ஊரையே விஜய் ரசிகர்களாக மாற்றிய மாரி செல்வராஜ்.. எல்லாத்துக்கும் காரணமா இருந்தே ஒரே திரைப்படம்..

Published:

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் வளர்ந்து கொண்டே வருபவர் தான் மாரி செல்வராஜ். நிறைய வேலை செய்து பின்னர் இயக்குனர் ராமிடம் பணிபுரிந்து பின்னர் பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் இயக்குனர் என்ற அந்தஸ்தும் மாரி செல்வராஜுக்கு கிடைத்திருந்தது. முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதுடன் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் தனது படம் பற்றி பேச வைத்திருந்தார்.

ஒரே படத்தில் மட்டும் ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை குரலை எடுத்துரைக்காமல் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அடுத்தடுத்து அதையே நிரூபித்த மாரி செல்வராஜ், கர்ணன், மாமன்னன் உள்ளிட்ட திரைப்படங்களையும் இயக்கி இருந்தார். இந்த இரண்டு திரைப்படங்கள் மீது எதிர்மறையான விமர்சனங்கள் இருந்தாலும் கூட, பல விவாதங்கள் நிறைய நாட்களுக்கு நிகழ்ந்து கொண்டே இருந்தது.

இப்படி மாரி செல்வராஜ் இயக்கும் திரைப்படங்கள் எப்போதுமே சமுதாயத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வரும் சூழலில் அவரது இயக்கத்தில் நான்காவது திரைப்படமாக வாழை என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. அவரது முந்தைய திரைப்படங்களை போல வாழை படமும் ஏழ்மை மக்களின் வலியை எடுத்துரைக்கும் வகையில் அமைந்திருந்தது.

மேலும், மிகுந்த பொழுது போக்கு அம்சங்களுடன் வாழை திரைப்படம் இருக்க, க்ளைமாக்சில் மிக பெரிய வலியை கதையில் சொல்லி இருந்த மாரி செல்வராஜ், அது அவரது வாழ்வில் நடந்த நிஜ சம்பவம் என்றும் கூறி இருந்தார். அத்துடன் அவரின் திரை பயணத்தில் வாழை திரைப்படம் மிக முக்கியமான இடத்தையும் பிடித்துள்ளது.

படத்தில் சமுதாய பிரச்சனைகளை பேசும் மாரி செல்வராஜ், தீவிர விஜய் ரசிகன் என்பது பலரும் அறிந்ததே. ஆனால் தான் எப்படி விஜய் ரசிகர் ஆனார் என்பது பற்றி சமீபத்தில் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார் மாரி செல்வராஜ்.

“விஜய் ஆரம்ப கட்டத்தில் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை என காதல் படங்களாக நடித்ததால் நான் அவரின் ரசிகன் ஆகிவிட்டேன். பூவே உனக்காக படத்தில் விஜய்யை நடிகை கழற்றி விட்டார் என எங்கள் ஊரில் இருந்த அனைவருமே கலாய்த்தார்கள். ஆனால், நான் அதை பார்த்து கண்ணீர் சிந்திய போது தான் எனக்குள் கலை உணர்வு இருப்பது தெரிந்தது.

நான் விஜய் ரசிகன் என்பதை தாண்டி பூவே உனக்காக கதை எனக்கு மிகவும் கனெக்ட் கொடுத்தது. அதை பார்த்து சீக்கிரம் காதலித்து தோற்று போக வேண்டும் என்று கூட சிறு வயதில் நினைத்திருந்தேன். அதே போல அப்போது வந்த விஜய் பாடல்களுக்கு நடனம் ஆடுவேன். அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் ஊரில் இருந்த அனைவருமே விஜய் ரசிகர்களாக மாறி விட்டனர்” என மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

அவர் விஜய் ரசிகர் என்பதும், ரசிகர் மன்றத்தில் இருந்தார் என்பது கூட பலருக்கும் தெரிந்தாலும் அவர் எந்த சமயத்தில் இருந்து விஜய் ரசிகராக மாறினார் என்பது பற்றிய பின்னணி, பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

மேலும் உங்களுக்காக...