பிரஷாந்தை நடிகனாக அல்ல, இப்படி ஆக்கணும்னு ஆசைப்பட்டேன்… அவர் சினிமாவிற்குள் வந்ததற்கு காரணம் இந்த ஆள்தான்… தியாகராஜன் பகிர்வு…

Published:

தியாகராஜன் தமிழ் சினிமாவில் பணிபுரிந்த நடிகர், திரைப்பட இயக்குனர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். அடிப்படையில் ஒரு தொழிலதிபரான தியாகராஜன் நடிகர் பிரசாந்தின் தந்தை மற்றும் நடிகர் விக்ரமின் தாய் மாமா என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் பிரபல தெலுங்கு மற்றும் கன்னட நடிகரான பெக்கடி சிவராமின் மருமகன் ஆவார்.

1981 ஆம் ஆண்டு ‘அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான தியாகராஜன், ‘மலையூர் மம்பட்டியான்’, ‘கொம்பேறி மூக்கன்’, ‘நீங்கள் கேட்டவை’ போன்ற வெற்றி படங்களில் நடித்து பிரபலமானவர். 1995 ஆம் ஆண்டு தனது மகனான பிரசாந்த் அவர்களை வைத்து ‘ஆணழகன்’ திரைப்படத்தை இயக்கினார். இது தவிர சில திரைப்படங்களை தயாரித்தும் உள்ளார் தியாகராஜன்.

தியாகராஜன் சினிமாவில் பணியாற்றிக் கொண்டிருந்ததால் அவரது மகனான பிரசாந்த் 17 வயது ஆகும் போது ‘வைகாசி பொறந்தாச்சு’ என்ற திரைப்படத்தின் மூலம் 1990 ஆம் ஆண்டு நடிகராக அறிமுகமானார். அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்த நடிகர் பிரசாந்த் 90களில் சாக்லேட் பாயாக வலம் வந்தார்.

90களில் உச்ச நட்சத்திரமாக இருந்த நடிகர் பிரசாந்த், விஜய், அஜித் அவர்களுக்கு இணையாக போற்றப்பட்டார். இவர் சினிமாவில் எங்கேயோ போய்விடுவார் என்று அனைவரும் நினைத்த வேளையில் 2000 களில் பிற்பகுதியில் அதிரடி நாயகனாக மாற விரும்பி இவர் தேர்ந்தெடுத்த கதைக்களங்கள் எதுவும் பெரிதாக எடுபடவில்லை. அதனால் சினிமாவில் இருந்து இடைவேளை எடுத்துக் கொண்டார் நடிகர் பிரசாந்த்.

தற்போது நீண்ட இடைவேளைக்கு பின்பு இந்த வருடம் நடிகர் பிரசாந்த் ‘அந்தகன்’ திரைப்படத்தின் மூலமாக கம்பேக் கொடுத்துள்ளார். மேலும் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள ‘கோட்’ திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது அந்தகன் பட பிரமோஷன் விழாக்களில் நடிகர் பிரசாந்த் தனது தந்தை தியாகராஜனுடன் சேர்ந்து கலந்து கொண்டுள்ளார். அதில் தியாகராஜன் பிரசாந்த் எப்படி சினிமாவில் வந்தார் என்பதை பற்றி கூறியுள்ளார்.

அவர் கூறியது என்னவென்றால், நான் பிரசாந்தை சிறுவயதிலிருந்தே வெளியில் காட்டியதே இல்லை. எனக்கு மகன் இருக்கிறான் என்பதே பலருக்கும் தெரியாது. 12ஆம் வகுப்பு முடித்த பின்பு, அவனை டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும் என்று தான் நான் விரும்பினேன்.. அவனை நடிகனாக ஆக்க வேண்டும் என்று நான் ஒருபோதும் விரும்பவில்லை. 12 ஆம் வகுப்பு முடித்தவுடன் என்ட்ரன்ஸ் எக்ஸாமும் எழுதி பிரசாந்த் பாஸாகி விட்டார் மெடிக்கல் சீட்டும் அவருக்கு கிடைத்து விட்டது. அந்த நேரத்தில் தான் சத்யராஜ் எங்க வீட்டிற்கு வரும் பொழுது பிரசாந்தை பார்த்துவிட்டு நேராக சென்று இயக்குனர்களிடம் தியாகராஜன் வீட்டில் ஒரு Handsome Boy இருக்கிறார்.என்று கூறிவிட்டார். அதை அறிந்த இயக்குனர்கள் வரிசையாக எங்கள் வீட்டிற்கு வர ஆரம்பித்து விட்டனர்.

அப்போது நான் பிரசாந்தை நடிகராக ஆக்க விரும்பவில்லை, டாக்டராக தான் ஆக்க விரும்புகிறேன் அவருக்கும் கல்லூரி தொடக்க இருக்கிறது என்று கூறி பட வாய்ப்புகள் வேண்டாம் என்று தான் சொன்னேன். அப்போதுதான் வைகாசி பொறந்தாச்சு இயக்குனர் கல்லூரி திறப்பதற்கு தான் மூன்று மாதம் லீவு இருக்கிறதே அதுக்குள்ள நானும் சூட்டிங் முடித்து விடுவேன் என்று கூறி பிரசாந்தை அழைத்துச் சென்றார். அப்படித்தான் பிரசாந்த் சினிமாவிற்குள் நுழைந்தார். பிரசாந்த் சினிமாவிற்குள் நுழைவதற்கு முதன் முதலாக காரணமாக இருந்தது சத்யராஜ் தான் என்று பகிர்ந்துள்ளார் தியாகராஜன்.

 

மேலும் உங்களுக்காக...