தமிழ் சினிமாவின் மிக முக்கியமான கவிஞர்களின் பெயரை பட்டியல் போட்டால் அதில் முதல் சிறு பெயர்களிலேயே நிச்சயம் வாலியின் பெயர் இடம்பெறும். ஒரு காலத்தில் கண்ணதாசன் தனது பாடல் வரிகளால் தமிழ் சினிமாவையே ஆட்கொண்டிருந்த நிலையில் தான் அவருக்கு போட்டியாக வர வேண்டுமென கவிஞர் வாலி சினிமாவுக்குள் நுழையவும் முயற்சி செய்தார்.
அவர் பின்னாளில் வாய்ப்பு பெற்று பெரிய கவிஞராக மாறி இருந்தாலும், ஆரம்ப காலத்தில் அவர் அறிமுகம் பெறுவதற்கு பட்ட கஷ்டங்கள் ஏராளம். அந்த காலத்தில் பிரபல நடிகரும், வாலியின் நெருங்கிய நண்பருமான வி. கோபாலகிருஷ்ணன், எப்படியாவது தனது நண்பனுக்கு பாடல் எழுதும் வாய்ப்பை பெற வேண்டும் என்பதற்காக பல இசையமைப்பாளர்களை தேடி அலைந்தார். ஆனால் யாருமே வாய்ப்பு கொடுக்காத சூழலில் தான் இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனை பார்ப்பதற்காக தனது நண்பன் வாலியை அழைத்து சென்றுள்ளார் கோபாலகிருஷ்ணன்.
தனக்கு மிகவும் பிடித்தமான இசை அமைப்பாளர் என்பதால் எம்.எஸ். விஸ்வநாதனை பார்ப்பதற்காக மிகுந்த மகிழ்ச்சியுடன் சென்றிருந்தார் வாலி. அவர் எழுதிய பாடல்களை வாங்கி பார்த்துவிட்டு கோபாலகிருஷ்ணனிடம், இவர் சினிமாவில் புகழ் பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் நன்றாக படித்துள்ளதால் திருச்சிக்கே சென்று ஏதாவது தொழில் பார்க்க சொல்லுமாறும் கூறியுள்ளார் எம் எஸ் விஸ்வநாதன். அவரிடம் பணி புரிய வேண்டும் என கனவை கொண்டிருந்த வாலிக்கு எம்.எஸ்.வி சொன்ன வார்த்தைகள் இடியாக வந்து இறங்கியது.
இதனால் சினிமா கனவையும் மறந்து விட்டு திருச்சி கிளம்பலாம் என முடிவு எடுத்திருந்த நிலையில் தான் அவரை தடுத்து நிறுத்தி சினிமாவில் நீ சாதித்தே தீர வேண்டுமென அறிவுறுத்தினார் நண்பர் கோபாலகிருஷ்ணன். அந்த சமயத்தில் மூன்று வேளை உணவு உண்ணவே காசு இல்லாமல் வாலி தவித்த போது அவருக்கு உதவியவர் தான் பிரபல இசையமைப்பாளர் ஜி. கே. வெங்கடேஷ்.
வாலிக்கு மாத சம்பளம் கிடைக்கும் வேலை ஒன்றை ஏற்பாடு செய்தார் ஜி கே வெங்கடேஷ். அதாவது கவிஞர் கண்ணதாசன் சொல்லும் பாடல் வரிகளை அப்படியே எழுதிக் கொடுக்கும் வேலை ஒன்று இருப்பதாகவும் மாத சம்பளம் ரூ.300 வரை கிடைக்கும் என ஜி கே வெங்கடேஷ் கூறியதும், அவருக்கு போட்டியாக தான் நான் சினிமாவில் சாதிக்க ஆசைப்படுகிறேன் என்றும் அப்படி இருக்கும் போது எப்படி அவரிடமே நான் சென்று பணிபுரிவேன் என்றும் வாலி கேட்டுள்ளார். இதனை அறிந்ததும் ஜிகே வெங்கடேஷுக்கு சுர்ர் என கோபமும் வந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.
“நீ உருப்படவே மாட்ட” என கோபத்துடன் வாலியை நோக்கி கூறிக்கொண்டு ஜிகே வெங்கடேஷ் அங்கிருந்து கிளம்பி விட்டதாகவும் தெரிகிறது. தான் சினிமாவில் நுழைவதற்கு முன்பாக ஜிகே வெங்கடேஷ், எம்.எஸ். விஸ்வநாதன் உள்ளிட்டோர் சினிமாவில் சாதிக்கவே மாட்டார் என்று கூறியபோதிலும் அதை எல்லாம் கடந்து அவர்களின் வாக்குகளை பொய்யாக்கி 50 ஆண்டுகள் கவிஞராக தமிழ் சினிமாவில் தனி ராஜ்ஜியம் நடத்தி இருந்தார் வாலி.