ஒரே நேரத்தில் எம்.ஜி.ஆர்., சிவாஜியிடமிருந்து வந்த பரிசு.. திறந்து பார்த்து நெகிழ்ந்து போன வசனகார்த்தா ஆரூர்தாஸ்

Published:

இவருடைய வசனங்களை உச்சரிக்காத அந்தக் கால தமிழ் சினிமா பிரபலங்கள் வெகு சிலரே என்று தான் கூறு வேண்டும். அந்த அளவிற்கு தனது உரைநடையாலும், வசனங்களாலும் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினிகணேசன் என அந்தக் கால புகழ்பெற்ற நடிகர்களின் ஆஸ்தான வசனகார்த்தாகப் பணியாற்றியவர் ஆரூர் தாஸ். திருவாரூரில் பிறந்து யேசுதாஸ் என்னும் இயற்பெயர் கொண்டவரான அவர் தனது ஊரின் பற்று காரணமாக ஆரூர்தாஸ் என்று அழைக்கப்பட்டார்.

மேலும் ஆரூரான் என்றும் திரைத்துறையில் அழைப்பது வழக்கம். மொழிமாற்றுப் படங்களுக்கு உரையாடல் எழுதிய ஆரூர்தாஸ் அதன்பின் ஜெமினிகணேசன், சாவித்ரி நடித்த சௌபாக்கியவதி திரைப்படத்திற்கு முதன்முதலாக உரையாடல் எழுதினார். இவரது திறமையைக் கண்டு வியந்த சாவித்ரி இவரை சிவாஜியிடம் அறிமுகம் செய்து வைத்தனர். அப்படி உருவான படம் தான் பாசமலர்.

பாசமலர் படத்தின் அழியாத புகழ் கொண்ட வசனங்கள் இவரது கைவண்ணத்தில் உருவானது. தொடர்ந்து தேவர்பிலிம்ஸ் படங்களுக்கும் ஆஸ்தான வசன, திரைக்கதை ஆசிரியராக விளங்கினார். மேலும் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த பல படங்களுக்கு அவருக்கு வசனம் எழுதியது ஆரூர்தாஸே.

முதல் படத்திலேயே எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு டஃப் கொடுத்து சூப்பர் ஹிட் கொடுத்த ஜெய் சங்கர்..

இப்படி 500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றியிருக்கும் ஆரூர்தாஸ்-க்கு ஒருமுறை எம்.ஜி.ஆரும், சிவாஜியும் ஒரே நேரத்தில் அவரே நினைத்துப் பார்க்காதவாறு ஆச்சர்ய பரிசை வழங்கி கௌரவித்திருக்கின்றனர். 1962-ல் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான தாயைக் காத்த தனயன் மற்றும் சிவாஜி நடிப்பில் உருவான படித்தால் மட்டும் போதுமா ஆகிய இரு படங்கள் வெளியாகின. இந்த இரண்டு படங்களுக்குமே ஆருர்தாஸ் தான் வசனம். இந்த இரண்டு படங்களுமே 100 நாட்களைக் கடந்து மாபெரும் வெற்றி பெற்றது. இதனால் இருவரும் மனம் மகிழ்ந்தனர்.

ஆரூர்தாஸை ஒருமுறை எம்.ஜி.ஆர் அழைத்து இதுவரை நீ என்னிடம் ஏதும் கேட்டதில்லை. நான் உனக்கு ஏதாவது செய்யவேண்டும் என நினைக்கிறேன் என்ன வேண்டும் என்று கேட்டிருக்கிறார். ஆரூர்தாஸ் பதிலுக்கு உங்கள் அன்பு மட்டும் போதும் என பதிலளித்திருக்கிறார். அதேபோல் சிவாஜியும் அதே காலகட்டத்தில் ஆரூர்தாஸை அழைத்து எம்.ஜி.ஆர் கேட்டது போலவே கேட்க, ஆரூர் தாஸும் அதே பதிலையே கூறியிருக்கிறார்.

இப்படி இருவருமே அவரை அழைத்து பாராட்டிய போது இருவரின் மனதிலும் ஒரே எண்ணம் உதித்ததைத் கண்டு ஆச்சர்யப்பட்டிருக்கிறார் ஆரூர்தாஸ். அதன்பின் சில நாட்கள் சென்றன. எம்.ஜி.ஆர் ஆபிஸிலிருந்து அவரை உடனே வரச் சொல்லி போன் வர அவரும் அங்கு சென்றிருக்கிறார். அப்போது எம்.ஜி.ஆர் ஆருர்தாஸூக்கு பெரிய வெள்ளித்தட்டில் நான்கு மூலைகளிலும் தங்கம் பதித்து நடுவில் எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் தாயைக் காத்த தனயன் வெற்றிக்கு ஆரூர்தாஸ் அவர்களுக்கு அன்பளிப்பு என்று பொறிக்கப்பட்டிருந்தது.

அதேபோல் மறுநாள் சிவாஜி பிலிம்ஸ் சார்பில் உள்ளங்கையை விட அகலமான சுமார் 3 சவரனுக்கு மேல் தங்கப் பதக்கம் ஒன்று ஆரூர்தாஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அதில் சிவாஜி பிலிம்ஸ் படித்தால் மட்டும் போதுமா 100 வது நாள் வெற்றி விழா என்று பொறிக்கப்பட்டிருந்தது.

இப்படி தன் படத்தின் வெற்றிக்குக் காரணமான ஆரூர்தாஸை அழைத்து இரு பெரிய இமயங்களும் கௌரவித்து வழங்கிய அந்த பரிசுகளை தன் வீட்டின் வரவேற்பறையில் வைத்து அழகு பார்த்தாராம் வசனகார்த்தா ஆரூர்தாஸ்.

மேலும் உங்களுக்காக...