தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் கராத்தே கலைஞர் வேடத்தில் நடித்திருப்பார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் உண்மையாகவே பிளாக் பெல்ட் வாங்கிய கராத்தே கலைஞர் ஒருவர் இருந்தார் என்றால் அவர்தான் கராத்தே மணி.
நடிகர் கராத்தே மணிக்கு சிறுவயதிலேயே கராத்தே கலையின் மீது அதிகம் ஆர்வம் இருந்ததால் அவர் முறையாக கராத்தே பயிற்சி பெற்றார். குறிப்பாக ஜப்பானின் முன்னணி கராத்தே கலைஞர்களிடம் இவர் பயிற்சி பெற்றார். மேலும் கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கிய முதல் தமிழர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. அது மட்டும் இன்றி கராத்தேவில் உள்ள உயர் பட்டத்தையும் இவர் பெற்றுள்ளார்.
கடந்த 1965 ஆம் ஆண்டு சென்னையில் கராத்தே பயிற்சி பள்ளியை தொடங்கிய மணி, அதில் பல மாணவர்களுக்கு கராத்தே குருவாகவும் இருந்தார். கராத்தே மூலம் புகழ்பெற்ற கராத்தே மணிக்கு ஒரு சில திரைப்படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அவர் தான் நடித்த திரைப்படங்களில் கூட தனது கராத்தே கலையையும் பயன்படுத்தினார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அன்புக்கு நான் அடிமை’ என்ற திரைப்படத்தில் அபாரமாக நடித்திருப்பார். இதன் மூலம் ரஜினியின் நெருங்கிய நண்பராகும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்திருந்தது. இதனையடுத்து அஞ்சாத நெஞ்சங்கள், விடியும் வரை காத்திரு, ரங்கா, அதிசய பிறவிகள், வளர்த்த கடா, நீதிக்கு ஒரு பெண் உள்பட பல படங்களில் நடித்தார்.
கராத்தே கதையம்சம் கொண்ட தங்க கோப்பை என்ற திரைப்படம் கிட்டத்தட்ட அவரது வாழ்க்கை வரலாற்றை ஒட்டியே இருக்கும். ஒரு கராத்தே கலைஞரின் கதை அம்சம் கொண்ட இந்த படத்தை ஆர்சி சக்தி இயக்கி இருப்பார். இந்த படத்தில் நளினி உள்பட பலர் நடித்திருந்தனர். ஒரு கட்டத்தில் திரைப்படத்துறையில் இருந்து விலகிய அவர் கராத்தே பயிற்சி பள்ளியில் மட்டும் கவனம் செலுத்தினார்.
கராத்தே மணிக்கு இரு மகன்கள் உள்ளனர். இவரது மகன்களில் ஒருவர் திரிசூல் உள்ளிட்ட ஒரு சில படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த நிலையில் கராத்தே மணி தனது 50ஆவது வயதில் உடல்நலக்குறைவால் காலமானார்.
ஒரு சில படங்களில் மட்டுமே தமிழ் திரையுலகில் இவர் நடித்திருந்தாலும் இவரது நடிப்பு செயற்கை தனம் இல்லாமல் இருக்கும் என்பதும் ஒரு நிஜ கராத்தே கலைஞர் ஸ்டண்ட் காட்சிகளில் நடிக்கும் காட்சிகளை பார்த்த ரசிகர்களுக்கு உண்மையில் வியப்பாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.