ஹாலிவுட் திரைப்படங்களை தழுவி பல இந்திய திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக தமிழில் ஹாலிவுட் படங்களின் தாக்கத்தில் உருவான படங்கள் அதிகம்.
அந்த வகையில் 1981 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த கழுகு என்ற திரைப்படம் 1975ஆம் ஆண்டு வெளியான ‘ரேஸ் வித் த டெவில்’ என்ற ஹாலிவுட் படத்தின் பாதிப்பில் எடுக்கப்பட்டது.
ஒரே தீபாவளியில் ரிலீஸ் ஆன சிவாஜி, கமல், ரஜினி படங்கள்.. ஆனால் ஜெயித்தது பாக்யராஜ் தான்..!
பொல்லாதவன், ஜானி, முரட்டுக்காளை, தீ ஆகியவை ரஜினிகாந்திற்கு தொடர் வெற்றி திரைப்படங்களாக அமைந்தது. அதனையடுத்து கழுகு திரைப்படம் வித்தியாசமாக அமைந்தது. ஆனால் வசூலில் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
1981ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த படம் திரைக்கு வந்தது. இந்த படம் திரைக்கு வந்து 42 வருடங்களுக்கு மேலாகி உள்ள நிலையிலும், வெளியாகும் போது வெற்றி பெறவில்லை என்றாலும் இப்போது இந்த படத்தை பார்ப்பவர்கள் ஆச்சரியம் அடைவார்கள்.
ரஜினிகாந்த், ரதி, சங்கிலி முருகன், தேங்காய் சீனிவாசன், ஒய்.ஜி.மகேந்திரன், வி.கே.ராமசாமி, சுருளிராஜன், சோ உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான இந்த படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கியிருந்தார். இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார்.
ரஜினியின் அண்ணன் தேங்காய் சீனிவாசன் ஒரு ஆன்மீகவாதியாக இருப்பார். ஆனால் ரஜினி அவருக்கு நேர் எதிராக சமூக நீதிக் கொள்கையுடன் இருப்பார். இந்த நிலையில்தான் ஒரு முறை சாமியார் ஒருவர் வந்து தேங்காய் சீனிவாசனை ஏமாற்றி அவரிடம் இருக்கும் வைரங்கள் குறித்த ரகசியத்தை தெரிந்துக் கொள்வார். சாமியார் ஒரு கிரிமினல் என்பதை அறிந்து கொண்ட ரஜினி அந்த சாமியார் வைரங்களை திருடும் திட்டத்தை ஒரு பேருந்தில் சென்று முறியடிப்பார். அப்போது ஒரு நரபலி கும்பல் பேருந்தை துரத்தும், அதன்பின் என்ன நடந்தது என்பதுதான் இந்த படத்தின் கதை.
இந்த படத்திற்காக ஒரு சொகுசு பேருந்து அந்த காலத்திலேயே உருவாக்கப்பட்டது. சாதாரண பேருந்தை வாங்கி அந்த பேருந்தை சுமார் 7 லட்ச ரூபாய் செலவு செய்து சொகுசு பேருந்ததாக மாற்றினர்.
இப்போது இருக்கும் கேரவன் போலவே இந்த சொகுசு பேருந்தில் படுக்கையறை, குளியல் அறை என எல்லா வசதிகளும் இருக்கும். இந்த பேருந்தில் இருந்து பைக்கில் கிளம்பி ரஜினிகாந்த் வெளியேறும் காட்சியும் சுவாரசியமாக இருக்கும்.
கழுகு படத்தின் திரைக்கதையை பஞ்சு அருணாசலம் எழுதியிருந்தார். ஆங்கில படத்தில் இரு நண்பர்கள் தங்கள் மனைவியுடன் சுற்றுலா செல்லும்போது ஒரு நரபலி கும்பலை தற்செயலாக சந்திப்பார்கள். அதன் பிறகு அவர்களுக்கு என்ன நடக்கும்? அந்த கும்பலால் துரத்தப்படும்போது நடக்கும் விறுவிறுப்பான காட்சிகள் தான் இந்த படத்தின் கதையாக இருக்கும்.
இந்த கதை தமிழுக்கு ஏற்றவாறு சில விஷயங்களை மாற்றி கழுகு படமாக உருவாக்கப்பட்டது. ஆங்கில படத்தில் ரஜினியின் அண்ணன் தேங்காய் சீனிவாசன் கேரக்டர் என்பதே கிடையாது, அதேபோல் காதல் காட்சிகளும் அதிகம் இருக்காது. ஆனால் தமிழுக்கு இதையெல்லாம் படக்குழுவினர் சேர்த்தனர். ரஜினியின் வழக்கமான படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட படமாக இருந்தது.
ஆங்கில படத்திற்கு இணையாக சேஸிங் காட்சிகள், திகில் காட்சிகள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் ரசிகர்களால் பல காட்சிகளை புரிந்து கொள்ள முடியவில்லை என்று கூறப்பட்டது. அதனால்தான் இந்த படம் ஒரு தோல்விப்படமாக அமைந்தது.
இந்த படத்திற்காக மிகவும் ஆசை ஆசையாக பஸ்ஸை உருவாக்கிய படக் குழுவினர் கிளைமாக்ஸில் அந்த பஸ்ஸை எரித்து இருப்பார்கள் என்பதும் ஒரு ஆச்சரியமான தகவல்.
ஒரே நாளில் வெளியான 3 மோகன் படங்கள்.. மூன்றும் வெற்றி.. ரஜினி, கமல் கூட செய்யாத சாதனை..!
இந்த படத்திற்காக இசையமைப்பாளர் இளையராஜா 5 பாடல்களை கம்போஸ் செய்திருந்தார். அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பு பெற்றது. பின்னணி இசையையும் இளையராஜா சிறப்பாக செய்திருப்பார். மொத்தத்தில் ரஜினிகாந்த் ஒரு வித்தியாசமான, ஆங்கில படத்துக்கு இணையாக ஒரு படத்தில் நடித்தார் என்றால் அது கழுகு திரைப்படம்தான்.