வடிவேலுவுடன் நிறைய படங்களில் நடித்த காமெடி நடிகரின் பரிதாப நிலை.. உதவி கேட்டு உருக்கமான வீடியோ பதிவு!

நடிகர் வடிவேலுவின் காமெடி டீமில் திரையில் சுமார் 30-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவருடன் சேர்ந்து நடித்து காமெடியில் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் தான் நடிகர் வெங்கல்ராவ். ஆந்திரமாநிலத்தைச் சேர்ந்த நடிகர் வெங்கல் ராவ் 80-களின் இறுதியில் சினிமாத் துறையில் நுழைந்தார். சினிமாவில் சண்டைப் பயிற்சியாளராக ஆக வேண்டும் என்ற கனவுடன் ஸ்டண்ட் மாஸ்டர்களிடம் பணி புரிந்தார். நிறைய படங்களில் ஹீரோக்களுக்கு டூப் போட்டு நடித்திருக்கிறார். மேலும் சண்டைக் கலைஞராக நிறைய படங்களிலும் பணிபுரிந்திருக்கிறார் வெங்கல்ராவ்.

வடிவேலுவின் டீமில் இருந்த முத்துக்காளை, சிங்கமுத்து, அல்வா வாசு, சூரி, போண்டா மணி போன்றோர்களுடன் வெங்கல்ராவும் இணைந்தார். இதனால் வடிவேலு தான் நடிக்கும் படங்களில் வெங்கல்ராவுக்கும் சில குறிப்பிட்ட காமெடிக் காட்சிகளைக் கொடுத்தார். இதன் மூலம் வெங்கல்ராவ் பிரபலமானார்.

மொட்டைத் தலையும், ஆஜானுபாகுவான தோற்றமும் வெங்கல்ராவை தனித்து அடையாளப்படுத்தியது. குறிப்பாக கந்தசாமி, சீனாதானா 007 போன்ற படங்களில் இவர்களது காமெடி வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும். இப்படி ரசிகர்களைக் குலுங்க குலுங்க சிரிக்க வைத்த நடிகர் வெங்கல்ராவுக்கு தற்போது உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அவர் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு உதவி கேட்டுள்ளார். அதில் “எனக்கு ஒரு கை கால் செயலிழந்து விட்டது. நடக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன். பேச்சும் சரிவர வரவில்லை. சினிமா நடிகர்களும், சினிமா தொழிலாளர்களும் எனக்கு உதவி செய்யுங்கள். மாத்திரைகள் வாங்கவும், சிகிச்சைச் செலவுக்கும் என்னிடம் பணமில்லை. நான் மிகவும் கஷ்டப்படுகிறேன். எனக்கு உதவுங்கள். என்னால் இதற்கு மேல் பேசமுடியவில்லை.” என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

இனிமே இந்தக் கோயில்ல வி.ஐ.பி தரிசனம் கிடையாது.. அதிரடி முடிவெடுத்த பிரபல கோவில் நிர்வாகம்..

தற்போது தனது சொந்த ஊரான விஜயவாடாவில் சிகிச்சை பெற்று வரும் வெங்கல்ராவ் உதவி கேட்டு வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நம்மைச் சிரிக்க வைத்த கலைஞனுக்கு இப்படி ஒரு நிலைமையா என ரசிகர்கள் வேதனை அடைந்துள்ளனர். குறிப்பாக வடிவேலு இவருக்கு உதவ வேண்டும் எனவும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.