’ஒரு தலை ராகம்’ என்ற திரைப்படம் வருவதற்கு முன்பாக கல்லூரி காட்சிகள் என்றாலே 40 வயதில் உள்ள ஹீரோக்கள் தான் நடிக்கும் கொடுமை இருந்தது. ஆனால் முதல் முறையாக கல்லூரி மாணவர்கள் வயதிலேயே நடித்தவர்கள் நடித்த திரைப்படம் தான் ’ஒரு தலை ராகம்’ என்பதும் இந்த படத்தின் வெற்றிக்கு இதுதான் முதல் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1980ஆம் ஆண்டு மே இரண்டாம் தேதி ஒரு தலை ராகம் திரைப்படம் ரிலீஸ் ஆனது. முதலில் ஒரு வாரம் இந்த படத்திற்கு எந்த பெரிய வரவேற்பும் இல்லை. ஆனால் இந்த படத்தின் பாடல்கள் ஹிட் ஆனதும், இந்த படத்தின் கிளைமாக்ஸ் மற்றும் கல்லூரி காட்சிகள் மக்கள் மத்தியில் பரவியதை அடுத்து கல்லூரி மாணவ, மாணவிகள் கூட்டம் கூட்டமாக இந்த படத்துக்கு குவிந்தனர்.

தமிழகத்தில் உள்ள பல திரையரங்குகளில் இந்த படம் 365 நாள்கள் ஓடி சாதனை செய்தது. இந்த படத்தை இயக்கியது டி.ராஜேந்தர் தான் என்றாலும் அவரது பெயர் டைட்டிலில் இருக்காது என்பதும் தயாரிப்பாளர் இப்ராஹிம் தான் இந்த படத்தை இயக்கியதாக குறிப்பிடப்பட்டிருந்தது என்பதும் பலர் அறியாத உண்மை.
சங்கர் மற்றும் ரூபா இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு பிறகு சங்கர் ஒரு தலை ராகம் சங்கர் என்றே அழைக்கப்பட்டார். எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி இந்த படத்தை முதல் நாள் முதல் காட்சியைப் பார்த்த ரசிகர்கள் ஒரு சில நிமிடங்களில் இந்த படம் புது மாதிரியான படம் என்பதை புரிந்து கொண்டார்கள்.

முதல் முதலாக தமிழ் திரை உலகில் கேமராவை எடுத்துக்கொண்டு வெளியே சென்று முழுக்க முழுக்க வெளிப்புற படப்பிடிப்பில் உருவான திரைப்படம் ’16 வயதினிலே’. அதே போல் முதல் முதலாக அச்சு அசலாக ஒரு கல்லூரியிலேயே கல்லூரி மாணவர்கள் வயதில் இருந்த நடிகர்களை வைத்து எடுக்கப்பட்ட படம் தான் ஒரு தலை ராகம்.
இதனால் தான் கல்லூரி மாணவர்கள் ’இது நம்ம காலேஜ் படம்’ என்று கூட்டம் கூட்டமாக சென்று பார்த்தார்கள். இந்த படத்தின் பாடல்கள் மற்றும் அருமையான காதல் காட்சிகள், கிளைமாக்ஸ் காட்சிகளுக்காகவே பொதுமக்களும் மிகப்பெரிய வரவேற்பு தந்தனர். இந்த படத்திற்கு பிறகு தான் முரளி நடித்த ’இதயம்’ உள்பட பல திரைப்படங்கள் காதலை மையமாகக் கொண்டு உருவானது.

இந்த படத்தின் கதையை பார்த்தால் கல்லூரி மாணவரான சங்கர் சக மாணவியான ரூபாவை காதலிப்பார். ஆனால் தனது குடும்ப சூழ்நிலை, ஆண்கள் மேல் இருக்கும் வெறுப்பு காரணமாக சங்கரை மனதிற்குள் விரும்பினாலும் அவர் வெளியே சொல்ல முடியாத நிலையில் இருப்பார். ஒரு கட்டத்தில் சங்கரின் காதலை ஏற்றுக் கொள்ள அவர் ரயிலில் சென்று கொண்டிருக்கும் சங்கரிடம் தெரிவிக்கும்போது சங்கர் உயிரிழந்திருப்பார். இப்படி ஒரு ஒன்லைன் கதையை மிக அருமையான திரைக்கதையுடன் உருவாக்கப்பட்ட படம் தான் ஒரு தலை ராகம்.
ஐபிஎஸ் கனவு.. ஆளுநர் மாளிகையில் வேலை.. ஏவிஎம் ராஜனின் வாழ்க்கையை திருப்பி போட்ட நிகழ்வு..!
இந்த படத்தின் வெற்றிக்கு இன்னொரு காரணம் இந்த படத்தின் பாடல்கள் என்று கூறலாம். ’வாசம் இல்லா மலர் இது’, ’கடவுள் வாழும் கோவில்’, ’கூடையில கருவாடு’, ’என் கதை முடியும் நேரம்’, ’இது குழந்தை பாடும் தாலாட்டு’, ’நான் ஒரு ராசியில்லா ராஜா’ போன்ற பாடல்கள் அப்போது மிகப் பெரிய அளவில் ஹிட்டானது. ஆனந்த விகடன் இந்த படத்திற்கு 50 மார்க் அளித்தது.
இந்த படத்தை முதலில் எந்த விநியோகஸ்தரும் வாங்காததால் தயாரிப்பாளர் இப்ராஹிம் சொந்தமாக தமிழ்நாடு முழுவதும் ரிலீஸ் செய்தார். அதனால் அவருக்கு இந்த படம் மூலம் மிகப்பெரிய லாபம் கிடைத்தது என்பது மட்டுமின்றி தெலுங்கிலும் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டது.
முதல் படத்தில் சம்பளம் வெறும் 10 ரூபாய்.. இன்று ரூ.65 கோடி மதிப்பு சொத்து.. யார் இந்த நடிகை..!
முதல் முதலாக ஒரு இயல்பான காதல் திரைப்படத்தை திரையில் பார்த்து ரசிகர்கள் கொண்டாடிய படம் தான் ’ஒரு தலை ராகம்’ என்பது குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
