கடந்த 1974ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கத்தில் சுஜாதா நடிப்பில் உருவான அவள் ஒரு தொடர்கதை என்ற திரைப்படத்தில் ஒரு குடும்பத்தின் மூத்த பெண் தனது குடும்பத்திற்காக செய்யும் தியாகங்கள் குறித்து கே.பாலசந்தர் அற்புதமாக படமாக்கியிருப்பார். கிட்டத்தட்ட 13 வருடங்கள் கழித்து அதே படத்தை மீண்டும் மனதில் உறுதி வேண்டும் என்ற படமாக கே பாலச்சந்தர் எடுத்ததாக விமர்சனங்கள் வந்தது உண்டு.
தனது குடும்பத்தின் பொருளாதார சுமையை தொடர்ந்து சுமக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு பிரச்சினைகளையும் தியாகங்களையும் செய்யும் பெண்ணின் கதாபாத்திரம்தான் மனதில் உறுதி வேண்டும் திரைப்படத்தில் சுகாசினி நடித்த நந்தினி கேரக்டர்.
காதல் கோட்டை ஹீரா வாழ்க்கை அனுபவங்கள்.. இப்போது என்ன செய்கிறார்..?
இந்த படம் பெண்ணியம் அழுத்தமாக பேசப்படும் படங்களில் ஒன்று. ஆண்கள் ஆதிக்கம் அதிகம் உள்ள திரைப்படத்துறையில் பெண்களும் சாதிக்க முடியும் பெண்களும் முக்கிய கேரக்டரில் நடித்து சாதனை செய்ய முடியும் என நிரூபித்த நடிகைகளில் ஒருவர் சுகாசினி.
கதாநாயகியை கவர்ச்சி பதுமைகளாக மட்டுமே பயன்படுத்தப்பட்ட வந்த நிலையில் பாலச்சந்தர் தான் பெண்களை மரியாதையான கேரக்டரில் அறிமுகம் செய்தவர். அரங்கேற்றம் லலிதா, அவள் ஒரு தொடர்கதை கவிதா, அபூர்வ ராகங்கள் பைரவி, அக்னி சாட்சி கண்ணம்மா வரிசையில் மனதில் உறுதி வேண்டும் நந்தினியும் ஒருவர்.
இந்த படத்தில் தான் கே.பாலச்சந்தர் பத்துக்கும் மேற்பட்ட நடிகர்களை அறிமுகம் செய்திருந்தார். அவர்களில் விவேக், எஸ்பிபி, ரமேஷ் அரவிந்த், லலிதாகுமாரி ஆகியோர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
ஒரு பெரிய குடும்பத்தைச் சேர்ந்த நந்தினி பொருளாதார சுமையை தனது தலையில் ஏற்றுக்கொண்டு நர்ஸ் வேலையை அர்ப்பணிப்புடன் செய்து வருவார். சென்னையில் வேலை பார்த்துக்கொண்டு ஊரில் உள்ள தனது குடும்பத்திற்கு பணம் அனுப்பி அவர்களை மகிழ்ச்சியோடு வாழ வைப்பார்.
தனது சொந்த சோகங்கள் குடும்பத்திற்கு தெரிந்து விடக்கூடாது என்பதையும் அவர் மறைத்து இருப்பார். குறிப்பாக திருமணத்திற்கு பின்னர் குடும்ப வன்முறை காரணமாக அவர் விவாகரத்து பெற்று விடுவார். ஆனால் தன்னுடைய விவாகரத்து குடும்பத்தினருக்கு தெரிந்தால் அவர்கள் வருத்தப்படுவார்கள் என்று அவர் அதை சொல்லாமல் மறைத்து வைப்பார். அப்படி ஒரு அற்புதமான கதாபாத்திரத்தில் சுகாசினி இந்த படத்தில் நடித்திருந்தார்.
அதேபோல் இந்த படத்தின் வசனங்களும் அவள் ஒரு தொடர்கதை வசனங்கள் போலவே கன்னத்தில் அறைவது போல் இருக்கும். தன்னை காதலிப்பதாக ஒரு நோயாளி அவரிடம் கூறிய போது ‘நான் இங்கு ஒரு சிஸ்டர், ஒரு சிஸ்டரை எப்படி நீங்கள் காதலிக்க முடியும்?’ என்று கன்னத்தில் அறைவது போல் கூறுவார்.
எஸ்பிபி இந்த படத்தில் சுகாசினிக்கு மேலதிகாரியாக உள்ள டாக்டராக இருந்தாலும் சுகாசினியை பார்த்து பயப்படும் ஒரு கேரக்டரில் நடித்திருப்பார். எஸ்பிபியின் ஆயிரக்கணக்கான பாடல்களை கேட்டவர்களுக்கு அவரை முதன்முதலாக ஒரு நடிகராக பார்த்தது ஆச்சரியம்தான்.
