எம்.ஜி.ஆர் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அடையாளங்களுள் ஒருவர். தமிழ் சினிமாவையும் தமிழகத்தையும் ஆண்ட பெருமைக்குரியவர். இருப்பினும் இவரது ஆரம்ப வாழ்க்கை சற்று கடினமாகவே அமைந்துள்ளது. சிறுவயதில் வறுமையின் காரணமாக நாடகங்களில் நடித்த தொடக்கினார். பின்னர் சினிமாவின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக பல பட நிறுவனங்களில் வாய்ப்புகள் தேடி அலைந்தார். அதன் பிறகு கிடைத்த வாய்ப்புகளை கச்சிதமாக பயன்படுத்தி துணை கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
பின்னர் படிப்படியாக முன்னேறி கதாநாயகன் வாய்ப்பை பெற்றார். ஒரு படத்திற்கு வாய்ப்புகள் அமைவது எளிதான காரியம் இல்லை. எம்.ஜி.ஆருக்கு அது கடினமாக அமைந்தாலும் பின் நாட்களில் சினிமா வாய்ப்புக்காக அவரைத் தேடி வரும் கலைஞர்களுக்கு அப்படி அமைவதில்லை. தன்னால் முடிந்த உதவிகளை என்றைக்குமே செய்ய யோசித்ததே இல்லை என்று சொல்லலாம். அதேபோல திறமை எங்கிருந்தாலும் அதைக் கண்டறிந்து அதை ஊக்குவித்து வளர்ப்பது இவரது தனிச்சிறப்பு. அப்படி எம்.ஜி.ஆரால் கண்டெடுக்கப்பட்டவர் தான் இயக்குனர் மகேந்திரன். இவர் தான் படிக்கும் கல்லூரி விழாவில் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது எம்.ஜி.ஆரும் அதில் கலந்து கொண்டார்.
அப்பொழுது மகேந்திரன் பேசுகையில், “நம் கல்லூரியில் பலர் காதலித்து வருகிறார்கள் பின்னர் இதை ஊரார் அவமானப்படுத்துகிறார்கள். ஆனால் சினிமாவில் எம்.ஜி.ஆர் பல நடிகைகளை காதலிக்கிறார் ஆனால் ஊரே ரசித்து கொண்டாடுகிறது” என்று பேசினார். இதைக் கேட்ட எம்.ஜி.ஆர், “உங்கள் பேச்சு நல்ல கருத்து மற்றும் நகைச்சுவை உணர்வுடன் இருக்கிறது நீங்கள் சிறந்த விமர்சனாராக இருக்க தகுதியானவர்” என்று கூறிவிட்டு சென்றார். அவரின் பேச்சு எம்.ஜி.ஆருக்கு பிடித்து போய்விட்டது அதன் காரணமாக தன்னை வந்து பார்க்கும் படி சொன்னார்.
மகேந்திரனும் தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்துவிட்டு துக்ளக் பத்திரிகையில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். பின்னர் ஒரு நாள் மகேந்திரன் எம்.ஜி.ஆரை சந்தித்தார். அப்பொழுது எம்.ஜி.ஆர் தன்னுடைய கனவு படமான பொன்னியின் செல்வன் நாவலின் உரிமையை வாங்கி அதற்கு திரைக்கதை எழுதும் பணியை அவருக்கு ஒப்படைத்தார். அதற்காக மகேந்திரனுக்கு சம்பளத்தையும் வழங்கினார். ஆனால் எம்.ஜி.ஆரின் கடைசி காலம் வரை அதை படமாக்க முடியவில்லை. அதன் பிறகு எம்.ஜி.ஆரின் நாடக கம்பெனிக்கு ஒரு கதையை தயார் செய்து கொடுத்தார்.
அவரின் திறமையை அன்றே கண்டுகொண்ட எம்.ஜி.ஆருக்கு அவரது திரைக்கதை எழுதும் திறமை மேலும் அவரை ஈர்த்தது. அதனால் தனது ‘காஞ்சித் தலைவன்’ படத்தில் உதவியக்குனராக பணியாற்றும் வாய்ப்பை கொடுத்தார். அதன் பிறகு ‘முள்ளும் மலரும்’, ‘உதிரிப்பூக்கள்’ உள்பட பல படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களின் பட்டியலில் இடம் பிடித்தது மட்டுமின்றி தமிழ் சினிமாவிற்கு காலத்தால் அழியாத படங்களையும் வழங்கி உள்ளார்.