4 தேசிய விருதுகள்.. இளையராஜா – கே.பாலசந்தர் கூட்டணி.. சித்ராவின் அறிமுகம்.. பல அற்புதங்கள் செய்த சிந்து பைரவி..!

By Bala Siva

Published:

இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் திரைப்படம் என்றால் அந்த படம் வசூலில் சாதனை செய்கிறதோ இல்லையோ கண்டிப்பாக ரசிகர்கள் மனதில் இடம்பெறும். பெரும்பாலான படங்கள் வசூலிலும் சாதனை செய்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றுள்ளது.

பெரிய நட்சத்திரங்கள் இல்லாமல் தன்னுடைய திரைக்கதையை மட்டுமே முழுக்க முழுக்க நம்பி கே.பாலச்சந்தர் படத்தை உருவாக்குவார். அதுதான் அவருடைய மிகப்பெரிய பலம். அந்த வகையில் சிவகுமார், சுகாசினி நடித்த ‘சிந்து பைரவி’ திரைப்படம் கர்நாடக சங்கீதத்தை முழுக்க முழுக்க அலசி எடுத்த ஒரு திரைப்படமாக இருந்தது.

சிவாஜியை வைத்து எடுத்த ஒரே படம்.. இனிமேல் பெரிய நடிகர்களே வேண்டாம் என முடிவு செய்த கே.பாலசந்தர்..!

இந்த படத்திற்கு நான்கு தேசிய விருதுகள் கிடைத்தது. சிறந்த நடிகை சுகாசினி, சிறந்த இசையமைப்பாளர் இளையராஜா, சிறந்த பின்னணி பாடகி சித்ரா மற்றும் சிறந்த தமிழ் படம் என்ற நான்கு விருதுகளை பெற்று சாதனை செய்தது.

sindhu bairavi3

கர்நாடக சங்கீதத்தை தளமாக கொண்டு தமிழில் மிக குறைவாகவே படம் வந்துள்ளது. அதில் சில படங்களை எடுத்தவர் கே.பாலச்சந்தர். அந்த பட்டியலில் இடம்பெறும் படம்தான் சிந்து பைரவி.

மனைவி இருக்கும்போதே இன்னொரு பெண்ணுடன் பழகும் இசைக்கலைஞன் அந்த பெண்ணுக்கு ஒரு குழந்தையையும் கொடுத்து விடுகிறான். ஆனால் ஒரு கட்டத்தில் அந்த பெண் திடீரென மாயமாகிவிட, அதன் பிறகு கிளைமாக்ஸில் குழந்தையுடன் வந்து அவர் என்ன செய்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை.

இசைக் கலைஞர் ஜேகேபி என்ற கேரக்டரில் சிவகுமார் நடித்திருப்பார். அவரது இசை என்றால் ரசிகர்கள் மிகவும் விரும்பி கேட்பார்கள். ஆனால் அவருடைய மனைவி பைரவிக்கு இசை என்பது கிலோ என்ன விலை என்ற அளவுக்கு தான் தெரியும். இருப்பினும் அவருக்கு ஒரு குழந்தை இல்லை என்பது பெரும் குறையாக இருக்கும்.

sindhu bairavi1

இந்த நிலையில்தான் ஜேகேபியின் இசை கச்சேரியை கேட்க சிந்து வருகிறார். கர்நாடக சங்கீதத்தை ஒருசிலர் ரசித்தாலும் மொழி புரியாததால் பலர் தூங்கி விழுவதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைவார். அதன்பின்னர் அவர் ஜேகேபியிடம் கர்நாடக சங்கீதத்தை தமிழில் பாடலாமே, அவ்வாறு பாடினால் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என்று அவர் சிவகுமாரிடம் வாதம் செய்வார்.

கர்நாடக சங்கீதத்தில் எப்படி தமிழை கலக்க முடியும் என்று சிவக்குமார் கோபமாக கேட்பார். நீங்கள் அனுமதி கொடுத்தால் நான் பாடிக் காட்டுகிறேன் என்று கூறி ‘பாடறியேன் படிப்பறியேன்’ என்ற பாடலை பாடி அதில் கர்நாடக சங்கீதத்தையும் கலந்து பாடுவார்.

