ரஜினி – பாலசந்தர் – விசு என மும்மேதைகள் பணியாற்றிய படம்.. வில்லன் நடிப்பில் அதகளப்படுத்திய நெற்றிக்கண்!

Published:

நயன்தாரா நடித்த ‘நெற்றிக்கண்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்றால் ரஜினிகாந்த் நடித்த ‘நெற்றிக்கண்’ என்ற திரைப்படம் கடந்த 1981ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

கே.பாலச்சந்தர் திரைக்கதை எழுதி, தயாரித்த இந்த படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு விசு வசனம் எழுதியிருந்தார்.

கமலுடன் நடிக்க மறுப்பு.. ரஜினி படத்திற்கு வாங்கிய அட்வான்ஸை திருப்பி கொடுத்த நடிகை..!

netrikan4

ரஜினிகாந்த், லட்சுமி, சரிதா, மேனகா, விஜயசாந்தி, சரத்பாபு உள்பட பலர் நடித்த இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் வில்லன் நடிப்பில் அசத்தியதால் வசூலில் வெளுத்து கட்டியது.

சக்கரவர்த்தி மற்றும் சந்தோஷ் ஆகிய அப்பா, மகன் என்ற இரண்டு கேரக்டரில் ரஜினிகாந்த் நடித்திருப்பார். உழைப்பால் முன்னேறிய ஒரு தொழிலதிபர் கேரக்டரில் சக்கரவர்த்தி இருந்தாலும் அந்த கேரக்டர் ஒரு பெண் பித்தன் கேரக்டராக வடிவமைக்கப்பட்டிருக்கும். அவருடைய ஒரே பலவீனம் பார்க்கும் பெண்களை எல்லாம் அடைய வேண்டும் என்பதுதான்.

netrikan3 1

அந்த வகையில் தான் தன்னுடைய அலுவலகத்தில் வேலை பார்க்கும் சரிதாவை அடைந்தவுடன் அதனால் ஏற்படும் குழப்பம், வீட்டில் ஏற்படும் பிரச்சனைகள், அவரது மகனே அவருக்கு எதிராக நகர்த்தும் காய்கள் ஆகியவைதான் இந்த படத்தின்  முக்கிய அம்சங்கள்.

ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக மாறிய பின்னரும் அவர் வில்லனாக நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் ஆகும் என்பது அவரது நடிப்பும் கலக்கலாக இருக்கும் என்பதும் தெரிந்ததே. குறிப்பாக சந்திரமுகி படத்தில் வேட்டையன், எந்திரன் படத்தில் சிட்டி ஆகிய கேரக்டர்களை சொல்லலாம்.

அந்த வகையில் அந்த காலத்திலேயே வில்லத்தனமான நடிப்பில் அசத்தியவர் ரஜினிகாந்த். அதற்கு ஒரு முக்கிய எடுத்துக்காட்டு தான் நெற்றிக்கண் படம்.

netrikan1

தந்தை, மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருந்தாலும் தந்தையின் கேரக்டரில்தான் இந்த படத்தில் அதகளம் படுத்திருப்பார். அதற்கு கொஞ்சம் கூட சோடை போகாமல் மகன் கேரக்டரும் துள்ளல் கதாபாத்திரத்தோடு இருக்கும்.

பாரதிராஜாவுக்கு ஜோடியாக அறிமுகம்.. போலீஸ் கேரக்டரில் மாஸ்.. அந்த கால லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி..!

தந்தை ரஜினிகாந்த் ஜோடியாக லட்சுமி நடித்திருப்பார். கணவன் செய்யும் லீலைகள் எல்லாம் தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருக்கும் ஒரு குடும்பத் தலைவி கேரக்டர். ரஜினிகாந்த்திடம் ஏமாந்து அதன் பிறகு அவரை பல இடங்களில் பழிவாங்கும் கேரக்டரில் சரிதா நடித்திருப்பார். மகன் ரஜினிகாந்த் ஜோடியாக மேனகா நடித்திருப்பார். இவர் தற்போதைய முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷின் தாயார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் எஸ்.பி.முத்துராமனின் இயக்கம் மிகவும் அருமையாக இருக்கும். இரண்டு கேரக்டர்களையும் அவர் வித்தியாசமாக வடிவமைத்து இருப்பார். குறிப்பாக சக்கரவர்த்தி என்ற சபல கேரக்டரை அவர் அறிமுகப்படுத்தும் காட்சி சூப்பராக இருக்கும்.

அதேபோல் விசுவின் வசனமும் இந்த படத்தில் சிறப்பாக அமைந்தது. கோவிலுக்கு நன்கொடை தர வேண்டும் என அவரது செகரட்டரி கூறும்போது ‘ஆண்டவன் தான் நமக்கு தரனும், நாம ஆண்டவனுக்கு தரக்கூடாது, அது ஆண்டவனை அவமானப்படுத்துகிற மாதிரி’ என்று நக்கலாக சொல்வார். உடனே ‘அந்த கோவிலின் தர்மகர்த்தா எம்எல்ஏ’ என்று செகரட்டரி சொன்னதும், ‘ஆண்டவனை கூட பகைச்சிக்கலாம், ஆனால் அரசியல்வாதியை பகைச்சிக்க கூடாது’ என்று சொல்லி நன்கொடை தரச் சொல்வார். இதேபோன்று விசுவின் நச்சு வசனங்கள் பல இடங்களில் இந்த படத்தில் இருக்கும்.

netrikan2

இந்த படத்தில் ரஜினியின் மகளாக விஜயசாந்தி ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருப்பார் என்பதும் பின்னாளில் இவர் ரஜினிக்கு ஜோடியாக ‘மன்னன்’ படத்தில் நடித்திருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்தது. குறிப்பாக ராமனின் மோகனம் என்ற பாடல் இன்றுவரை பிரபலமான பாடலாக உள்ளது.

20 வருடங்களுக்கும் மேல் மோதிய கமல் – ரஜினி படங்கள்.. மாறி மாறி கிடைத்த வெற்றி..!

இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் வசூலால் விநியோகஸ்தர்கள் நல்ல லாபம் அடைந்ததாகவும் கூறப்பட்டது. ரஜினிகாந்தின் சிறந்த படங்கள் என்று ஒரு பட்டியல் எடுத்தால் அதில் நிச்சயம் ‘நெற்றிக்கண்’ இடம் பெறும் அளவுக்கு இந்த படம் ரஜினிக்கு மிகப்பெரிய பேரையும் புகழையும் பெற்று தந்தது என்றால் அது மிகையாகாது.

மேலும் உங்களுக்காக...