‘பாரா’ பாடல் உருவான விதம்… இந்தியன் 2க்கு ஏ.ஆர்.ரகுமானைத் தவிர்த்தது ஏன்?

Published:

இந்தியன் 2ன் பர்ஸ்ட் சிங்கிள் ‘பாரா’ என்ற பாடல் வெளியானதும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் பா.விஜய். இது குறித்து என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா…

மைசூருக்கு ஒரு வேலையா போறேன். அப்போ திப்பு சுல்தானோட நினைவிடம் இருந்தது. அந்த அரண்மனை வளாகம், அவர் வாழ்ந்த இடம் எல்லாம் பார்க்க வாய்ப்பு கிடைச்சது. அப்போ இந்த டியூனை எடுத்துட்டுப் போறேன். அந்தக் கத்தி, துப்பாக்கி என எல்லாவற்றையும் பார்த்துட்டு நினைவிடம் பார்க்கிறேன்.

அதன்பிறகு நதிக்கரையோரம் உட்கார்ந்து ஓட்டல்ல ரூம் போட்டு இருந்தோம். அங்க தான் இந்தப் பாடலை எழுதினேன். அந்தப் பாடலில் என்ன ஒரு அதிசயம்னா இந்தப் பாடல் முதல்லயே ஓகே ஆயிடுச்சு. ஷங்கர் சார் கவிதையோட ரசிகர்.

அவருக்குப் பிடிச்சிடுச்சுன்னா அதைக் கொண்டாடுவார். அவர் ரசனையே எனக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். அதிலும் இந்தப் பாடலில் ‘எம் தாய் மண் மேல் ஆணை… தமிழ் மானத்தின் சேனை’ என்ற வரிகளைப் படிச்சதுமே அவருக்கு தெரிந்து விட்டது. பாடல் பிளாக்பஸ்டர் ஹிட் என்று.

அவர் ஒவ்வொரு வரிகளையும் ரொம்ப ரசித்தார். ரொம்பவும் நேசித்தார். எந்த ஒரு வார்த்தையையும் அவர் ஓகேன்னு சாதாரணமாக சொல்லவில்லை. எல்லாமே அவருக்கு ரொம்பவும் பிடித்து விட்டது. ஆரம்பத்தில் சரணம் மட்டும் கதையோட்டத்துடன் இருந்தால் நல்லாருக்கும்னு சொன்னார்.

Shankar, Pa.vijay
Shankar, Pa.vijay

இந்தப் பாடலின் டியூனைக் கேட்டதும் அது ரொம்ப ஆழமாகப் போனதால் எனக்கு கொஞ்சம் டைம் வேணும்னு கேட்டேன். சரி என்று சொன்னார் ஷங்கர். அப்படி உருவானது தான் அந்தப் ‘பாரா’ பாடல்.

சில பாடல்களில் வரிகள் அந்த டியூனோடு ஒன்றோடு ஒன்றாகக் கலந்து விடும். அதுபோலத் தான் இந்தப் பாடலும் அமைந்து விட்டது.

அனிருத் வேகமாக வளர்ந்து வரும் இசை அமைப்பாளர். இவரிடம் இருந்து நம்ம படத்துக்கு எப்படி புதுமையான இசையைக் கொண்டு வரலாம் என ஷங்கர் நினைத்திருக்கலாம். அதனால் தான் இந்தப் புதுகாம்போ. அதனால் கூட ஏ.ஆர்.ரகுமான் இந்தியன் 2 படத்திற்கு இசை அமைக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் இந்த விஷயத்திற்குள் எல்லாம் நான் போக மாட்டேன்.

‘உனக்குக் கொடுத்த வேலை எதுவோ அதைச் செய்’ என்பது போலத் தான் நான் செய்து கொண்டு இருக்கிறேன். பாரா பாடலின் ரெக்கார்டிங்க்ல என்னோட நரம்புகள் எல்லாம் தெறித்து விட்டது. பீறிட்ட உற்சாகம், ஆவேசம் என எல்லாமே 10 மடங்கு அதிகரித்து விட்டது.

‘கலையுலக வாரிசு’ என வாலி என்னை சொன்னார். அவர் எழுதிய பாடல் தான் இந்தியனில் வந்த கப்பலேறிப் போயாச்சு. அந்த வகையில் இந்தப் பாரா பாடல் எனக்கு அமைந்தது குரு சிஷ்ய உறவு போல உள்ளது. எதுகை, சந்தம், மோனை எல்லாம் கொடுக்கும் விஷயம் வாலிக்கே உரியது.

‘ரத்தக்கறை படிந்த உன் வாளின் முனைக்கு முத்தக்கறை ஒண்ணு வேணாமா துணைக்கு’ என்பது அவரோட ஸ்டைல். இந்தப் பாடலில் வேற லெவல்ல விஷூவல் கொடுத்திருப்பார். நானே பார்த்து மிரண்டு விட்டேன்.

இந்தப் பாடல் புறநானூறும், அகநானூறும் கலந்த பாடல். தேசிய விருது கிடைக்கும்போது தான் தொடர்ந்து வாழ்த்துக்கள் வந்த வண்ணம் இருக்கும். ஆனால் இந்தப் பாடல் வெளியான அரை மணி நேரத்தில் எனக்கு இவ்ளோ வாழ்த்துக்கள் வந்து குவியத் தொடங்கி விட்டது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் உங்களுக்காக...