இந்த சம்பவத்தால் சிந்து மீது ஜேகேபி கோபப்பட்டாலும் நாளடைவில் இருவருக்கும் இடையே நட்பு ஏற்படும். இந்த நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மாறி இருவரும் இணைந்தும் விடுவார்கள். இந்த நிலையில் தான் பைரவியின் ஆட்கள் சிந்துவை ஊரை விட்டு அனுப்பி விடுவார்கள். அவர் திடீரென காணாமல் போய்விடுவார்.

sindhu bairavi2

சிந்து இல்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாகும் ஜேகேபி குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தான் பெற்ற மரியாதை அனைத்தையும் இழந்து விடுவார். இந்த நிலையில்தான் கணவரை அப்படி பார்க்க முடியவில்லை என்று முடிவு செய்த பைரவி மீண்டும் சிந்துவை வர வைப்பார். சிந்து அப்போது ஒரு குழந்தையுடன் வந்து அந்த குழந்தையை பைரவிக்கு பரிசாக கொடுத்துவிட்டு விடை பெறுவார்.

ஒரு கணவன் இரு மனைவி என்றாலும் ஒரு இடத்தில் கூட விரசம் இன்றி மிகவும் நாகரிகமாக இந்த படத்தை பாலச்சந்தர் இயக்கியிருப்பார். மேலோட்டமாக பார்த்தால் இது ஒரு சாதாரண கதை தான், ஆனால் ஒரு குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்கள், ஒரு இசை கலைஞனுக்கு ஏற்படும் தடுமாறல்கள் என திரைக்கதை ஜாலத்தை ஏற்படுத்தி இருப்பார் பாலச்சந்தர்.

இளையராஜா இசையமைக்காமல் இசையமைத்த படம்.. தேசிய விருது பெற்ற ‘வீடு’..!

சிவக்குமார் ஜேகேபி என்ற கேரக்டராக வாழ்ந்திருப்பார். சுகாசினி நடிப்பை பற்றி சொல்லவே வேண்டாம். அந்த அளவிற்கு நடித்திருப்பார். பைரவி என்ற அப்பாவி டைரக்டரில் சுலக்சனா அசத்தியிருப்பார். டெல்லி கணேஷ், ஜனகராஜ், ராகவேந்தர், மணிமாலா உள்பட அனைவரும் சிறப்பாக நடித்திருப்பார்கள். மணிமாலா தனது மகள்தான் சுகாசினி என்பதை அறிந்து கொண்டபோது அவரது நடிப்பு சிறப்பாக இருக்கும்.

sindhu bairavi4

இசைஞானி இளையராஜா இந்த படத்துக்கு இசைமைத்துள்ளார். கர்நாடக சங்கீதம் குறித்த கதை அம்சம் என்றால் இளையராஜாவிற்கு கேட்கவே வேண்டாம், பாடல்கள் அப்படியே பொங்கி வழியும். மகாகணபதிம், மரிமரி நின்னே, பூ மாலை வாங்கி வந்தான், மோகம் எனும், கலைவாணியே, நான் ஒரு சிந்து, பாடறியேன் படிப்பறியேன், தண்ணி தொட்டி தேடி வந்த, மனதில் உறுதி வேண்டும் என ஒன்பது பாடல்களை கம்போஸ் செய்திருந்தார். இந்த படத்தில் சிறப்பாக பாடியதற்காக சித்ராவுக்கு தேசிய விருது கிடைத்தது. சித்ரா இந்த படத்தில் தான் அறிமுகமானார்.

இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு காட்சியையும் பாலச்சந்தர் செதுக்கி இருப்பார். ஒவ்வொரு காட்சியையும் சிலாகித்து சொல்லிக் கொண்டே போகலாம். படத்தின் கதாநாயகன் சிவகுமார் என்று கூறினாலும் இளையராஜாதான் முதல் கதாநாயகன். அவரது பின்னணி இசை இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்தது.

1985ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி இந்த படம் வெளியானது. இந்த படம் வெளியாகி 38 வருடங்கள் ஆகிவிட்டபோதிலும் இன்னும் சங்கீதத்தை மையமாக வைத்து, ஒரு இசைக் கலைஞருடைய வாழ்க்கையின் தவிப்பை சொன்ன திரைப்படம் இதற்கு இணையாக வரவில்லை.

எம்ஏ தேர்வு எழுத வேண்டாம் என கூறிய இளையராஜா.. சின்னக்குயில் சித்ரா எடுத்த முடிவு..!

இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் என்று அனைவரும் அவரை போற்றுவார்கள். அவர் உண்மையிலேயே சிகரத்தை தொட்ட ஒரு படம் என்றால் அது சிந்து பைரவி படம்தான்.

மேலும் உங்களுக்காக...