மனித வாழ்க்கையின் பிரச்சனைகளுக்குத் தீர்வு கொடுத்த சித்த வைத்தியர் இவர் தான்…!

By Sankar Velu

Published:

கவியரசர் கண்ணதாசனுக்கு முன்னாடியே பலரும் சினிமாவில் பாடல் எழுதியிருக்கிறார்கள். ஆனால் கண்ணதாசனைத் தான் கொண்டாடினார்கள் தமிழ்த்திரை உலக ரசிகர்கள். ஏன் தெரியுமா? வாங்க பார்க்கலாம்.

கண்ணதாசனைப் பொருத்தவரை சினிமா பாடலுக்குள் தேன் தடவிக் கொடுத்தவர். அந்த வகையில் அவர் ஒரு சித்த மருத்துவர் தான். கண்ணதாசன் எங்க ஊர் ராஜா படத்தில் ‘யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க’ன்னு பாட்டு எழுதியிருப்பார். அதைக் கேட்ட பலரும் இது எனக்காகவே எழுதுன மாதிரி இருக்குன்னு சொன்னாங்க. அது தான் கண்ணதாசனை இன்று வரை நம்மை சிலாகித்துப் பேச வைக்கிறது.

அதே நேரம் ‘காலமகள் கண் திறப்பாள் சின்னய்யா’ என்ற பாடலைக் கேட்டு ஆறுதலும் நம்பிக்கையுடன் வீறு நடை போட்டார்கள். ‘நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே’ என்ற பாட்டைக் கேட்டுவிட்டு, தங்கை இல்லாதவர்கள் கூட அழுதார்கள். நமக்கு இப்படி ஒரு தங்கை இல்லையே என்று ரொம்பவே ஃபீல் பண்ணினார்கள்.

Pasamalar
Pasamalar

காதலின் அர்த்தமோ ஆழமோ தெரியாமல் இன்றைக்குத் தத்தளித்து தவித்துக் கொண்டு இருக்கிறார்கள் இளம் தலைமுறையினர். ஆனால் அன்றைக்கே அதை சுவைபட சொல்லி இருக்கிறார் கண்ணதாசன். இளமையிலே காதல் வரும் எது வரையில் கூடவரும், முழுமை பெற்ற காதலெல்லாம் முதுமை வரை கூட வரும்’ என்று காதலைப் பற்றி நயமுடன் சொன்னார்.

வாழ்க்கையின் சிக்கல்களை சொன்னதோடு மட்டுமல்லாமல் அதற்கு எளிய நடையில் தீர்வும் சொல்லி இருக்கிறார். அதற்கு ‘மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா’ பாடலைக் கேட்டால் போதும்.’மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி’ என்ற பாடலைக் கேட்டு மயங்காதவர்களே இல்லை எனலாம். ‘நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா’ காதலின் சோகத்தை வார்த்தைகளால் பிழிந்து எடுத்திருந்தார் கவியரசர்.

‘நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை’ பாடலைக் கேட்டு, வலியை நெஞ்சில் அசை போட்டவர்கள் ஏராளம் உண்டு.
காதலியை வெட்டு, குத்து, கொல்லு என்றெல்லாம் பாட்டு வரும் இந்தக் காலத்தில் எங்கிருந்தாலும் வாழ்க என அழகுபட கவியரசர் காதலில் தோற்றாலும் கூட காதலியை வாழ்த்துகிறார்.

எம்ஜிஆருக்கு ‘ஹலோ ஹலோ சுகமா, ஆமாம் நீங்க நலமா?’ என்று போனிலேயே பாட்டுப்பாட எழுதிக்கொடுத்தார் அன்று. ‘வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும், வாசல் தோறும் வேதனை இருக்கும்’ என்று வாழ்வின் யதார்த்தத்தை அப்படியே காட்டினார்.

‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே’ என்று கண்ணனுக்கு அருமையான ஒரு பாடலை எழுதினார். அதே போல இரண்டு மனம் வேண்டும்’ என்று இறைவனிடம் கேட்டார்.

இப்படி ஒரு மனிதனின் மொத்த வாழ்க்கையில் எத்தனை எத்தனை சம்பவங்கள்,  தோல்விகள், சந்தோஷங்கள்,வெற்றிகள், காயங்கள் என அத்தனையையும் சுட்டிக் காட்டி அதற்கு தீர்வும் சொன்னவர் தான் கவியரசர் கண்ணதாசன்.
அன்று மட்டுமல்ல. இன்று வரை எல்லாராலும் நேசிக்கப்படுபவர் தான் முத்தையா என்ற கவியரசர் கண்ணதாசன்.