தமிழ்ப்படங்களை சென்சார் போர்டு சர்டிபிகேட் கொடுக்கும் போது 3 வகையாகப் பிரிக்கின்றனர். முதலில் ‘யு’ சான்றிதழ் என்றும், அடுத்ததாக ‘யுஏ’ சான்றிதழ் என்றும், அடுத்து ‘ஏ’ சான்றிதழ் என்றும் படங்கள் தரத்தின் வாரியாகப் பிரித்துக் கொடுக்கப்படுகிறது.
இவற்றில் ‘யு’ சான்றிதழ் என்றால் குடும்பப்பாங்கான படம். சிறுவர்கள் கூட தனியாக பார்க்கக்கூடிய வகையில் எந்த வித ஆபாசமோ, ரத்தக்களரியுடன் கொலை போன்ற வன்முறைச் சம்பவங்களோ இல்லாமல் இருக்கும். இந்தப் படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் கூட இருக்காது. அதனால் 18 வயதிற்குக் கீழ் உள்ள சிறுவர்களும் இந்தப் படத்தைத் தனியாகப் போய்ப் பார்க்கலாம்.
அடுத்ததாக ‘யுஏ’ சான்றிதழ் என்று வருகிறது. இது குடும்பப்பாங்கான படம் தான். இருந்தாலும் அங்கங்கே வன்முறையும், விரசமில்லாத ஆபாசக் காட்சிகளும் தென்படும். இங்கு இரட்டை அர்த்த வசனங்களும் இலை மறை காயாக சொல்லப்பட்டு இருக்கும். கடைசியாக வரும் ரகம் தான் கிளுகிளுப்பு ஊட்டும் ‘ஏ’ படம்.

இந்தப் பெயரைச் சொன்னாலே பருவ வயதினருக்கு உதட்டோரம் ஒரு புன்சிரிப்பு வந்து விடும். அவர்களுக்கு ஏற்ற கிளுகிளுப்பான கவர்ச்சியான காட்சிகள் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். அது மட்டும் அல்லாமல் இரட்டை அர்த்த வசனங்களுக்குப் பஞ்சம் இருக்காது.
இந்தப் படத்திற்கு சிறுவர்கள் பார்க்க அனுமதியில்லை. அதே போல பெரியவர்களுக்கு மட்டும் தான் அனுமதி. இந்தப் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுக்க வெறும் ஆபாசம் மட்டும் காரணமாக இருக்காது. அதீத வன்முறைக்காட்சிகளும் காரணம் தான்.
அதே போல ரத்தத்தை உறைய வைக்கும் திகில் படங்களுக்கும் ‘ஏ’ சர்டிபிகேட் கொடுப்பார்கள். அந்த வகையில் ‘ஏ’ படங்கள் தற்போது சகட்டு மேனிக்கு வர ஆரம்பித்துவிட்டன. இதைத்தான் இன்றைய இளம் தலைமுறையினரும் விரும்பிப் பார்க்கின்றனர்.
எந்த ஒரு படத்திற்கும் வரலாறு முக்கியம் அல்லவா. அந்த வகையில் தமிழ்த்திரை உலகில் முதன்முதலாக வெளியான ‘ஏ’ சான்றிதழ் பெற்ற படம் எதுன்னு தெரியுமா?
இது குறித்து நேயர் ஒருவர் 1951ல் வெளியான புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்த மர்மயோகி படத்திற்கு சென்சார் போர்டு ‘ஏ’ சர்டிபிகேட் கொடுத்துள்ளார்கள். இதைப் பற்றி சொல்ல முடியுமா என பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேட்கிறார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.
மர்மயோகி திரைப்படத்திலே மகாராஜா பேயாக வருவது போன்று காட்சி வருகிறது. அதன் காரணமாகத் தான் அந்தப் படத்திற்கு ‘ஏ’ சர்டிபிகேட் கொடுத்துள்ளார்கள். தமிழ்சினிமா உலகிலே முதல் ‘ஏ’ சர்டிபிகேட் பெற்ற படமாக மர்மயோகி அமைந்தது என்றார் அவர்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.


