முதன் முதலாக வெளிப்புற படப்பிடிப்பு என்ற டிரெண்டை கொண்டு வந்தவர் பாரதிராஜா என்றால் தமிழ் சினிமாவில் முதன் முதலாக சினிமாஸ்கோப் என்ற டிரெண்டை கொண்டு வந்தவர் பிலிம் இன்ஸ்டியூட் மாணவரான அரவிந்தராஜ் ஆவார்.
இந்த படத்திற்கு முன்பே ‘ராஜராஜ சோழன்’, ‘அலாவுதினும் அற்புத விளக்கு’ ஆகிய படங்கள் சினிமாஸ்கோப்பில் வந்திருந்தாலும் ஊமை விழிகள் படத்தின் சினிமாஸ்கோப் பார்வையாளர்களை மிரட்டி இருக்கும். அதன் பிறகு தான் ஏராளமான சினிமாஸ்கோப் படங்கள் வெளியாக தொடங்கியது.
தமிழ் சினிமா பெரும்பாலும் 35 mm திரைப்படம் என குறுகியிருந்த நிலையில்தான் திரைப்பட கல்லூரி மாணவர் அரவிந்தராஜ் இயக்கத்தில் உருவான ஊமை விழிகள் திரைப்படம் பெரிய திரையில் சினிமாஸ்கோப்பில் வெளிவந்து பார்வையாளர்களை மிரட்டியது.
அந்த காலத்தில் திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு ஆர்ட் பிலிம் மட்டுமே எடுக்க முடியும் என்று இருந்த நிலையை மாற்றி கமர்ஷியல் படமும் எடுக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டியவர் அரவிந்தராஜ்.
ஊமை விழிகள் படம் தொடங்கிய அடுத்த வினாடியே ‘ராத்திரி நேரத்து பூஜையில்’ என்ற பாடல் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களை வித்தியாசமாக உணர வைத்தது.
இந்த படத்தை சின்ன பட்ஜெட்டில் எடுக்க வேண்டும் என்று ஆபாவாணன் ஐடியா கொடுத்த நிலையில் மாணவர்கள் ஒன்று சேர்ந்து குறும்படமாக முதலில் எடுத்தனர். அதன் பிறகுதான் இந்த படம் முழுநீள திரைப்படமாக உருவாகியது.
காதல் என்பது கண்களில் இருந்துதான் தொடங்குகிறது. ஒரு இளைஞன் அழகான கண்களை கொண்ட பெண்ணை காதலிக்கிறான். ஆனால் அவள் ஏமாற்றி விடுகிறார். அதன் பிறகு அழகான பெண்களின் கண்களை பறித்து பழிவாங்குகிறான் என்பதுதான் இந்த படத்தின் கதை.
இந்த படத்தின் கதையை அரவிந்தராஜ் எழுத, ஆபாவாணன் திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதினார். இந்த படத்தை குறும்படமாக எடுத்து ஜெய்சங்கர், விஜயகாந்த் ஆகியவர்களுக்கு போட்டுக் காட்டிய பின்னர் இந்த படத்தை முழு நீள திரைப்படமாக எடுத்த போகிறோம் என்று சொன்ன போது, இருவரும் எந்தவிதமான மறுப்பும் சொல்லாமல் நடிக்க ஒப்புக்கொண்டனர்.
அந்த காலத்தில் திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு கால்ஷீட் கொடுப்பதற்கு நடிகர்கள் மிகவும் யோசிப்பார்கள். ஆனால் விஜயகாந்த் கொடுத்த தைரியம்தான் இந்த படம் உருவாக காரணமாகும்.
கமலுடன் நடிக்க மறுப்பு.. ரஜினி படத்திற்கு வாங்கிய அட்வான்ஸை திருப்பி கொடுத்த நடிகை..!
