ரஜினியின் ஆஸ்தான இயக்குநரான எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 1986-ல் வெளிவந்த திரைப்படம் தான் மிஸ்டர் பாரத். ரஜினி அப்போது கமர்ஷியல் நாயகனாக வசூல் மன்னனாக வளர்ந்து கொண்டிருந்த காலகட்டம் அது. மேலும் கமலுக்கும்-ரஜினிக்கும் கடும் போட்டியும் நிலவியது. இந்நிலையில் இவர்கள் இருவருடனும் வில்லனாக நடித்து மிரட்டியவர் சத்யராஜ். ரஜினிக்கு மிஸ்டர் பாரத் படத்திலும், கமலுக்கு காக்கிச் சட்டை படத்திலும் வில்லனாக நடித்து மிரட்டியிருப்பார்.
குறிப்பாக கமலுடன் காக்கிச் சட்டை படத்தில் நடித்த போது அவர் பேசிய வசனமான தகடு… தகடு.. என்ற வசனம் மிகப் பிரபலம் ஆனது. அதே போல் ரஜினியுடன் மிஸ்டர் பாரத் படத்தில் நடித்த போது இவருக்கும், ரஜினிக்கும் இடையே அப்பா-மகன் உறவினை வில்லத்தனத்தில் அருமையாகக் காட்டியிருப்பார் எஸ்.பி.முத்துராமன்.
சத்யராஜுக்கு காக்கிச் சட்டை படத்தில் எப்படி தகடு..தகடு என்ற வசனம் பிரபலமானதோ அதே போல் மிஸ்டர் பாரத் படத்திலும் ஒரு புகழ்பெற்ற வசனம் தான் என்னம்மா கண்ணு சவுக்கியமா? என்ற வசனம். இன்றும் நாம் யாரையாவது வெகு நாட்களுக்குப் பின் பார்க்கும் போது கிண்டலாக என்னம்மா கண்ணு சவுக்கியமா என்று கேட்பது வழக்கம். இப்படி இந்த வசனம் வந்து கடந்த 38 ஆண்டுகளுக்கு மேலாகியும் மக்கள் மனதில் மறையாமல் இருக்கிறது.
இந்த வசனத்தினை எழுதியது விசு. சாதாராணமாகவே திரைக்கதை, வசனங்களில் வியக்க வைக்கும் விசு மிஸ்டர் பாரத் படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளார். அப்போது இந்த வசனத்தினை எழுத அது பிரபலமாகிப் போயிருக்கிறது. மேலும் இந்த வசனத்தையே வைத்து ஒரு பாடல் எழுதலாம் என எண்ணி என்னம்மா கண்ணு சவுக்கியமா என்று பல்லவியைப் போட்டு வாலி பாட்டெழுத இளையராஜா இசையமைக்க மலேசியா வாசுதேவன்.. எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரல்களில் போட்டிப் பாடலாக அப்பொழுது பிரபலமாக ஒலித்தது.
மேலும் இதே வசனத்தினை வைத்து சத்யராஜ் நடிப்பில் என்னம்மா கண்ணு என்ற திரைப்படமும் வந்தது. அதேபோல் தனுஷ்-பிரகாஷ்ராஜ் நடிப்பில் திருவிளையாடல் ஆரம்பம் படத்திலும் இந்தப் பாடல் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு வசனம் பாடலாகவும், திரைப்படமாகவும், வசனமாகவும் வெவ்வேறு வடிவங்களில் வந்து இன்று டிரெட்டிங்கிலும் இருக்கிறது.