திரையுலகில் அறிமுகமாகும் ஒவ்வொரு நடிகரும் தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களும் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக கஷ்டமான காட்சிகளில் கூட நடித்து எப்படியேனும் படத்தின் வெற்றிக்காக உழைப்பர். இருந்த போதிலும் சில படங்கள் தோல்வியைத் தழுவி விடுகின்றன. சினிமாவினைப் பொறுத்தவரை வெற்றி என்பது யாருக்குமே நிரந்தரமில்லை.
இப்படி ஒரு சம்பவம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்குக் கூட நடந்திருக்கிறது. மேடை நாடகங்களில் நடித்து பின் தனது கடின உழைப்பால் சதிலீலாவதி படத்தின் மூலம் முதன்முதலாக சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார் எம்.ஜி.ஆர். ஆனால் அவர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகே ஹீரோவாகும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது. அதுவரை துணை கதாபாத்திரங்களிலேயே நடித்து வந்தார்.
எம்.ஜி.ஆர். முழு ஹீரோவாக முதன்முதலில் ராஜகுமாரி படத்தில் தான் தோன்றினார். அந்தப் படம் வெற்றி பெற்று அவருக்குத் திரைவாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது. ஆனால் அதன்பிறகும் சற்று திரையில் சோடை போனார். அந்த நேரத்தில் தான் பராசக்தி திரைப்படம் வெளிவந்து நடிகர் திலகத்தினை உலகமே உச்சி நுகர்ந்து கொண்டாடியது.
தொடர்ந்து சிவாஜிக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. எம்.ஜி.ஆர் யோசித்தார் எங்கே தவறு செய்கிறோம் என்று. அப்போது அவரின் படங்களில் புரட்சிப் பாடல்கள் அவ்வளவாக இடம்பெற வில்லை. அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்தது.
அதன்பின் தான் நடித்த மலைக்கள்ளன் படத்தில் ‘எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே‘ என்ற பாடலானது எம்.ஜி.ஆரின் அடுத்தடுத்த திரை வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி போட்டது. இந்தப்பாடல் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தைக் கொடுக்க அப்போது எம்.ஜி.ஆர் முடிவு செய்தார் இனி தான் நடிக்கும் படங்களில் ஒன்றிரண்டு கொள்கைப் பாடல்கள் இருக்க வேண்டும் என்று.
எனக்கு ‘பரட்டை‘ உனக்கு ‘சித்தப்பு‘ நல்லா மாட்டிக்கிட்ட.. சரவணனைக் கலாய்த்த ரஜினி..
ஆனால் அப்போது கவிஞர்கள் தஞ்சை ராமையாதாஸ், உடுமலை நாராயணகவி போன்றோர் தலைமுறை தாண்டி விட்டதால் இளம் கவிஞர் ஒருவரை பயன்படுத்த நினைத்தார். இந்தச் சமயமத்தில் தான் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தை சந்திருக்கிறார் எம்.ஜி.ஆர். அப்போது எம்.ஜி.ஆருக்காக ஒரு பாடலை பட்டுக் கோட்டையார் எழுத உடனே மகிழ்ந்து போன எம்.ஜி.ஆர். தான் இயக்கி நடித்த நாடோடி மன்னன் படத்தில், ‘சும்மா கிடந்த நிலத்தை.., தூங்காதே தம்பி தூங்காதே.. போன்ற பாடல்களை வைத்தார்.
இதற்கான காட்சி இல்லையென்றாலும் பாடலுக்காக புதிதாக காட்சியை இணைத்து மாபெரும் வெற்றிப் படமாக்கினார். இதுபோன்ற தத்துவம், புரட்சி, கொள்கைப் பாடல்களை பட்டுக்கோட்டையாரின் வரிகளைப் பயன்படுத்தி பின்னாளில் அரசியலிலும், திரையிலும் பெரிய ஆளுமையாக வலம் வந்தார் எம்.ஜி.ஆர்.