‘விக்ரம்’ படத்தை இயக்கவிருந்த மணிரத்னம்.. கடைசி நேரத்தில் கைநழுவி போனதால் ஏற்பட்ட சிக்கல்..!

By Bala Siva

Published:

கடந்த ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘விக்ரம்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் 300 கோடிக்கும் அதிகமாக இந்த படம் வசூல் செய்தது என்பது தெரிந்ததே. ஆனால் ஏற்கனவே கமல்ஹாசன் 1986ஆம் ஆண்டு ‘விக்ரம்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை ராஜசேகர் இயக்கியிருந்தார்.

பிரபல எழுத்தாளர் சுஜாதா அன்றைய காலகட்டத்தில் ஒரு முன்னணி பத்திரிகையில் எழுதிய தொடர்கதைதான் ‘விக்ரம்’ என்று படமாக வெளியானது. ஒரு திரைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும் போதே அந்த படத்தின் கதை முழுவதும் பத்திரிகையில் தொடராக வந்தது என்பது மிகவும் ஆச்சரியமான விஷயம்.

எம்ஜிஆர் – தேவிகா இணைந்து நடித்த ஒரே படம்.. எம்ஜிஆர் – கமல் இணைந்து நடித்த ஒரே படமும் இதுதான்..!

vikram 19863

கமல்ஹாசன், அம்பிகா, சத்யராஜ் , லிசி, டிம்பிள் கபாடியா, அம்ஜத்கான், சாருஹாசன், ஜனகராஜ், மனோரமா உள்பட பலரது நடிப்பில் உருவான இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

முதலில் இந்த படத்தை மணிரத்னம் இயக்குவதாகதான் இருந்தது. கமல்ஹாசன் மற்றும் சுஜாதா ஆகிய இருவருமே இந்த படத்தை மணிரத்னம் இயக்கினால் நன்றாக இருக்கும் என்றுதான் நினைத்தார்கள். ஆனால் சில கமர்சியல் விஷயங்களை இந்த படத்தில் சேர்க்க வேண்டியது இருந்ததால் மணிரத்னம் அதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார் என்பதால் தான் இந்த படம் ராஜசேகர் கைக்கு போனதாகவும் கூறப்பட்டது.

இந்த படத்தை அந்தக்கால ஆங்கில படங்களான ஜேம்ஸ் பாண்ட் படம் போல் எடுக்க முயற்சி செய்தார்கள். முதல் பாதி கிட்டத்தட்ட ஜேம்ஸ் பாண்ட் பாணியில்தான் இருக்கும். ஆனால் இரண்டாவது பாதியில் சலாமியா என்ற ஒரு கற்பனை நாட்டை காண்பித்து படத்தை சொதப்பி இருப்பார்கள்.

vikram 19862

இந்த படத்தின் கதைப்படி அக்னிபுத்திரன் என்ற ஏவுகணையை இந்தியா ஏவுவதற்கு தயாராக வைத்திருந்த நிலையில் திடீரென வில்லன் கூட்டம் அந்த ஏவுகணையை கடத்திக் கொண்டு சென்றுவிடும். அந்த ஏவுகணையை வைத்தே இந்தியாவை அழிக்க வில்லன் கோஷ்டி முயலும். இந்த நிலையில்தான் அந்த ஏவுகணையை கண்டுபிடிக்க ரா ஏஜென்ட் பணியில் இருந்து விலகிய கமல்ஹாசனை அரசு அழைக்கும். அவர் தன்னால் இந்த வேலையை செய்ய முடியாது என்று கூறிய போதுதான் அவருடைய மனைவி அம்பிகாவை வில்லன் கூட்டம் கொன்றுவிடும்.

அதன் பிறகுதான் தன்னுடைய சொந்த பாதிப்பு மற்றும் தேச நலன் ஆகிய இரண்டையும் கருத்தில் கொண்டு ஏவுகணையை கண்டுபிடிக்க கமல் ஈடுபடுவார். அவருக்கு உதவியாக கம்பியூட்டர் இன்ஜினியர் லிசி இருப்பார்.

சுரேஷ் கிருஷ்ணாவின் முதல் படம்.. விவியன் ரிச்சர்ட்ஸ் கெட்டப்.. கமல்ஹாசனின் ‘சத்யா’ உருவான கதை..!

ஒருவழியாக ஏவுகணை இருக்கும் இடத்தை கண்டுபிடித்து சலாமியா என்ற தேசம் சென்று எலி குகை என்ற கோவிலுக்கு சென்று டிம்பிள் கபாடியுடன் பாட்டு பாடி, ஆடி, அதன் பிறகு கடைசியில் அக்னிபுத்திரன் என்ற ஏவுகணையின் ப்ரோக்ராமை மாற்றி இந்தியாவை காப்பாற்றுவது போல் படம் முடிந்திருக்கும்.

இந்த படத்தில் லிசி கேரக்டரில் முதலில் நதியாதான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவரிடம் கால்ஷீட் பிரச்சினை இருந்ததால்தான் லிசி இந்த படத்தில் இணைந்தார்.

முதல் பாதி மிகவும் விறுவிறுப்பாகவும் துப்பறியும் படமாகவும் இருந்த விக்ரம் படம் இரண்டாம் பாதியில் கதை திசை மாறியதால் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், இந்த படத்தின் பட்ஜெட் ஒன்றரை கோடி என்ற நிலையில் தயாரிப்பாளர் கமல்ஹாசனுக்கு ஓரளவுக்கு லாபத்தை கொடுத்தது.

vikram 1986

இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருந்தார். அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. ‘வனிதாமணி’, ‘என் ஜோடி மஞ்ச குருவி’, ‘மீண்டும் மீண்டும் வா’, ‘சிப்பிக்குள் ஒரு முத்து’ ஆகிய நான்கு பாடல்களும், டைட்டில் பாடலான ‘விக்ரம் விக்ரம்’ என்ற பாடலும் நல்ல வரவேற்பு பெற்றது.

ஒரே நாளில் வெளியான 3 மோகன் படங்கள்.. மூன்றும் வெற்றி.. ரஜினி, கமல் கூட செய்யாத சாதனை..!

இந்த படம் ஏஜென்ட் விக்ரம் என்ற பெயரில் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. அங்கும் இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது. ஏஜென்ட் விக்ரம் என்பதை கடந்த ஆண்டு வெளியான ‘விக்ரம்’ படத்தில் லோகேஷ் பயன்படுத்தி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.