தமிழ்த்திரை உலகில் திரை இசைத் திலகம் என்று போற்றப்படுபவர் கே.வி.மகாதேவன். திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள், சங்கராபரணம், வசந்த மாளிகை இவரது கைவண்ணத்தில் உருவானவை. கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்து ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்துள்ளார்.
பக்திப்படங்களில் இசை யார் என்றால் கண்ணை மூடிக்கொண்டு கே.வி.மகாதேவன் தான் என்று சொல்லிவிடலாம். மெய்சிலிர்க்க வைக்கும் திறனுடையது இவரது இசை. இவர் ஒரு படத்தில் இசை அமைக்கிறார் என்றாலே படம் வெற்றி தான். அப்பேர்ப்பட்ட புகழுக்கு சொந்தக்காரர் தான் இந்த இசை ஜாம்பவான்.
ஒரு நாள் போதுமா என்ற ஒரு பாடலே இவரது இசை திறனுக்கு சாட்சி. எளிய மக்களுக்கும் இவரது இசை பரிச்சயமானது. நெற்றி நிறைய விபூதி, குங்குமப் பொட்டு சகிதம் இவர் பார்ப்பதற்கு பக்தியின் ஊற்றாய் இருப்பார்.
இவர் நாகர்கோவில் அருகில் உள்ள கிருஷ்ணன்கோவில் என்ற ஊரில் 14.3.1918ல் பிறந்தார். இவரது பெற்றோர் வெங்கடாசல பாகவதர், லட்சுமி அம்பாள். இவர் பூதப்பாண்டி அருணாசலக் கவிராயரிடம் முறையாக இசை பயின்றார். கோட்டு வாத்தியம் இசைப்பதிலும் வல்லவர். சிறு வயதிலேயே இசையில் நாட்டம் கொண்டு இருந்தார். இதனால் பள்ளிப் படிப்பைத் தொடராமல் போனார்.
பாலகாந்தர்வ நாடக சபையில் இணைந்து பெண் வேடம் போட்டுப் பாடி நடித்தார். பின்னர் அங்கரை விசுவநாத பாகவதரின் இசைக்குழுவில் இணைந்தார். பம்பாய், ஐதராபாத், டெல்லி, நாக்பூர் என வெளியூர்களுக்குச் சென்று கச்சேரி நடத்தினார். அதன் பிறகு தான் திரையுலகில் நுழைந்தார். சாதித்தார்.
இவர் முதன் முதலில் 1942ல் மனோன்மணி என்ற படத்தில் துணை இசை அமைப்பாளராக அறிமுகமானார். அதன் பிறகு 12 ஆண்டுகளாக எந்த ஒரு வாய்ப்பும் இல்லாமல் தவியாய் தவித்தார். பின்னர் 1954ல் புதிய வாய்ப்புகள் உருவானது.
அப்போது முதல் அவர் இசை உலகில் சாதனை தான். 1990ல் முருகனே சரணம் என்ற படம் தான் இவரது இசை உலகப் பயணத்தில் கடைசி படம்.
இவர் இசை அமைத்த படங்களின் எண்ணிக்கை 1500. ஐம்பது ஆண்டுகாலமாக இசை அமைத்து திரையுலகில் கொடி கட்டிப் பறந்தார். காலத்திற்கு ஏற்றாற்போல உருமாற்றம் பெற்று இவரது இசை தன்னைப் புதுப்பித்துக் கொண்டது.
கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளாக திரையுலகின் இசை சாம்ராஜ்யத்தில் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார் கே.வி.மகாதேவன். இவரை திரை உலகில் மாமா என்றே அனைவரும் அன்புடன் அழைப்பர். ஏன்னா அப்போது மாமா மாமா மாமா என்ற இவரது பாடல் மிகவும் பிரபலம்.
இவரது கிராமிய இசை, கர்நாடக இசையின் தன்மையோடு சினிமாவிற்குள் நுழைந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஏரிக்கரையின்மேலே போறவளே பெண்மயிலே என்ற பாடலைக் கேட்டு இருப்பீர்கள். என்ன ஒரு ராகம்…? என்ன ஒரு இசை என்று வியக்க வைக்கிறது அல்லவா? அதனால் தான் இவரது பாடல் காலம் கடந்து இன்றும் பேசப்படுகிறது.
இவருக்கு சங்கராபரணம் படத்திற்காக தேசிய விருது கிடைத்தது. பெரும்பாலும் பக்திப்படங்களுக்கே இசை அமைத்து வந்தார்.
சம்பூர்ண ராமாயணம், திருவிளையாடல், கந்தன் கருணை, திருவருட்செல்வர், சரஸ்வதி சபதம் அப்பப்பா…. ரசனையின் உறைவிடம்… பக்தியின் மணம் கமழ கமழ நம்மை திழைக்கச் செய்து விட்டார் என்றே சொல்லலாம்.
பெரும்பாலும் இசை அமைப்பாளர்கள் மெட்டு போட்டதும் தான் அதற்கேற்ப பாடல் எழுதச் சொல்வார்கள். இதனால் பாடல் வரிகள் மாற்றப்பட வேண்டியிருக்கும். ஆனால் கே.வி.மகாதேவன் கொஞ்சம் ஸ்பெஷல். பாடல் வரிகள் வந்ததும் தான் மெட்டே போடுவார்.