புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மக்களின் மனதில் எப்படி நீங்கா இடம்பிடித்தார் என்பதற்கு பல நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன. அப்படி ஓர் சம்பவம் தான் இது. நடிகை கே.ஆர். விஜயா அப்போது உச்சத்தில் இருந்த நேரம்.
இயக்குநர் சசி இயக்கத்தில் ஜெய்சங்கர், கே.ஆர்.விஜயா நடித்த ஒரே வானம் ஒரே பூமி படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் படத்தின் ஷுட்டிங்கிற்காக படக்குழுவினர் தாய்லாந்து தலைநகர் பாங்காங் சென்றிருக்கின்றனர். வெளிநாட்டில் ஷுட்டிங் என்பதால் மிக விரைவாக படப்பிடிப்புப் பணிகளை நடத்தியிருக்கின்றனர்.
அப்படி ஒருநாள் படப்பிடிப்பு முடிந்த பின் மாலை வேளையில் பாங்காங் நகரைச் சுற்றிப் பார்க்கலாம் என எண்ணி சக நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுடன் பாங்காங் வீதிகளில் நடந்து சென்றிருக்கிறார் கே.ஆர்.விஜயா.
அப்போது இவர்களின் தோற்றத்தையும், தமிழில் பேசுவதையும் கண்ட ஒருவர் நீங்கள் தமிழ்நாடா என்றிருக்கிறார். ஆம் என்றவுடன், நீங்கள் திரைப்படத் துறையைச் சேர்ந்தவரா என்றும் கேட்டிருக்கிறார். அதற்கும் ஆம் என்று பதில் அளிக்க அப்படி என்றால் உங்களுக்கு நல்லவரான எம்.ஜி.ஆரைத் தெரியுமா? என்று கேட்டிருக்கிறார்.
நாடகக் கம்பெனியில் எடுபிடி வேலைபார்த்த செந்தில்.. முன்னணி காமெடியனாக்கிய பாக்யராஜ்..
இப்படி அழுத்தம் திருத்தமாக நல்லவர் எம்.ஜி.ஆர் என்று கூறியுவுடன் எம்.ஜி.ஆர் உங்களுக்கு நண்பரா அல்லது தெரிந்தவரா என்று கேட்டிருக்கிறார். பதிலுக்கு அவர் இல்லை ஒரு மிகச் சிறந்த மனிதரைப் பற்றி தெரிந்து கொள்வதில் தவறில்லையே என்றிருக்கிறார். கே.ஆர்.விஜயாவிற்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. அவர் இப்படிச் சொல்வதில் இருந்து பின்னணியில் ஏதோ ஒன்று நடந்திருப்பதை அறிந்து மேலும் அவரிடம் பேசினார்.
அப்போது அவர் உலகின் பல நாடுகளிலிருந்தும் பாங்காங் நகருக்கு ஷுட்டிங் எடுக்க திரைத்துறையினர் வருகை தருவது வழக்கம். அப்படித்தான் ஒருமுறை எம்.ஜி.ஆரும் பாங்காங் வந்திருக்கிறார். அப்படி அவர் வந்த போது அவருடைய படமும் சேர்த்து கிட்டத்தட்ட ஒரே இடத்தில் 15 படங்களுக்கு மேல் ஷுட்டிங் நடைபெற்றது. அப்போது அதில் ஒரு சீனப்படம் ஷுட்டிங் நடைபெற்ற போது சண்டைக் காட்சியில் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்திருக்கிறார்.
இதனைக் கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர். யார் என்றே தெரியாத ஒருவருக்காக ஓடிச் சென்று அவருக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியிருக்கிறார். மேலும் அன்றைய தினம் பெரும் பொருட்செலவையும் கருதாது ஷுட்டிங்கையும் ரத்து செய்திருக்கிறார். மனிதரை மதிக்கத் தெரிந்த இவரின் இந்தப் பண்பு அங்குள்ள அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது. ஆனால் மற்றவர்கள் யாரும் இதைச் செய்யவில்லை. என்று அவர் கூற கே.ஆர்.விஜயா மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை நினைத்து பெருமை அடைந்திருக்கிறார்.