திரைக்கதை மன்னனான பாக்கியராஜின் இயக்கத்தில் 1984-ல் வெளிவந்த திரைப்படம் தான் தாவணிக் கனவுகள். கிராமத்தில் 5 தங்கைகளுடன், சரியான வேலை இல்லாமல் இருக்கும் ஒரு இளைஞன் எப்படி சினிமாவில் சான்ஸ் பெற்று புகழ்பெற்ற ஹீரோவாக மாறுகிறார் என்பதுதான் கதை. 5 தங்கைகளின் பொறுப்புள்ள அண்ணனாக பாக்யராஜ் நடிப்பில் அசத்தியிருப்பார்.
மேலும் பாக்யராஜுடன் இந்தப் படத்தில் நடித்த மற்றொரு பெரிய நடிகர் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். நேதாஜி சுபாஷ் சந்திரபோசுடன் ராணுவத்தில் பணிபுரிந்து பின்னர் கிராமத்தில் வசிக்கும் நாட்டுப்பற்றுடைய வயதான பெரியவர் கதாபாத்திரம். பாக்யராஜின் அத்தனை முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும் சிவாஜி படம் முழுக்க எமோஷனல் காட்சிகளிலும், பாக்யராஜை திட்டும் காட்சிகளிலும் கலக்கியிருப்பார்.
இந்தப் படம் திரையரங்குகளில் வெற்றி கரமாக ஓடியது. இளையராஜாவின் இசையில் செங்கமலம் சிரிக்குது, ஒரு நாயகன் உதயமாகிறான் போன்ற பாடல்கள் அப்போது ஹிட் ஆகின. பாக்கியராஜின் ஆசான் பாரதிராஜாவும் அவரை நடிகராக்கும் ஒரு காட்சியில் நடித்திருப்பார். இந்தப் படத்தின் பிரிவியூ ஷோவானது சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் போடப்பட்டது.
ரஜினியின் படத்தை பூஜையறையில் வைத்து வழிபட்ட வி.கே.ராமசாமி.. சூப்பர் ஸ்டாருக்கு இப்படி ஓர் நல்ல மனசா?
இந்த ஷோவில் அப்போது எம்.ஜி.ஆர் கலந்து கொண்டார். மேலும் முதலமைச்சராகவும் இருந்தார். அதேவேளையில் சிவாஜியும் அங்கு வந்திருந்தார். இரு லெஜன்டுகளும் இருப்பதை ஒருவரிடம் ஒருவர் காட்டிக் கொள்ளாத பாக்யராஜ் இன்டர்வெல் வேளையில் எழுந்து சிவாஜியைப் பார்க்கச் சென்றிருக்கிறார்.
இவ்வளவு நேரம் எங்கே இருந்தாய் என்று சிவாஜி கேட்க, பட வேலையாக லேப் சென்றிருப்பதாகக் கூறினார். ஆனால் இதை நம்பாத சிவாஜி உண்மையைச் சொல் என்றார். அப்போது எம்.ஜி.ஆர் வந்திருப்பதைச் கூறிருக்கிறார் பாக்கியராஜ்.
உடனே சிவாஜி அவரைத் திட்டி எம்.ஜி.ஆர் இருக்கும் போது அவரை கவனிக்காமல் என்னை ஏன் சந்திக்க வந்தாய் என்று கேட்டுள்ளார். மேலும் இப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சர் நீ சென்று அவரைக் கவனி படம் முடிந்ததும் நாம் பேசிக் கொள்ளலாம் என்று அனுப்பியிருக்கிறார் சிவாஜி.
பின்னர் எம்.ஜி.ஆரிடம் வந்த பாக்யராஜ் எங்கே இவ்வளவு நேரம் என்று கேட்க சிவாஜியிடம் சொன்ன அதே பதிலைச் சொல்லியிருக்கிறார். பின்னர் மீண்டும் உண்மையைக் கூறி சிவாஜி வந்திருப்பதைக் கூறியிருக்கிறார். உடனே எம்.ஜி.ஆர்., அவர் இந்தப் படத்தின் ஹீரோ. அவரிடம் சென்று அமராமல் என்னருகே இருக்கிறாய் போய் அவரைக் கவனி என்று பாக்கியராஜை அனுப்பியிருக்கிறார்.
எப்படி இருந்திருக்கிறது பாருங்கள் இருவரின் நட்பும். ஒருவர் மேல் ஒருவர் எவ்வளவு மரியாதையும், நட்பும் கொண்டிருந்தனர் என்பதற்கு இச்சம்பவமே சாட்சி. இத்தகவலை சினிமா பத்திரிக்கையாளர் சித்ரா லட்சுமணன் நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்து கொண்டார்.