போன உசிரு திரும்ப வருமா..? எங்களைப் பற்றி யோசிக்காதீங்க.. KGF யாஷ் உருக்கமான பதிவு

By John A

Published:

பிரசாந்த் நீல் இயக்கத்தில் KGF படம் மூலம் இந்திய சினிமா உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகர் யாஷ். சத்தமே இல்லாமல் நகர்ந்து கொண்டிருந்த கன்னட சினிமாவை KGF என்ற ஒரே படத்தின் மூலம் ஒட்டுமொத்த சினிமா உலகத்தையே சாண்டல்வுட் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது இவரது ஆக்சன் காட்சிகள். இந்திய சினிமாவின் வரலாற்றையே புரட்டிப் போட்ட KGF படம் வசூலிலும் மகத்தான சாதனை புரிந்தது. ஆக்சன், காதல், அம்மா செண்டிமெண்ட் என பக்கா மசாலா படமாக அரைத்து அதை விறுவிறு திரைக்கதையாலும், பிரமிக்க வைக்கும் இசையாலும் உயிர் கொடுத்து ஹிட் வரிசையில் இணைத்தனர்.

இதன்பிறகு யாஷ்-ன் புகழ் இந்தியா முழுவதும் பரவியது. இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்தது. தற்போது இந்த ரசிகர் பட்டாளமே இவருக்கு பெரிய தலைவலியைக் கொடுத்திருக்கிறது. நடிகர் யாஷின் ஒவ்வொரு பிறந்த நாளன்றும் அவரது ரசிகர்கள் பிரம்மாண்ட பேனர்கள் வைத்து அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பது வழக்கம்.

அந்த வகையில் ஜனவரி 8 அவரது பிறந்தநாளுக்காக கர்நாடகாவின் கடக் மாவட்டத்தைச் சேர்ந்த ஹனுமந்த் (24), முரளி (20), நவீன் (20) ஆகிய மூவரும் நடிகர் யஷ் பிறந்தநாளை முன்னிட்டு சூரனகி என்ற கிராமத்தில் டிஜிட்டல் பேனர் வைக்க முடிவு செய்தனர்.  அப்போது ஜனவரி 7 நநள்ளிரவில் அங்கிருந்து மின்கம்பம் ஒன்றில் ஏறி பேனரை கட்டிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களுக்கு உதவி செய்த மூன்று பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தம்பியுடன் ஜோடி சேர்ந்தாச்சு.. அடுத்து அண்ணணுக்குத்தான்.. சூர்யா ஜோடியாகும் அதிதி ஷங்கர்.. வெளியான ரகசிய அப்டேட்

உயிரிழந்த ரசிகர்களின் வீட்டுக்கு நேரில் சென்ற நடிகர் யாஷ் அவர்களது பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவுவதாகவும் உறுதி அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ரசிகர்கள் என்னை முழுமனதாக வாழ்த்த வேண்டும் என்று நினைத்தால், நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே வாழ்த்துங்கள். அதுவே எனக்கு போதுமானது. இதுபோன்ற துயரமான சம்பவங்கள் என்னுடைய சொந்த பிறந்தநாளைக் கண்டே பயம் கொள்ளச் செய்கின்றன. உங்களுடைய ரசிக மனப்பான்மையை இப்படி காட்டக் கூடாது.

இவ்வாறு அசம்பாவிதங்கள் நடந்தால் உங்கள் குடும்பத்தின் கதி என்ன? பண உதவி யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் இறந்தவர்கள் வர முடியுமா? எங்களைப் பற்றி யோசிக்க வேண்டாம். இனி பேனர்கள் வேண்டாம். தாய் தந்தையை மதித்து நற்பணிகள் செய்யுங்கள் அதுவே எனக்குப் போதும்..“ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் யாஷ்.