தமிழ்த்திரை உலகின் சிறந்த ஒளிப்பதிவாளர்களுள் ஒருவர் பாலுமகேந்திரா. இவர் சிறந்த இயக்குனரும் கூட. திறமையான கலைஞராக இருந்தாலும் ஒரு கட்டத்தில் ரொம்பவே சோர்ந்து போனார் என்றுதான் சொல்ல வேண்டும்.
பாலுமகேந்திரா இயக்கிய முதல் கன்னடப்படம் கோகிலா. அப்போது இருந்தே கமலுடன் நெருங்கிய நட்பு. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மகேந்திரன் இயக்கிய படம் முள்ளும் மலரும். கமலிடம் அவர் ஒளிப்பதிவாளர் வேணும்னு சொன்னதும் கமல் சொன்ன ஒரே பேரு பாலுமகேந்திரா தான். அதே போல அழியாத கோலங்கள் என்ற படத்தில் கமலுக்காக கௌரவ வேடத்திலும் நடித்தார்.
1993 தான் அவருக்கு சோதனையான காலகட்டம். மறுபடியும் படம் வந்தது. அதன்பிறகு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தார். என்னடா செய்யறதுன்னு யோசித்தார்.
அப்ப தான் அவருக்கு கமல் ஞாபகம் வந்தது. அவர் யாருக்கிட்டேயும் உதவின்னு கேட்டது இல்ல. ரொம்ப கூச்ச சுபாவம் வேறு. சரி. கமல் தானே. கேட்டுப் பார்க்கலாம்னு போனாராம். அங்கு போனா கமல் அவரை உட்கார வச்சி உலக சினிமாவுல இருந்து உள்ளூர் சினிமா வரை பேசிக்கிட்டே இருந்தாராம். நேரம் போனதே தெரியல.
இந்த உலக சினிமாவை எல்லாம் உங்களை மாதிரி ஜாம்பவான்கள் கிட்டதானே பேச முடியும்னும் சொன்னாராம். அதுக்கு அப்புறம் டைம் பார்த்து, சூட்டிங் நேரமாச்சு. கிளம்பறேன். 10 நிமிஷம் வெயிட் பண்ணுங்கன்னு சொல்லி விட்டு அறைக்குச் சென்றாராம். என்னடா செய்றது? நாம இவருக்கிட்ட உதவி கேட்கலாம்னு வந்தா, இவர் சூட்டிங் போற அவசரத்துல இருக்காரே… எப்படி கேட்குறது? வேற யாரைப் போய் பார்க்கலாம்னு யோசித்துள்ளார் பாலுமகேந்திரா.
திரும்ப வந்த கமல் அவரிடம் ஒரு கவரைக் கொடுத்துள்ளார். அதில் அவர் எதிர்பார்த்த தொகையை விட அதிகமாகவே இருந்ததாம். அதைப் பார்த்து திகைத்த பாலுமகேந்திராவிடம் கமல் சொன்னது இதுதான். நான் உங்களுக்கு இதைக் கடனா கொடுக்கல. உங்களைப் பத்தித் தெரியாதா? அடுத்த படத்துக்கான அட்வான்ஸாத்தான் தந்துருக்கேன். வாங்கிக்கோங்கன்னாராம். உடனே கண்கள் கலங்க கமலைக் கட்டி அணைத்துக் கொண்டாராம் பாலுமகேந்திரா. அப்படி அவர் இயக்கிய படம்தான் சதிலீலாவதி.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.

