இயக்குனர் ராதாபாரதியின் ‘வைகாசி பொறந்தாச்சு’ படத்தின் கதாநாயகனாக அறிமுகமானார் பிரசாந்த். அப்போது அவருக்கு 17 வயது. அந்த வயதிற்கான துடிப்புடன் காணப்பட்ட பிரசாந்திற்கு அதற்கேற்றார் போல கதாபாத்திரங்கள் கிடைத்து.
பிரசாந்த் தமிழில் நடித்த இரண்டாவது படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. அந்தப்படம் பாலுமகேந்திர இயக்கிய ‘வண்ண வண்ண பூக்கள்’. அதன்பின் அவர் நடித்த ‘செம்பருத்தி’ கிளாசிக் ஹிட் படமாக அமைந்தது.
‘செம்பருத்தி’ படம் நடிகை ரோஜாவிற்கு முதல் தமிழ் படமாக அமைந்தது. ஆர்.கே செல்வமணி இயக்கிய அப்படம் பிரசாந்த் மற்றும் ரோஜா இருவருக்குமே முக்கிய படமாக அமைந்தது.
தெலுங்கு படங்களிலும் நடித்து வந்த பிரசாந்த், ‘திருடா திருடா’ படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான நடிகரானார். மணிரத்தினம் மற்றும் ராம் கோபால் வர்மாவின் கதையைமப்பில் படம் பெரும் வெற்றி பெற்றது.
பிரசாந்த் மூத்த நடிகை கே.ஆர்.விஜயாவுடன் இணைந்து நடித்தப்படம் ‘ஆணழகன்’. அதில் வடிவேலு, சார்லி, சின்னி ஜெயந்த் என காமெடிக்கு பஞ்சமில்லாத கூட்டணி. இவர்களுடன் பிரசாந்த் ஹீரோவாக நடித்திருப்பார்.
பிரசாந்த் பெண் வேடமணிந்து வரும் காட்சிகளுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அஜித்துடன் இணைந்து பிரசாந்த் ‘கல்லூரி வாசல்’ எனும் படத்தில் நடித்தார். இந்தப்படத்தை பல வெற்றிப்படங்களை கொடுத்த பவித்ரன் இயக்கி இருந்தார்.
பிரசாந்தின் சினிமா பயணத்தில் மிக முக்கிய படம் ‘ஜீன்ஸ்’. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய அப்படத்தில் பிரசாந்த் மற்றும் நாசர் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார்கள். மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படம் இன்றும் ரசிக்கும் வகையில் இருக்கும்.
அதன் பின், கண்ணெதிரே தோன்றினால், பூமகள் ஊர்வலம், ஜோடி, ஆசையில் ஓர் கடிதம், அப்பு, பிரியாத வரம் வேண்டும், சாக்லேட், மஜ்னு, தமிழ் என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து சாக்லேட் பாயாக வலம் வந்தார் பிரசாந்த். வின்னர் படத்திற்கு பிறகு அவர் நடித்த அனைத்து படங்களுமே தொடர் தோல்வியை சந்திக்க ஆரம்பித்தது.
விஜய், அஜித், இருவருக்கும் போட்டியாக இருந்தவர் பிரசாந்த். ஆனால் காலப்போக்கில் இருந்த இடமே தெரியாமல் போனார். சொந்த பிரச்சனைகளின் காரணமாக சினிமாவில் சரியாக கவனம் செலுத்த முடியாமல் போன பிரசாந்த் நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு சில படங்களில் நடித்து வந்தார்.
தமிழில் ஹிந்தி படம் ஒன்றின் ரீமேக்கான ‘அந்தகன்’-ல் நடித்து வந்தார். படத்தின் போஸ்டர் மட்டுமே தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்த நிலையில், படம் கிடப்பில் போடப்பட்டது. மீண்டும் திரையில் பிரசாந்தை பார்க்கலாம் என நினைத்த அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக போனது.
இந்நிலையில், வெங்கட்பிரபு இயக்கும் ‘தளபதி68’ படத்தில் பிரசாந்த் நடிக்க போகிறார் என்ற தகவல் வந்ததும் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ‘தளபதி 68’ பிரசாந்திற்கு கம்பேக் படமாக இருக்குமா? என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.