புரட்சித் தலைவர் எம்ஜிஆரை வைத்து பல இயக்குனர்கள் அந்த காலத்தில் படம் எடுக்க போட்டி போட்டுக் கொண்ட சூழலில், ஒரு இயக்குனர் தொடர்ச்சியாக 15 படங்களை இயக்கினார் என்றதும் அதனை நம்ப முடியாமல் தான் போகும். ஆனால் ஒரு பிரபல இயக்குனர் உண்மையிலேயே அப்படி ஒரு சாதனை படைத்துள்ளார்.
தமிழ் திரை உலகின் பழம்பெரும் இயக்குனர் ப. நீலகண்டன். 1916 ஆம் ஆண்டு விழுப்புரம் பகுதியில் பிறந்தவர். 1948 ஆம் ஆண்டு ’வேதாள உலகம்’ என்ற திரைப்படத்திற்காக கதை, வசனம் எழுதுவதற்காக சினிமாவிற்குள் நுழைந்தார். அதன் பிறகு 1951 ஆம் ஆண்டு ’ஓர் இரவு’ என்ற படத்தின் மூலம் இயக்குனர் ஆகவும் அறிமுகமானார். அறிஞர் அண்ணாவின் கதை, வசனத்தில் உருவான இந்த படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்தது. இந்த படத்தில் கே. ராமசாமி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
முதல் படமே வெற்றி படமானதை அடுத்து அவர் இரண்டாவது திரைப்படத்தில் சிவாஜி கணேசன் நடித்த ’கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’ என்ற படம் வெளியானது. டி ஆர் ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், பத்மினி, ராகினி உள்ளிட்டோர் நடித்த இந்த படம் முழுக்க முழுக்க ஒரு காமெடி கதையம்சம் கொண்ட வகையில் அமைந்திருந்தது. மீண்டும் சிவாஜியை வைத்து ’முதல் தேதி’ என்ற படத்தை நீலகண்டன் இயக்கி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து கோமதி என்ற படத்தை இயக்கி இருந்த நீலகண்டன், அடுத்ததாக தான் எம்ஜிஆர் பக்கம் திரும்பினார். எம்.ஜி.ஆர் நடித்த ’சக்கரவர்த்தி திருமகள்’ என்ற படத்தை இயக்கிய ப. நீலகண்டன் அந்த படத்தை மிகப்பெரிய வெற்றி படமாக்கினார். இந்த படத்தில் அஞ்சலிதேவி மற்றும் எஸ் வரலட்சுமி ஆகியோர் நாயகிகளாக நடித்திருந்தனர்.
எம்ஜிஆர், சிவாஜி படங்களை ஒரு கட்டத்தில் அவர் மாறி மாறி இயக்கி வந்தார். சிவாஜி நடித்த ’அம்பிகாபதி’ ’சபாஷ் மீனா’ ஆகிய படங்களை இயக்கியவர் எம்ஜிஆர் நடித்த ’திருடாதே’ என்ற படத்தை இயக்கினார். அதன் பிறகு மீண்டும் எம்ஜிஆர் நடித்த ’நல்லவன் வாழ்வான்’ என்ற படத்தையும் இயக்கினார். இதனையடுத்து கலைஞரின் கதை, வசனத்தில் உருவான ’பூம்புகார்’ என்ற படத்தை இயக்கினார்.
முரசொலி மாறன் தயாரிப்பில் உருவான ’பூமாலை’ என்ற படத்தை இயக்கிய ப. நீலகண்டன், அதன் பிறகு ’ஆனந்தி’ ’அவன் பித்தனா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய பிறகு அவர் முழுக்க முழுக்க எம்ஜிஆர் இயக்குனராக மாறிவிட்டார். கடந்த 1967 ஆம் ஆண்டு எம்ஜிஆர், ஜெயலலிதா நடித்த ’காவல்காரன்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். அந்த படத்தை அடுத்து அவர் தொடர்ச்சியாக எம் ஜி ஆர் படங்களை மட்டுமே இயக்கி வந்தார்.
’கண்ணன் என் காதலன்’ ’கணவன்’ ’மாட்டுக்கார வேலன்’ ’என் அண்ணன்’ ’குமரிக்கோட்டம்’ ’நீரும் நெருப்பும்’ ’ஒரு தாய் மக்கள்’ ’சங்கே முழங்கு’ ’ராமன் தேடிய சீதை’ ஆகிய படங்களை இயக்கினார். மேலும் எம்ஜிஆர் நடிப்பில் உருவான ’உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படத்தில் கதை விவாதத்தில் கலந்து கொண்டார் நீலகண்டன்.
அதன் பிறகு ’நேற்று இன்று நாளை’ ’நினைத்ததை முடிப்பவன்’ ’நீதிக்கு தலைவணங்கு’ ஆகிய படங்களை இயக்கியவர் ’மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தில் அவர் எம்ஜிஆர் வசனகர்த்தாவாக பணியாற்றினார். எம்ஜிஆரின் கடைசி திரைப்படமான ’மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்திற்கு பிறகு அவர் கிட்டத்தட்ட திரையுலகில் இருந்து வெளியேறிவிட்டார் என்று கூறலாம்.
எம்ஜிஆர், சிவாஜி உட்பட பல பிரபலங்களை இயக்கிய ப நீலகண்டன், கடந்த 1992 ஆம் ஆண்டு தனது 75வது வயதில் காலமானார். தமிழ் மட்டுமின்றி ஒரு சில கன்னட படங்களையும் இயக்கி உள்ளார் என்பதும் ஒரே ஒரு சிங்கள மொழி படத்தையும் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக எம்ஜிஆரின் 15 படங்களை இயக்கி சாதனை புரிந்த ப நீலகண்டன் பெயர் தமிழ் திரையுலகம் இருக்கும் வரை ஜொலிக்கும்.