fastag : விளையாட்டா இருக்காதீங்க.. வாகனங்களில் ‘பாஸ்டேக்’ ஸ்டிக்கர் இருந்தாலும் இரண்டு மடங்கு கட்டணம் உறுதி

Published:

டெல்லி: வாகனங்களின் முன் கண்ணாடியில் ‘பாஸ்டேக்’ ஸ்டிக்கர் ஒட்டாவிட்டால் 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிா்க்கும் வகையில் ‘பாஸ்டேக்’ செயல்படுத்தி வருகிறது, பாஸ்டேக்’ என்பது கட்டணம் செலுத்துகைக்கான தேசிய நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் மின்வழி சுங்கக் கட்டண முறையாகும்.

வாகனங்களின் கண்ணாடியில் ஒட்டப்படும் ரேடியோ அலைவரிசை அட்டைகள் (பாஸ்டேக் ஸ்டிக்கர்கள்) வங்கிக் கணக்கோடு இணைக்கப்பட்டிருக்கும். எனவே பாஸ்டேக் அட்டைகளுக்கான தேவையான தொகையை வங்கிக்கணக்கிலிருந்து முன்கூட்டியே ரீசார்ஜ் செய்து வைத்திருக்க வேண்டும். சுங்கச் சாவடிகளை ஒவ்வொரு முறை கடக்கும்போது வாகனத்தின் முன் கண்ணாடியில் ஒட்டப்படும் ‘பாஸ்டேக்’ ஸ்டிக்கர் தானியங்கி எந்திரம் மூலம் ஸ்கேன் செய்து, பயனரின் வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக சுங்க கட்டணம் வசூலித்துவிடும்.

சுங்கச் சாவடியிலிருந்து ஒவ்வொரு முறையும் கட்டணத் தொகை பாஸ்டேக்கி அட்டையிலிருந்து கழித்துக்கொள்ளப்படும்போது பதிவுசெய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் வந்துவிடும். ஏடிஎம் அட்டைகள், கடன் அட்டைகள், இணையவழிப் பணப் பரிமாற்றம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் மூலம் பாஸ்டேக் அட்டைகளை ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும்.

இதனிடையே சிலர் சுங்க கட்டணத்தை தவிர்க்கும் நோக்கில் வேண்டுமென்றே ‘பாஸ்டேக்’ ஸ்டிக்கரை வாகனத்தின் முன் கண்ணாடியில் வைக்கமால் இருந்து வருவதாக புகார்கள் எழுந்தன.இதனால் பல சுங்கச்சாவடிகளில் தேவையற்ற தாமதங்கள் ஏற்படுவதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு புகார்கள் வந்தன.

இந்த விவகாரம் தொடர்பாக புதிய வழிகாட்டுதலை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி முன் கண்ணாடியில் ‘பாஸ்டேக்’ ஸ்டிக்கர் ஒட்டாமல் வரும் வாகனங்களின் பயனர்களிடம் இருந்து 2 மடங்கு கட்டணத்தை வசூலிக்க சுங்கச் சாவடிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் உங்களுக்காக...