ஜெமினி ஸ்டூடியோ எஸ்.எஸ்.வாசன் என்றால் பலருக்கும் நினைவு இருக்கும். சென்னை அண்ணா சாலையில் உள்ள மேம்பாலத்திற்கு ஜெமினி பிரிட்ஜ் என்று பெயர் காரணமே இவரது பெரிய ஸ்டூடியோ அங்கு இருந்தது. தனது ஜெமினி ஸ்டூடியோ மூலம் 1948ல் இவர் தயாரித்து, இயக்கி வெளியிட்ட சந்திரலேகா தான் பாலிவுட்டையே கலக்கு கலக்கியது.
எஸ்.எஸ்.வாசன் பரம்பரை பணக்காரர் எல்லாம் இல்லை. 1900-களில் தனது சொந்த ஊரான திருத்துறைப்பூண்டியில் இருந்து சென்னை வந்து, கல்லூரிப் படிப்பு வரை முடித்து அரசு வேலைக்கு முயற்சித்தார். அது கிடைக்காமல் போனதும், சோர்ந்துவிடாமல் சிறு சிறு தொழில்களை செய்தார். அதில் முக்கியத் தொழில் பத்திரிகைகளுக்கு கமிஷன் அடிப்படையில் விளம்பரம் பெற்றுத் தருவது. பின்னர் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிப்பெயர்த்து புத்தகங்களை வெளியிட்டார். அதில் நல்ல வருமானம் வந்தது.
1928ல் ஆனந்த விகடன் பத்திரிகையை வாங்கி அதனை சுவாரஷ்யமான புத்தகமாக, ஓவியங்கள், நகைச்சுவை துணுக்கள், தொடர் கதைகள் எல்லாம் சேர்த்து வெளியிட்டு விற்பனையைக் கூட்டினார். அதில் தானே தொடர் கதையும் எழுதினார். 1935ல் வெளியான அவரது சதிலீலாவதி என்ற தொடர் கதையை படமாக்க விரும்பி மருதாசலம் செட்டியார் அணுகினார். பணம் எதுவும் கோராமல் கதை உரிமையைத் தந்தார். அப்படம் தமிழ் சினிமாவில் முக்கியமானது. ஏனென்றால் பின்னாளில் தமிழ் திரையுலகையும், தமிழ்நாட்டையும் ஆட்சி செய்த எம்.ஜி.ஆர்., அப்படத்தில் தான் அறிமுகமானார். இப்படியாக அவருக்கு சினிமா தொடர்பு ஏற்பட்டது.
1940ல் புகழ்பெற்ற சினிமா இயக்குனரும், ஸ்டூடியோ அதிபருமான கே.சுப்ரமணியத்திற்கு மவுண்ட் ரோடில், நுங்கம்பாக்கம் திருப்பத்தில் ஒரு ஸ்டூடியோ இருந்தது. அதில் தீ விபத்து ஏற்பட்டதால் அதனை விற்க முடிவு செய்தார். அதனை அப்போதே 85 ஆயிரம் ரூபாய்க்கு விலைக்கு வாங்கினார் வாசன். ஜெமினி ஸ்டூடியோஸ் என்று பெயர் வைத்து, குழலூதும் இரட்டைக் குழ்ந்தைகளை லோகோவாக்கி, மூவிலேண்ட் என்று கீழே ஆங்கில தலைப்பும் கொடுத்திருந்தார்.
1941ல் தனது ஸ்டூடியோ மூலம் பி.என்.ராவ் இயக்கத்தில் மதனகாமராஜன் படத்தை தயாரித்தார். அதன் பிறகு ஆண்டுக்கு ஒரு படம் என்கிற ரீதியில் 1947 வரை 7 படங்களை தயாரித்தார். அவருக்கு இயக்குனர் ஆர்வம் ஏற்பட்டது. 1948ல் சந்திரலேகா என்ற பிரம்மாண்ட படத்தைத் அவரே தயாரித்து இயக்கினார். வரலாற்று சாகச கதையான இது 30 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட முதல் படம். தனது சொத்துக்கள், நகைகள் என எல்லாவற்றையும் அடமானம் வைத்து இப்படத்தை முடித்தார் வாசன்.
ஜெமினி ஸ்டூடியோவில் ஷூட்டிங்கிற்காக யானை, குதிரை, சிங்கம், புலி பெரும் நடிகர் பட்டாளத்தையே இப்படத்திற்காக கூட்டி அவர்களுக்கு உணவு, தங்குமிடம் என கவனித்துக்கொண்டார். சந்திரலேகா படத்தின் முரசு நடனமும், அதிலிருந்து வெளிப்படும் போர் வீரர்கள் காட்சியும் அப்போது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. தமிழில் மட்டுமின்றி ஹிந்தியிலும் படத்தைத் தயாரித்து, 150 பிரிண்ட் போட்டு வெளியிட்டார். பெரியளவில் விளம்பரங்களும் செய்யப்பட்டன.
சந்திரலேகா ஹிந்தி படம் மூலம் தமிழ் படங்களுக்கு வட இந்திய வாசலை திறந்துவிட்டவர் ஜெமினி ஸ்டூடியோவின் எஸ்.எஸ்.வாசன்.