முதலில் விஜயகாந்த் நடித்த போலீஸ் கேரக்டருக்கு சிவகுமார் அவர்களைத்தான் தேர்வு செய்ததாகவும் ஆனால் சிவக்குமார் ஏற்கனவே திரைப்பட கல்லூரி மாணவர் இயக்கிய ஒரு படத்தில் நடித்து அந்த படம் தோல்வி அடைந்ததால் இனிமேல் திரைப்பட கல்லூரி மாணவர்கள் படமே வேண்டாம் என்று கூறியதாகவும் கூறப்பட்டது.
அதேபோல் பிலிம் இன்ஸ்டியூட் மாணவர்களில் ஒருவரான அருண்பாண்டியன் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க, சந்திரசேகர் இன்னொரு கேரக்டரில் நடித்தார். சரிதா, கார்த்திக், சசிகலா ஆகியவர்களை ஒப்பந்தம் செய்த பின் வில்லன் இடத்தில் யாரை நடிக்க வைப்பது என்பதுதான் படக்குழுவினர்களின் பெரிய பிரச்சினையாக இருந்தது.
அப்போதுதான் ரவிச்சந்திரன் நடித்தால் வித்தியாசமாக இருக்கும் என்று முடிவு செய்து அவரை தேடி தங்களது முடிவை சொன்ன பிறகு முதலில் அவர் நான் நடித்து ரொம்ப வருஷம் ஆச்சு, அதனால் என்னை விட்டுடுங்க என்று சொன்ன நிலையில் வற்புறுத்திய பிறகு அவர் ஒப்புக் கொண்டு நடித்ததாகவும் கூறப்பட்டது.
முதலில் இந்த படத்தை சினிமாஸ்கோப்பில் எடுக்கப் போகிறோம் என்று அறிவித்தவுடன் கோலிவுட் திரை உலகினர் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில் சினிமாஸ்கோப்பில் எடுத்த படங்கள் தோல்வி அடைந்திருந்தன. ராஜராஜ சோழன், அலாவுதீனின் அற்புத விளக்கும் ஆகிய படங்கள் தோல்வி அடைந்ததால் இந்த படமும் தோல்வியடையும் என்று சென்டிமென்ட்டாக பலர் பயமுறுத்தினர். ஆனால் அந்த பயத்தை எல்லாம் புறந்தள்ளிவிட்டு சினிமாஸ்கோப்பில் தான் இந்த படத்தை எடுப்போம் என்று பிலிம் இன்ஸ்டியூட் மாணவர்கள் உறுதியாக இருந்தனர்.
ஒரு வழியாக படத்தை எடுத்து முடித்ததும் சென்சாரில் சிக்கல் ஏற்பட்டது. இந்த படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதால் இந்த படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று சென்சார் அதிகாரிகள் கூறியதால் இந்த படமே ரிலீஸ் ஆகாது என்ற ஒரு கட்டத்தில் கூறப்பட்டது. இந்த நிலையில் திரைப்பட கல்லூரி மாணவர்கள் டெல்லி வரை சென்று போராடி படத்திற்கு சென்சார் சான்றிதழ் வாங்கி அதன் பிறகு வெளியிட்டனர்.
1986ஆம் ஆண்டு வெளியான இந்த படம் முதல் நாளில் மிகப்பெரிய பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது. இரண்டாவது நாள் முதல் திரையரங்குகளில் கூட்டம் குவிந்தது. ஒரே வாரத்தில் இந்த படம் 100 நாள் ஓடும் என்று கோலிவுட் திரையுலகினர் கணித்து விட்டனர்.
ஊமைவிழிகள் ரிலீஸ்க்கு பிறகுதான் பல திரைப்பட கல்லூரி மாணவர்கள் சினிமா உலகிற்கு வந்தனர். பல படங்கள் சினிமாஸ்கோப்பில் எடுக்கப்பட்டன. எனவே தமிழ் சினிமாவில் ட்ரெண்ட்டை மாற்றிய ஊமை விழிகள் திரைப்படத்தின் குழுவினர்களுக்கு தமிழ் சினிமா என்றும் நன்றியுடன் இருக்கும்.