தமிழகத் திரையுலகில் தற்போது அரங்கேறி வரும் நிகழ்வுகள், ‘திரையுலக ஒற்றுமை’ என்பது வெறும் மேடை பேச்சோடு நின்றுவிடுகிறதோ என்ற சந்தேகத்தை வலுக்க செய்துள்ளன. நடிகர் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ திரைப்படம் வெளியான சில தினங்களிலேயே வசூல் ரீதியாக சரிவைச் சந்தித்தாலும், அதற்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற உச்ச நட்சத்திரங்கள் வலிய சென்று பாராட்டு தெரிவித்துள்ளனர். குறிப்பாக, ரஜினிகாந்த் இப்படத்தின் இரண்டாம் பாதியை பாராட்டியதும், கமல் ஐந்து நிமிடங்கள் தொலைபேசியில் பேசியதும் செய்திகளாகின. ஆனால், அதே சமயம் நடிகர் விஜய்யின் கடைசி படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ தணிக்கை சிக்கல்களால் தள்ளிப்போன போது, திரையுலகின் முக்கிய தூண்கள் மௌனம் காப்பது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஜனவரி 9-ஆம் தேதி வெளியாக வேண்டிய சூழலில், சென்சார் போர்டின் பிடிவாதத்தால் காலவரையறையின்றி தள்ளிப்போயுள்ளது. இது ஒரு தனிப்பட்ட நடிகரின் பிரச்சனை என்பதை தாண்டி, கருத்து சுதந்திரம் மற்றும் திரையுலகின் வணிகம் சார்ந்த பிரச்சனையாக பார்க்கப்பட வேண்டும். ஆனால், ஆளும் கட்சியின் ஆதரவான படத்திற்கு தேடி சென்று ஆதரவு தரும் மூத்த நடிகர்கள், விஜய்யின் படத்திற்கு ஏற்பட்ட இந்த அரசியல் மற்றும் சட்ட ரீதியான முட்டுக்கட்டைகள் குறித்து வாய் திறக்காதது ஏன் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் உரக்க ஒலிக்கிறது. இது பயமா அல்லது திட்டமிட்ட வன்மமா என்ற ரீதியில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
சூர்யா, தனுஷ், விஷால் போன்ற முன்னணி நடிகர்கள் எப்போதும் சமூக பிரச்சனைகளுக்காகவும், திரையுலக நலனுக்காகவும் குரல் கொடுப்பவர்களாக தங்களை காட்டிக்கொள்பவர்கள். குறிப்பாக, விஷால் போன்றவர்கள் தயாரிப்பாளர் சங்கத்தின் முக்கிய பொறுப்புகளில் இருந்தும், ஒரு உச்ச நட்சத்திரத்தின் படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கு நேர்ந்த அநீதியை கண்டு அமைதி காப்பது ஆச்சரியமளிக்கிறது. சிவகார்த்திகேயனை பாராட்டுவதில் எந்த தவறும் இல்லை என்றாலும், ஒரு சக போட்டியாளருக்கு அல்லது சக நடிகருக்கு பிரச்சனை வரும்போது பாரபட்சம் காட்டுவது திரையுலகில் நிலவும் ‘குழு அரசியலை’ வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
இதற்கு பின்னால் அரசியல் காரணங்கள் இருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை தொடங்கி முழுநேர அரசியலில் இறங்க போவதால், அவருக்கு ஆதரவு தெரிவிப்பது ஆளுங்கட்சியின் கோபத்திற்கு ஆளாக நேரிடுமோ என்ற அச்சம் பல நடிகர்களிடம் இருக்கலாம். ‘பராசக்தி’ ஒரு சமூக அக்கறை கொண்ட படமாக பார்க்கப்படுவதால் அதை பாராட்டுவதில் யாருக்கும் சிக்கல் இல்லை. ஆனால், அரசியல் ரீதியாக பலமான ஒரு சக்தியாக உருவெடுத்துள்ள விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுப்பது தங்களின் திரைப்பயணத்தை பாதிக்குமோ என்று இவர்கள் அஞ்சுவதாக தெரிகிறது.
மறுபுறம், ராகுல் காந்தி போன்ற தேசிய தலைவர்கள் ‘ஜனநாயகன்’ தாமதத்திற்கு தங்களின் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். ஒரு தேசிய தலைவருக்குத் தெரியும் அநீதி, விஜய்யுடன் பல படங்களில் நடித்த சக நடிகர்களுக்குத் தெரியாமல் போனது முரணாக உள்ளது. விஜய்யின் வளர்ச்சி திரையுலகில் சிலருக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் அல்லது அவரது அரசியல் வருகை மற்றவர்களின் அரசியல் அபிலாஷைகளை தகர்க்கலாம் என்ற வன்மமும் இந்த புறக்கணிப்பிற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என விவாதிக்கப்படுகிறது.
இறுதியாக, திரையுலகம் என்பது ஒரு குடும்பம் என்று சொல்லிக்கொள்ளும் இக்கூற்று, இக்கட்டான நேரங்களில் மட்டுமே உண்மையாக இருக்க வேண்டும். வெற்றிகளை கொண்டாடுவதை விட, ஒரு கலைஞன் நெருக்கடிக்கு ஆளாகும்போது கரம் கொடுப்பதே உண்மையான ஒற்றுமை. ரஜினி முதல் விஷால் வரை அனைவரும் இந்த மௌனத்தை கலைக்காத வரை, தமிழக சினிமா ரசிகர்கள் மத்தியில் இவர்களை பற்றிய பிம்பம் கேள்விக்குறியாகவே இருக்கும். “மாற்றம் என்பது வெறும் சொல் அல்ல, அது செயல்” என்பது விஜய்க்கு மட்டுமல்ல, அவரை புறக்கணிக்கும் சக நடிகர்களுக்கும் பொருந்தும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
