிறவி.
கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான இந்த படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கியிருந்தார். பஞ்சு அருணாசலம் திரைக்கதை எழுதியிருந்தார்.
ரஜினிகாந்த், கனகா, பாலிவுட் நடிகை ஷீபா, சோ.ராமசாமி, நாகேஷ், விஜயலலிதா, வி.கே.ராமசாமி, வினுசக்கரவர்த்தி உள்பட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். இளையராஜா இசையில் 5 பாடல்கள் இந்த படத்தில் இடம்பெற்றிருந்தன. ஐந்து பாடல்களையும் மலேசியா வாசுதேவன் பாடியிருந்தார்.

இந்த படம் வெளியான முதல் நாளே நெகட்டிவ் விமர்சனங்கள் குவிய ஆரம்பித்தன. இந்த படம் தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆனதால் தமிழிலும் நிச்சயம் ஹிட் ஆகும் என்று எஸ்.பி.முத்துராமன் மற்றும் பஞ்சு அருணாசலம் நம்பிக்கையுடன் இருந்தனர். இந்த படத்திற்காக பார்த்து பார்த்து இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். ஆனால் இந்த படம் படுதோல்வி அடைந்தது எஸ்.பி.முத்துராமனைவிட பஞ்சு அருணாச்சலம் மற்றும் இளையராஜாவுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
இந்த படத்தை முன்னணி ஊடகங்கள் படுமோசமாக விமர்சனம் செய்தன. பகுத்தறிவை கழட்டி வைத்துவிட்டு பாட்டி கதையை கேட்பதுபோல் கதை இருக்கிறது என்று ஒரு முன்னணி பத்திரிகை தெரிவித்து இருந்தது.

இந்த படத்தின் கதை என்று பார்த்தால் எமலோகத்தில் ஒரு நபரை அழைத்து வருவதற்கு பதிலாக ரஜினியை அழைத்து வந்து விடுவார்கள். அப்போது ஆள் மாறிவிட்டது என சித்திரகுப்தன் கூற ரஜினி உடனே எமன் மற்றும் சித்ரகுப்தனிடம் சண்டை போடுவார். அவரை திருப்பி பூவுலகத்திற்கு அனுப்பலாம் என்று முடிவு செய்தபோது அவருடைய உடல் எரிக்கப்பட்டு விடும். இதனை அடுத்து எனக்கு என் உடம்புதான் வேண்டும் என்று ரஜினி அடம் பிடிப்பார், அவரை சமாதானப்படுத்த ரம்பையை விட்டு எல்லாம் ஆட வைப்பார்கள்.
இதனை அடுத்து ரஜினி போன்று இருக்கும் ஒருவரது உடலில் மீண்டும் அவரை அனுப்பி வைப்பார்கள். ஏற்கனவே இருந்த ரஜினி கோழையாக இருந்த நிலையில் இப்போது இருக்கும் ரஜினி வீரராக மாறிவிடுவார். ஏற்கனவே இருந்த ரஜினிக்கு ஒரு காதலி இருக்கும் நிலையில் புது ரஜினிக்கு இன்னொரு காதலி வருவார். இவ்வாறாக பெரும் குழப்பத்துடன் திரைக்கதை அமைந்திருக்கும் நிலையில் இந்த படத்தின் முடிவு சுபமாக இருக்கும்.
ரஜினியின் ‘ஜானி’: இரட்டை வேடம் என்றாலே ஆள்மாறாட்ட கதை தான்.. ஆனால் இந்த படம் வித்தியாசமானது..!
இந்த படத்தில் இடம்பெற்ற ஒரே ஆறுதல் சோ நடிப்பு மட்டுமே. பூலோகத்தில் இருந்து எமதர்மராஜாவிடம் வருபவர்கள் என்ன குற்றம் செய்தார் என்பதை சோ விவரிப்பார். குறிப்பாக அரசியல்வாதிகள் வரும்போது அவர்கள் செய்த குற்றங்களை நக்கலாகவும் கேலியாகவும் எடுத்துக்கூறி கூடுதல் தண்டனை வாங்கி கொடுப்பார். அவர் பேசிய பல வசனங்கள் சென்சாரில் கட் செய்யப்பட்டன. அப்படி இருந்தும் அவர் பேசிய வசனங்கள் அந்த கால அரசியலுடன் தொடர்புடையதாக இருந்ததால் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

அதேபோல் எமதர்மராஜனாக கச்சிதமாக வினு சக்கரவர்த்தி நடித்திருப்பார். இந்த இரண்டை தவிர இந்த படத்தில் எந்தவிதமான பாசிட்டிவ்வும் இல்லை என்பதால் இந்த படம் படுதோல்வி அடைந்தது.
கால் நூற்றாண்டுக்கும் மேலாக ரசிகர்கள் மனதில் இருக்கும் ‘பாட்ஷா’: இனிமேல் இப்படி ஒரு படம் வருமா?
அதன் பிறகுதான் எஸ்.பி.முத்துராமன் அண்டை மாநிலமாக இருந்தாலும் ரசனையில் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் முற்றிலும் மாறுபட்டு உள்ளனர் என்பதை புரிந்து கொண்டார். அதன் பிறகு அவர் படங்களை ரீமேக் செய்யும் போது மிகவும் கவனத்துடன் இருந்தார் என்பதும் தமிழுக்கு ஏற்றவாறு பல மாற்றங்களை செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
