தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் பழமைவாய்ந்த கோவில்…! அற்புத சக்தி வாய்ந்த மந்திர சக்கரம்

Published:

சங்கரன் கோவில் என்று அழைக்கப்படும் சங்கர நயினார் கோவில் தென்காசி விருதுநகர் ரயில் பாதையில் அமைந்துள்ளது. ராஜபாளையத்தில் இருந்து 32 கி.மீ. தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 40 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இந்தக் கோவிலின் தலவரலாறு மற்றும் சிறப்புகளைப் பற்றிப் பார்ப்போம்.

இந்த ஊரை ஆவுடையம்மன் கோவில் என்றும், தவசுக் கோயில் என்றும் கிராமத்தினர் கூறுவர். இங்கு கோவில் கொண்டுள்ள இறைவியின் பெயர் கோமதி அம்மன். இவரது மற்றொரு பெயர் ஆவுடையம்மன்.

இந்தக் கோவிலில் நடைபெறும் சிறப்பான திருவிழா ஆடித்தபசு. இங்கு சிவனும், விஷ்ணுவும் சங்கர நாராயணர் கோலத்தில் காட்சி தருகின்றனர். இக்கோவில் 1022ல் கட்டப்பட்டது. தேவார காலத்துக்குப் பின் அமைந்த தமிழ்நாட்டுக் கோவில். பாண்டிய நாட்டின் முக்கியமான தலமாகவும் விளங்கியது.

உக்கிரம பாண்டியன் காலத்தில் கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் தெரிவிக்கிறது. சங்கர லிங்கப் பெருமாள் கோவிலில் கீழ்ப் பிரகாரம் வலப்புறத் தூணில் இந்த மன்னரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

சங்கர நாராயணர்

Sankaranarayanar 1
Sankaranarayanar

பார்வதி தேவியின் வேண்டுகோளின்படி இறைவன் நாராயணரை தன்னில் சரிபாதியாக காட்டிய பேறு இந்தத் தலத்திற்கு உண்டு. இக்கோவிலில் இறைவன் சங்கர நயினார். இறைவி கோமதி அம்பாள் என்ற ஆவுடையம்மை. இந்தக் கோவிலில் சங்கரலிங்கர், கோமதி அம்பாள், சங்கர நாராயணர் என்ற 3 பகுதிகள் உள்ளன.

இவற்றில் சங்கரலிங்கர் கோவில் தான் பரப்பளவில் பெரியது. சங்கரலிங்கர் கோவிலுக்கும் கோமதி அம்மன் கோவிலுக்கும் நடுவே சங்கர நாராயணர் கோவில் அமைந்துள்ளது. புலித்தேவர் கட்டிய உட்கோவில் இங்குள்ளது. இது அழகிய மர வேலைப்பாடுகளைக் கொண்டது. சங்கரலிங்கர் கோயிலின் கோபுரம் 125 அடி.

கோமதியம்மனின் திருவுருவம் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆற்றல் மிகுந்த தெய்வமாகக் கருதப்படுகிறது. இத்தலத்தின் சிறப்புக்கும் காரணமானவர் இவர் தான்.

தலச்சிறப்பு

Sankarankoil
Sankarankoil

கொடிய நோய்வாய்ப்பட்டவர்களும், பேய் பிடித்தவர்களும் இந்த அம்மையை வழிபட்டு நலம் பெற்று வருகின்றனர். அம்மையின் திருவுருவம் முன்பு மந்திர சக்கரம் ஒன்றை திருவாவடு துறை ஆதீனத்தின் தலைவராக இருந்த வேலப்ப தேசிக மூர்த்தி பதித்துள்ளார்.

அச்சக்கரத்தில் நோய்வாய்ப்பட்டவர்கள் அமர்ந்து அம்மனை நோக்கி கடும் தவம் புரிந்து தங்கள் நோய்களைத் தீர்த்துக் கொள்கின்றனர்.

இங்குள்ள புற்றுமண்ணை உடம்பில் பூசி நோய்களை நீக்கிக் கொள்கின்றனர். இந்த மண் வேட்டை மடத்தில் இருந்து கொண்டு வரப்படுகிறது. தமிழ் மாதத்தில் கடைசி வெள்ளி தோறும் கோமதி அம்மனுக்கு தங்கப் பாவாடை அணிவிக்கப்படுகிறது.

சித்திரை திருவிழா, ஆடித்தபசு இங்கு பிரசித்தி பெற்ற திருவிழாக்கள். லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனின் தரிசனம் பெற்றுச் செல்வர்.

 

மேலும் உங்களுக்காக...