தமிழ் திரை உலகில் சுமார் 400 படங்களுக்கு இசையமைத்த தேனிசைத் தென்றல் தேவா, ரஜினியின் இரண்டு சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்தும், அவருக்கு ரஜினி தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கவில்லை என்பதுதான் யாருக்கும் புரியாத மர்மமாக இருந்தது.
ஆரம்ப காலகட்டத்தில் இசையமைப்பாளர்கள் சந்திரபோஸ் மற்றும் தேவா ஆகிய இருவரும் இசை குழுவில்தான் இருந்தனர். பல இசை கச்சேரிகளை நடத்தி பிரபலமான நிலையில் தூர்தர்ஷனில் இசையமைக்கும் வாய்ப்பு தேவாவுக்கு கிடைத்தது.
இளையராஜாவுக்கு போட்டியாக வந்த 2 இசையமைப்பாளர்கள்.. இருவருமே ஆஸ்கர் பெற்ற அதிசயம்..!
அதன் பிறகு அவர் ‘மாட்டுக்கார மன்னாரு’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அதன் பிறகு அவர் ‘மனசுக்குக்கேத்த மகராசா’ என்ற படத்திற்கு இசையமைத்தாலும் தேவாவுக்கு மிகப்பெரிய அளவில் பெயரை வாங்கிக் கொடுத்த படம் என்றால் பிரசாந்த் நடித்த ‘வைகாசி பொறந்தாச்சு’ என்ற படம்தான்.
இந்த படம் மிகப்பெரிய ஹிட்டானது. குறிப்பாக பாடல்களுக்காகவே ஹிட்டானது. இதன் பின்னர் அவர் தொடர்ச்சியாக பல படங்களில் இசையமைக்க ஒப்பந்தமானார். 1991ஆம் ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 15 படங்களுக்கு மேல் இசையமைத்தார்.
தமிழ் சினிமாவில் இளையராஜா என்ற மாபெரும் இசை ஆளுமை இருந்த நிலையில், அவருக்கு இணையாக பல படங்கள் தேவாவுக்கு கிடைத்தது. அதற்கு ஒரே காரணம் அவரது பணிவு தான். இவ்வளவு சம்பளம் வேண்டும் என்று அவர் கறாராக பேசவே மாட்டார். தயாரிப்பாளர் எவ்வளவு பணம் கொடுத்தாலும் அதை வாங்கிக் கொண்டு இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் விரும்பும் வகையில் இசையமைத்து கொடுப்பார்.
மேலும் இந்த பாட்டு மாதிரி வேண்டும், அந்த பாட்டு மாதிரி வேண்டும் என்று கேட்டாலும் அவர் அதற்கேற்ப வளைந்து கொடுத்து இசையமைத்து கொடுத்தார். அவ்வாறு இயக்குனர் வசந்த் கொடுத்த சிடியில் உள்ள பாடல்களை கேட்டு அதேபோல் கம்போஸ் செய்தது தான் ‘ஆசை’ படத்தின் பாடல்கள். அதனால்தான் இளையராஜாவின் கால்ஷீட் கிடைக்காதவர்கள் தேடிச்சென்ற இடம் தேவாவின் அலுவலகம் என்று கூறுவதுண்டு.
இந்த நிலையில்தான் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாமலை’ திரைப்படத்திற்கு இசையமைக்க தேவாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. முதல் முறையாக சூப்பர் ஸ்டார் என்ற டைட்டில் வரும் போது அட்டகாசமான ஒரு பின்னணி இசையை அமைத்துக் கொடுத்தவர் தேவாதான். இந்த படத்தில் இடம்பெற்ற ‘வந்தேன்டா பால்காரன்’ உள்பட அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. இந்த படத்தின் பின்னணியிசையும் மிக அபாரமாக இருந்தது.
இதனை அடுத்து மீண்டும் ரஜினிகாந்த் நடித்த ‘பாட்ஷா’ திரைப்படத்திற்கு இசையமைத்தார் தேவா. இந்த படத்தில் அவர் ‘நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்’ என்ற பாடல் உள்பட சூப்பர் ஹிட் பாடல்களை பதிவு செய்திருப்பார். மேலும் இந்த படத்தில் பின்னணி இசையில் பட்டையை கிளப்பி இருப்பார்.
குறிப்பாக மெடிக்கல் கல்லூரியில் தங்கைக்காக சீட் கேட்க ரஜினிகாந்த் வசனம் பேசும்போது வரும் பின்னணி இசை, பாட்ஷாவாக மாறும்போது வரும் பின்னணி இசை, இடைவேளை காட்சியின்போது வரும் பின்னணி இசை என இந்த படத்தின் பின்னணி இசைக்காகவே கைதட்டிய ரசிகர்கள் உண்டு என்பது ஆச்சரியமான ஒன்று.
கால் நூற்றாண்டுக்கும் மேலாக ரசிகர்கள் மனதில் இருக்கும் ‘பாட்ஷா’: இனிமேல் இப்படி ஒரு படம் வருமா?
அண்ணாமலை, பாட்ஷா என்ற இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த போதிலும் அதன் பிறகு ரஜினியின் படத்துக்கு தேவா இசையமைக்கவில்லை என்பதுதான் ஒரு மர்மமான கேள்வியாக உள்ளது. அதற்கு காரணம் டிரெண்டுக்கு ஏற்றவாறு இசையமைப்பாளர்களை ரஜினிகாந்த் மாற்றுவார் என்பதுதான். ஒரு கட்டத்தில் ஏ.ஆர்.ரகுமான், அனிருத் என புதிய இசை அமைப்பாளர்கள் வந்த பிறகு அவர் இளையராஜா உள்பட பழைய இசையமைப்பாளர்களை பயன்படுத்தவில்லை என்றும் கூறப்பட்டது.
ரஜினிக்கு இரண்டு படங்களுக்கு இசையமைத்த தேவா, கமல் நடித்த அவ்வை சண்முகி படத்திற்கும் இசையமைத்தார். இந்த படமும் சூப்பர் ஹிட்டாகிய போதிலும் அடுத்தடுத்து தமிழ் படங்களுக்கு இசையமைக்க அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
அஜித்துக்கு ஆசை, விஜய்க்கு குஷி என சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்த தேவா, ஒரு கட்டத்தில் சின்ன சின்ன பட்ஜெட் படங்களுக்கு இசையமைத்தார். அவரது 300வது படமாக ராமச்சந்திரா என்ற படம் அமைந்தது. தேவா தற்போது 400வது படத்தை நெருங்கி வருகிறார் என்றும் கூறப்படுகிறது.
தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, மலையாள மொழி படங்களுக்கும் தேவா இசையமைத்துள்ளார். அதுமட்டுமின்றி கானா பாடல் என்றாலே உடனே அனைவருக்கும் ஞாபகம் வருவது தேவாதான். பல கானா பாடல்களை அவரே பாடியிருக்கிறார், குறிப்பாக அஜித் நடிப்பில் அகத்தியன் இயக்கிய ‘காதல் கோட்டை’ என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற ‘கவலை படாதே சகோதரா’ என்ற பாடல் பட்டித்தொட்டி எங்கும் சூப்பர் ஹிட்டானது.
85 ரூபாயுடன் சென்னை வருகை.. இளையராஜா வீட்டில் எடுபிடி.. பிரபல இசையமைப்பாளரின் வெற்றிக்கதை..!
இசையமைப்பாளர் தேவா தற்போது கூட இரண்டு படங்களுக்கு இசையமைத்து வருகிறார். என்றும் அவரது கானா பாடலை ரசிகர்கள் மறக்க மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.