பாலிவுட் பாட்ஷான்னா சும்மாவா.. முதல் நாளே மெர்சல் காட்டிட்டரே.. ஜவான் அதிகாரப்பூர்வ வசூல் இதோ!

Published:

அட்லீ இயக்கத்தில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி வெளியான நிலையில், மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பே வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் ஷாருக்கான் அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் விக்ரம் ரத்தோர் மற்றும் ஆசாத் என மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். மேலும், நர்மதா கதாபாத்திரத்தில் நயன்தாராவும் காலீஸ் கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதியும் நடித்துள்ளனர்.

பதான் படத்தைத் தொடர்ந்து ஜவான் படமும் முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபிஸில் தரமான சம்பவத்தை செய்துள்ளது. பாக்ஸ் ஆபிஸ் டிராக்கர்கள் கணித்தபடியே ஜவான் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 129.6 கோடி என ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பெரியளவில் புரமோஷன்:

தளபதி விஜய்க்கு தொடர்ச்சியாக 3 ஹாட்ரிக் கொடுத்த அட்லீ இயக்கத்தில் உருவான ஜவான் திரைப்படம், நேற்று உலகமெங்கும் வெளியானது. இந்தியில் அட்லீ இயக்கிய முதல் திரைப்படம் என்பதால், பாலிவுட் மட்டுமின்றி கோலிவுட் ரசிகர்களிடமும் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. இதனால், ஜவான் இசை வெளியீட்டு விழாவை சென்னையில் நடத்தி அனிருத்துடன் இணைந்து ஸ்டேஜில் ஆட்டமெல்லாம் போட்டிருந்தார் ஷாருக்கான்.

இந்த படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், யோகி பாபு, பிரியாமணி, சான்யா மல்கோத்ரா, அமிர்தா அய்யர், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர், அனிருத் இசையமைத்துள்ளார். ஷாருக்கானின் பதான் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி 1000 கோடி வசூலித்தது. இதனால், ஜவான் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது. அதனை சரியாக அறுவடை செய்துள்ளார் அட்லீ என்று தான் சொல்ல வேண்டும்.

ஜவான் அதிகாரப்பூர்வ வசூல்:

ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான சூப்பர்ஸ்டாரின் ஜெயிலர் முதல் நாளில் உலகம் முழுவதும் 90 கோடி ரூபாய் வசூல் ஈட்டிய நிலையில், இந்தியாவில் ஜவான் இந்தி வெர்ஷன் 75 கோடியும், தமிழ் வெர்ஷன் 8 கோடியும், தெலுங்கு வெர்ஷன் 7 கோடியும் வசூல் செய்துள்ளதாகவும் உலகம் முழுவதும் 130 கோடி வசூல் ஈட்டியிருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில், ஜவான் படக்குழுவே அதிகாரப்பூர்வமாக முதல் நாள் வசூல் உலகம் முழுவதும் 129.6 கோடி என புள்ளி விவரத்துடன் அறிவித்து ஷாருக்கான் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது.

முதல் பாலிவுட் படத்திலேயே மெர்சல் காட்டிய அட்லீ அடுத்து எந்த நடிகரை இயக்கப் போகிறார் என இந்திய சினிமாவே உற்று நோக்கி வருகிறது. தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு தொடர்ந்து தூண்டில் போட்டு வரும் நிலையில், ராஜமெளலி படத்திற்கு பிறகு அட்லீ மகேஷ் பாபுவை இயக்குவாரா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

மேலும் உங்களுக்காக...