சிறுவயதிலேயே இசை உலகில் கொடி கட்டிப் பறந்தவர்கள் மிகச் சிலர் தான் உண்டு. அவர்களில் மறக்கவே முடியாத பாடகி தான் ஜிக்கி. அவரது சுருக்கமான வாழ்க்கைக்குறிப்புகளைப் பார்ப்போம்.
பிள்ளைவால் ஜெகபதிநாயுடு கிருஷ்ணவேணி என்ற ஜிக்கி ஒரு காலத்தில் தமிழ்த்திரையுலகில் கொடி கட்டிப் பறந்த பின்னணிப் பாடகி. இன்றைய தலைமுறையினருக்கு இவர் மறந்து போன பாடகி. ஒரு காலத்தில் இவர் தமிழ்ப்படங்களில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, சிங்களம் ஆகிய மொழிகளிலும் வெளுத்து வாங்கினார். இவர் கிட்டத்தட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
1943ல் பந்துலம்மா திரைப்படத்தில் நடிகையாகவும், பின்னணிப் பாடகியாகவும் அறிமுகமானார். 2002 வரை கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் திரையுலகில் பாடி கலக்கியிருக்கிறார் ஜிக்கி.
ஆந்திராவின் சந்திரகிரியைப் பூர்வீகமாகக் கொண்டவர் ஜெகபதி நாயுடு. இவருக்கும் சென்னையைச் சேர்ந்த ராஜகாந்தாவுக்கும் பிறந்த 9 பிள்ளைகளில் மூத்தவர் தான் ஜிக்கி.
தனது 6வது வயதிலேயே இசை ஆர்வம் கொண்டு இருந்தார். 11வது வயதில் தாய்மாமன் சிட்டிபாபுவின் முயற்சியால் எஸ்.வி.வெங்கட்ராமன் இசையில் 1948ல் வெளிவந்த ஞானசௌந்தரி என்ற படத்தில் அருள்தரும் தேவமாதாவே ஆதியே இன்ப ஜோதியே என்ற பாடலைப் பாடி பட்டி தொட்டி எங்கும் உள்ள உள்ளங்களைக் கவர்ந்தார்.
தொடர்ந்து தியாகையா, வனதேசம் ஆகிய தெலுங்கு படங்களில் பாடினார். இப்படங்களின் பாடல்களைக் கேட்ட இசை அமைப்பாளர் ஜி.ராமநாதன் ஜிக்கியின் 13வது வயதில் 1950ல் வெளியான மாடர்ன் தியேட்டர்ஸின் மந்திரிகுமாரி படத்துக்குப் பாட வைத்தார். வாராய் நீ வாராய், உலவும் தென்றல் காற்றினிலே ஆகிய டூயட் பாடல்களை திருச்சி லோகநாதனுடன் சேர்ந்து பாடினார்.
இந்த இருபாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. தொடர்ந்து 1950 முதல் 60 வரை ஜிக்கிக்கு பொற்காலம் தான். 1952ல் குமாரி படத்தில் தனது வரும் கால கணவர் ஏ.எம். ராஜாவுடன் இணைந்து பாடினார். தொடர்ந்து இவருடன் இணைந்து நூற்றுக்கணக்கான காதல் மற்றும் சோகப்பாடல்களைப் பாடி அசத்தினார் ஜிக்கி.
தென்னிந்திய திரையுலகில் ஜிக்கி, ஏஎம்.ராஜா குழுவினர் மறக்க முடியாத திரையிசைப் பாடல்களைத் தந்தவர்களின் பட்டியலில் முன்வரிசையில் இருந்தனர்.
ராஜ்கபூரின் சொந்தத் தயாரிப்பான ஆர் படத்தின் தமிழ்ப்பதிப்பான அவன் படத்தில் இந்த ஜோடி இனிமையான பாடல்களைத் தந்தது. 1955ல் மகேஸ்வரி படத்தில் அழகுநிலாவின் பவனியிலே பாடலில் ரசிகக் கண்மணிகளைக் கிறங்கடிக்கும் குரலில் பாடி அசத்தினார். இந்தப் பாடலின் ஒத்திகை இடைவேளையில் தான் ஏ.எம்.ராஜா தனது காதலை ஜிக்கியிடம் சொன்னார்.
பெற்றோர்கள் சம்மதத்துடன் இவர்களது திருமணம் நடந்தது. கண் காணாததும், கல்யாண ஊர்வலம் வரும், ஆகா நான் இன்று அறிந்து கொண்டேன், உன் பெயரைக் கேட்டேன், ஏகாந்தம் மாலையில் ஆகிய இனிய பாடல்கள் ஜிக்கியின் குரலில் மயக்கின.
1959ல் ஸ்ரீதரின் கல்யாணப்பரிசு படத்தில் சிறந்த இசை அமைப்பாளர் விருதையும் ஏ.எம்.ராஜா பெற்றார். படம் பட்டி தொட்டி எங்கும் ஹிட். இந்தப் படத்தில் துள்ளாத மனமும் என்ற பாடலை ஜிக்கி பாடி அசத்தினார்.
1961ல் வெளியான தேனிலவு பாடல் ராஜாவின் புகழை மேலும் உயர்த்தியது. கல்யாணப்பரிசு வெற்றியைத் தொடர்ந்து ஸ்ரீதரின் நெஞ்சில் ஓர் ஆலயம் படத்திற்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதை மறுத்துவிடவே அந்த வாய்ப்பு எம்எஸ்வி.க்குப் போனது. அதன்பிறகு இசை அமைப்பதையே நிறுத்தினார் ஏ.எம்.ராஜா.
1956ல் வெளியான அமரதீபம் படத்தில் கலையே என் வாழ்க்கையின் நிலை மாற்றினாய் பாடலை ஏ.எம்.ராஜா அற்புதமாகப் பாடியிருந்தார். அதே படத்தில் ஏ.எம்.ராஜாவுடன் இணைந்து ஜிக்கி, தேன் உண்ணும் வண்டு என்ற காதல் பாடலைப் பாடி அசத்தினார்.
கணவரின் விருப்பப்படி ஜிக்கி சினிமாவில் பாடுவதைத் தவிர்த்து விட்டு தன் கணவரின் இசைக்கூடங்களில் பாடினார். அந்தக் காலகட்டத்தில் 1959ல் நாகர்கோவிலில் இசை நிகழ்ச்சியை முடித்து விட்டு ரயிலில் வந்த ராஜா வள்ளியூரில் இறங்கினார்.
திடீரென்று ரயில் புறப்பட்டு விட ராஜா அவசரமாக ஏறும்போது ரயிலில் இருந்து கீழே தவறி விழுந்து ஏ.எம்.ராஜா இறந்து போனார். இத்துயர நினைவு ஜிக்கியின் நெஞ்சில் பலமாக நிலைத்துவிட்டது. வேதனை தாளாமல் குடும்பத்துடன் ஒதுங்கி இருந்தார். கண்டேன் உன்னை, துள்ளி துள்ளி, வாராய் நீ வாராய் முதலிய பாடல்களைக் கேட்டாலே நம் நினைவுக்கு வருபவர் ஜிக்கி தான்.
சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளிலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பாடி அசத்தியுள்ளார் ஜிக்கி.