நடிகர் திலகம் சிவாஜி, காதல் மன்னன் ஜெமினி ஆகியோரை வைத்து எவர் கிரீன் பிளாக் பஸ்டர் படங்களைக் கொடுத்தவர் இயக்குந ஸ்ரீ தர். கல்யாணப் பரிசு என்ற படம் மூலமாக திரையுலகில் இயக்குநராக அடியெடுத்து வைத்தவர் இறுதியாக சீயான் விக்ரம் நடித்த தந்துவிட்டேன் என்னை படம் வரை மூன்று தலைமுறை நடிகர்களுக்கு பல ஹிட் படங்களைக் கொடுத்தார்.
ஆரம்ப காலகட்டத்தில் ஜெமினி கணேசன், சிவாஜி ஆகியோரை மட்டுமே ஹீரோவாக்கி படங்களை எடுத்தவர் முதன்முதலாக எம்.ஜி.ஆருடன் இணைந்த படம் தான் உரிமைக்குரல். இப்படத்தின் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பாக, எம்.ஜி.ஆரை அவரது தோட்டத்தில் சந்தித்து படம் சம்பந்தமான விஷயங்களைப் பேசி இருக்கிறார் ஸ்ரீதர். ஆனால் அந்த சமயத்தில் ஸ்ரீதர் பொருளாதார ரீதியாக சிறிது சிரமத்தில் இருந்திருக்கிறார். இருந்த போதிலும் எம்ஜிஆரிடம் அவர் தன் நிலையைக் காட்டிக் கொள்ளவில்லை. இருவரும் சந்திப்பும் முடிந்த போது ஒரு செயலைச் செய்தார் எம்.ஜி.ஆர்.
“’ஒரு நிமிஷம் உட்காருங்கள்” என்று எம்.ஜி.ஆர். சொல்ல, என்னவோ ஏதோ என தயங்கியபடி அமர்ந்தார் ஸ்ரீதர். எம்.ஜி. ஆர். தன் செயலாளரை அழைத்து, உடனடியாக ஒரு கடிதம் எழுதச் சொல்லி, அதில் தன் கையெழுத்தையும் போட்டு ஸ்ரீதரிடம் கொடுத்திருக்கிறார். படபடப்புடன் அதை படித்துப் பார்க்கிறார் ஸ்ரீதர்.
“நான் ஸ்ரீதருக்கு ஒரு படம் நடித்துக் கொடுக்க ஒப்புதல் அளிக்கிறேன். அவர் படத்துக்கு முன்னுரிமை தந்து மூன்று மாதங்களுக்குள் முடித்துத்தர சம்மதிக்கிறேன்” என்று அக்கடிதத்தில் எழுதியிருந்தார் எம்.ஜி.ஆர்.
அப்போது உணர்ச்சிவசப்பட்டு தழுதழுத்த குரலில், “நீங்கள் வாய்மொழியாகச் சொன்னது போதாதா? இப்படி எழுதி கையெழுத்தெல்லாம் போட்டுக் கொடுக்க வேண்டுமா ?” என்று ஸ்ரீதர் கேட்க, எம்.ஜி.ஆர். சொன்னார். “இது உங்களுக்காக அல்ல. பணம் கொடுக்கும் பைனான்சியர்களுக்காக.
இது பெரிய பட்ஜெட் படம். பணப் பற்றாக்குறை ஏற்பட்டு நீங்கள் கஷ்டப்படக் கூடாது. இந்தக் கடிதத்தைக் காட்டினால், விநியோகஸ்தர்களும் பைனான்சியர்களும் உடனடியாக உங்களுக்கு பணம் கொடுக்க முன்வருவார்கள். அதற்காகத்தான் இந்த கடிதம்” என்றார் எம்.ஜி.ஆர். இதைக் கேட்டவுடன் கண் கலங்கி விட்டார் ஸ்ரீதர்.
மேலும் எம்.ஜி.ஆர். சொன்னது போலவே, எம்.ஜி.ஆர். நடிக்கப் போகிறார் என்று தெரிந்ததுமே விநியோகஸ்தர்களும், பைனான்சியர்களும் ஸ்ரீதர் வீடு தேடி வந்து விட்டார்களாம். ‘உரிமைக்குரல்’ படம் தயாராவதற்கு முன்பே தேவையான பணம் உடனடியாகக் கிடைத்து விட்டது. அதன்பின் படம் வெளியாகி வெள்ளிவிழா கண்டது.