பெரியாரின் மாணவராக இருந்து அவருக்கு அடுத்தபடியாக திராவிடக் கொள்கைகளை தமிழக மக்களிடத்தில் எடுத்துச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி, தன்னுடைய எழுத்துக்களாலும், பொன்மொழிகளாலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்தான் அறிஞர் அண்ணா. அண்ணா என்று எழுதும் போது அறிஞர் என்ற வார்த்தை தானாக வந்து ஒட்டிக் கொள்ளும் அளவிற்கு சிறப்புடையவர்.
தென்னகத்து பெர்னாட்ஷா என்று அழைக்கப்படும் அண்ணாத்துரை கோயில் நகராமாம் காஞ்சி மாநகரில் பிறந்து பின் அரசியலில் நுழைந்து திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்து 1967-ல் தமிழகத்தின் முதல் திராவிட ஆட்சியை மலரச் செய்தவர். அவருடைய வழிகாட்டுதலில் வந்த தலைவர்களால் இன்று வரை திராவிடக் கட்சிகளே தமிழகத்தினை ஆண்டுகொண்டிருக்கின்றன.
இன்று அண்ணாவிற்கு சிலை இல்லாத ஊர்களே என்னும் அளவிற்கு மக்கள் மனதில் நீக்கமற நிறைந்தவர். சென்னை அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா சாலை ஆகியவை இன்றும் கம்பீரமாய் வீற்று அவரின் பெருமையைப் பறைசாற்றி வருகின்றது.
பல நாட்களாக அண்ணாவிற்கு சிலை வைக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்த எம்.ஜி.ஆர், அந்த ஆசையை அண்ணாவிடமே சென்று கூறினார். ஆனால் அதை வலுக்காட்டாயமாக மறுத்துவிட்டார் அண்ணா. ஆனால் அண்ணாவிற்கு சிலை வைப்பதில் மிகவும் பிடிவாதமாக இருந்த எம்.ஜி.ஆர் மவுன்ட் சாலையில் தான் சிலை வைப்பது என்று இடத்தையும் தீர்மானம் செய்து வைத்திருந்தார்.
“நடிகன்னா என்ன கடவுளா?“ நிருபரின் கேள்விக்கு நச் பதில் சொன்ன எம்.ஆர்.ராதா..
ஒரு முடிவு எடுத்தால் அதில் மாறுவதில்லை என்பதில் உறுதியாக இருக்கும் அண்ணா தனக்கு சிலை வைப்பதை அனாவசியமான செயலாக கருதினார். ஆனால் பிடிவாதம் கொண்ட எம்.ஜி.ஆர் அண்ணாவிற்கு பல அன்புத் தொல்லைகளை கொடுக்க ஆரம்பித்தார். கடைசியில் ஒருவழியாக அண்ணாவும் சிலை வைப்பதற்கு ஒப்புதல் தந்தார்.
அண்ணாவின் சில புகைப்படங்களை வைத்து சிலை வடிக்கத் தொடங்கினர் சிற்பிகள். அதற்க்கு ஒரு சிற்பி நீங்கள் எதிர்பார்ப்பது போல சிலை வர வேண்டுமென்றால் அண்ணாவே மாடலாக வந்து அமர்ந்தால் தான் சாத்தியம் என்று கூற, அதையும் நடத்திக் காட்டுவதாக முடிவெடுத்தார் எம்.ஜி.ஆர். மீண்டும் அண்ணாவிடம் சென்று அன்புத்தொல்லை கொடுக்க ஆரம்பித்து, அவரை கட்டாயப்படுத்தி சிலைக்கு மாடலாக அமர வைத்தார்.
எம்.ஜி.ஆரின் பிடிவாத குணத்தால் மட்டுமே இந்த சிலை சாத்தியமானது என்று கூறுவது என்றும் மிகையாகாது. 1–1–1968 அன்று உலகத்தமிழ் மாநாட்டையொட்டி, எம்.ஜி.ஆர். வழங்கிய இந்த அண்ணா சிலையை, சர்.ஏ.ராமசாமி முதலியார் திறந்து வைத்தார். இந்த சிலைதான் இன்று அண்ணா சாலையை அலங்கரித்து நிற்கிறது.
இதேபோல் எம்.ஜி.ஆர் காலத்தில் அ.தி.மு.க-வில் இருந்த கே.எம்.எம், மேத்தா பெரியகுளம் பழைய பேருந்து நிலையம் அருகே அண்ணா புத்தகம் படிப்பது போன்ற சிலையை வடிவமைத்து நிறுவினார். சிலை திறப்பதற்கு எம்.ஜி.ஆரை அழைத்தார் மேத்தா. ஆனால் எம்.ஜி.ஆர் வர மறுத்துவிட்டார். அதிருப்தியடைந்த மேத்தா, அப்போது அ.தி.மு.கவில் இருந்து பிரிந்து தி.மு.கவில் இணைந்தார். எம்.ஜி.ஆர் வர மறுத்த அண்ணாவின் சிலை திறப்பு விழாவை கருணாநிதியை வைத்து நடத்தி முடித்தார் மேத்தா. பெரியகுளத்தில் அண்ணா சிலை உதயமானது.
அண்ணாவிற்கு சிலை வைப்பதில் பிடிவாதமாய் இருந்த எம்.ஜி.ஆர், மேத்தா அமைத்த அண்ணாவின் சிலையை திறந்து வைக்க மறுத்தது இன்றுவரை புரியாத புதிராகவே கருதப்படுகிறது.