காதலின் போது எளிமையான முகத்தையும் காதலுக்கு பின், திருமணத்திற்கு பின் நிஜ முகத்தை காட்டும் ஆண்களை தோலுரிக்கும் வகையில் இருக்கும் சுகாசினியின் கணவர் கேரக்டரில் சந்திரகாந்த என்பவர் நடித்திருப்பார். அதே நேரத்தில் இரண்டாவது திருமணம் செய்த பிறகு சிறுநீரகம் பழுதான நிலையில் அவருக்கு சிறுநீரக தானம் செய்யும் சுகாசினியின் கால்களை பாசமுடன் முத்தமிடும் இறுதி காட்சிகளில் பரிதாபத்தை வரவழைத்திருப்பார்.
அதேபோல் நடிகர் விவேக் இந்த படத்தில் நான் காமெடி நடிகராக அறிமுகமானார். முதல் படத்திலேயே அவர் கலக்கி இருப்பார். சென்னைக்கு வந்து தனது அக்காவை சந்தித்தபோது அவர் விவாகரத்து ஆனது தெரிந்ததும் அதிர்ச்சி அடைவதும், அதை தனது வீட்டில் சொல்லவும் முடியாமல் மறைக்கவும் முடியாமல் தடுமாறுவதுமான காட்சிகளில் சூப்பராக நடித்திருப்பார்.
85 ரூபாயுடன் சென்னை வருகை.. இளையராஜா வீட்டில் எடுபிடி.. பிரபல இசையமைப்பாளரின் வெற்றிக்கதை..!
விவாகரத்துக்கு பின்னர் சுகாசினியை வளைத்து வளைத்து காதலிக்கும் எழுத்தாளர் கேரக்டரில் ஸ்ரீதர் என்பவர் நடித்திருப்பார். சுகாசினி ஒரு கட்டத்தில் அவரை காதலிக்க முடிவு செய்த நிலையில் எஸ்பிபி சொன்ன ஒரு வார்த்தை காரணமாக திடீர் திருப்பமாக தனது திருமண முடிவில் இருந்து பின்வாங்கி விடுவார்.
எஸ்பிபி தனது கேரக்டரில் அவ்வப்போது தனது மனைவிக்கு பயப்படுவதாக சுகாசினிடம் கூறி வருவார். ஆனால் அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை என்றும் மனைவி என்பது ஒரு கற்பனை கேரக்டர் என்றும், தனது டாக்டர் தொழிலை முழுமையாக, ஈடுபாட்டுடன் பார்க்க வேண்டும் என்றால் திருமணம் செட் ஆகாது என்றும் கிளைமாக்ஸில் எஸ்பிபி கூறுவார். அதை ஒரு வேதவாக்காக எடுத்துக் கொண்டே இரண்டாவது திருமணத்திற்கு சம்மதிக்காமல் தொடர்ச்சியாக தனது குடும்பத்திற்காக நர்ஸ் வேலை செய்து, தனது வாழ்க்கையை மருத்துவ தொழிலுக்காகவும், குடும்பத்திற்காகவும் தியாகம் செய்ய சுஹாசினி எடுக்கும் முடிவு தான் இந்த படத்தின் அற்புதமான கிளைமாக்ஸ்.
இந்த படத்தில் தான் நடிகர் ரமேஷ் அரவிந்த் நடிகராக அறிமுகமானார். ஒரு அரசியல் தலைவருக்கு விசுவாசமாக இருந்து பிறகு தன்னை எரித்துக் கொள்ளும் ஒரு அப்பாவி அரசியல் கதாபாத்திரத்தை கண் முன் நிறுத்தியிருப்பார். சினிமா மற்றும் அரசியல் மோகத்தால் குடும்பத்தை மறந்து தான்தோன்றியாக திரியும் இளைஞர்களின் முட்டாள் தனத்தை இவரது கேரக்டர் மூலம் கே.பாலச்சந்தர் வெளிப்படுத்தியிருப்பார்.
அதேபோல் இந்த படத்தில் தான் நடிகை லலிதாகுமாரி அறிமுகமானார். அவர் சுஹாசினியின் வீட்டில் வேலை செய்யும் பெண்ணாக நடித்திருப்பார். இந்த படத்திற்கு பிறகு அவர் பல படங்களில் தனது திறமையை நிரூபித்தார்.
இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் ரஜினி, சத்யராஜ் மற்றும் விஜயகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார்கள். இந்த பாடலில் கமல்ஹாசனையும் நடிக்க கே.பாலச்சந்தர் வலியுறுத்தியதாகவும், ஆனால் மகள் உறவான சுகாசினியுடன் ஜோடியாக நடனமாட முடியாது என கமல்ஹாசன் மறுத்து விட்டதாகவும் கூறப்படுவதுண்டு.
வில்லன் நடிகரை திருமணம் செய்த காமெடி நடிகை லலிதா குமாரி.. விவாகரத்து பின்னும் தைரியமான முடிவு..!
மொத்தத்தில் அவள் ஒரு தொடர்கதை திரைப்படத்தையே அவர் மீண்டும் காலத்துக்கு தகுந்த மாதிரி சில காட்சிகளை மாற்றி எடுத்து இருந்தாலும், பல நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் வசூல் அளவில் ஒரு வெற்றிப் படமாகும்.