மதம் சம்பந்தமான பிரச்சனைகள் நாட்டில் அவ்வப்போது பெரும் பிளவுகளை உண்டாக்கி வருகின்றன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அழுத்தமான திரைக்கதையுடன் உருவாகியுள்ள படைப்பு தான் இந்த லால் சலாம். ஒரு கிரிக்கெட் விளையாட்டு, அதில் உள்ள உணர்வுப்பூர்வமான சம்பவங்கள், ஊரில் தேரோட்டம் இப்படி நடக்கும் கதை தான் லால் சலாம். படத்தில் நடித்த அனைவருமே செம மாஸான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
படத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில்தேவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் விஷ்ணுவிஷால் முதன்முறையாக ரஜினியுடன் கைகோர்த்துள்ளார்.
லால் சலாம் வரும் 9ம் தேதி ரிலீஸ் ஆகிறது. சூப்பர்ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா படத்தை இயக்கியுள்ளார். ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ளார். படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர்களும், டெக்னீஷியன்களும் பேசினர். அவர்களில் நடிகர் தம்பி ராமையா இவ்வாறு தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
இன்று கிரிக்கெட்டைத் தவிர்த்து விட்டு இளைஞர்கள் கிடையாது. வெறிகொண்டு பார்க்கக்கூடிய கிரிக்கெட் ஆட்டங்களும், அதில் உள்ள உணர்வுப்பூர்வமான காட்சிகளும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன.
நீண்ட நாள்களாக குழந்தைகளை அழைத்துக் கொண்டு தியேட்டருக்குப் போக முடியவில்லையே என்ற ஏக்கத்தில் உள்ள குடும்பத்தினருக்கு ஏகப்பட்ட உணர்வுப்பூர்வமான காட்சிகள் படத்தில் கொட்டிக் கிடக்கின்றன. இங்கு மதங்கள் மூன்றாக இருக்கலாம். மனங்கள் ஒன்றாகத் தான் இருக்க வேண்டும். இந்தப்படத்திற்கு அற்புதமான திரைக்கதை அமைந்துள்ளது.
நிறைய நட்சத்திரப் பட்டாளங்கள் உள்ளன. படத்தில் சூப்பர்ஸ்டாருக்கு கேமியோ ரோல் தான் என்றாலும் படம் முழுக்க வருகிறார் சூப்பர்ஸ்டார் ரஜினி. அவரோட மகள் தான் இயக்குனர். தலைவரை சும்மா விட்டுருவாங்களா?
25 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக இளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்த நடிகவேள் அய்யாவின் தவப்புதல்வி நிரோஷா இந்தப் படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார்.
கதையைத் தவிர்த்து விட்டு இந்த தமிழ்சினிமா எங்கேயோ போய்க்கிட்டு இருக்குன்னு விமர்சனம் வைக்கிறாங்க. அதற்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இந்த லால் சலாம் என்ற படைப்பு நிச்சயமாக அற்புதமான தீனியைக் கொடுக்கும்.
எந்த நாளும் தமிழகத்தில் மதமாச்சரியம் நடக்கவே நடக்காது என்பதற்கு மிகப்பெரிய ஒரு தடுப்பு அணை தான் இந்த லால்சலாம். எனக்கும் இந்தப் படத்தில் ஒரு அருமையான ரோலை கொடுத்துள்ளார்கள்.
செந்தில் பேசும்போது, படத்தில் அருமையான கதை. இந்தக் கதையை சொல்லும்போதே எனக்கு ரொம்ப பீலிங்கா வந்துருச்சி என்கிறார்.