தனியார் நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் வேலை.. ஆனாலும் நடிப்பில் இருந்த ஆர்வம்.. காலமான அடேடே மனோகரின் மறுபக்கம்..

Published:

நாடகம், சினிமா, சின்னத்திரை என அனைத்து துறைகளிலும் முன்னணி நடிகராக வலம் வந்த பழம்பெரும் நடிகர் அடடே மனோகர் தற்போது வயது மூப்பின் காரணமாக காலமாகியுள்ளது ஒட்டுமொத்த திரையுலக பிரபலங்களையும் கண்ணீரில் ஆழ்த்தி உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பாகவே டிவி மற்றும் ரேடியோ நாடகங்களில் கால் பதித்த அடடே மனோகர், பல முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து அனைவரின் மனதையும் வெகுவாக கவர்ந்துள்ளார்.

அதிலும் ரேடியோ நாடகங்களில் இவர் ஒரு கதாபாத்திரமாக பேசி மக்கள் மனதிலேயே நடிப்பை கற்பனைப்படுத்தி எளிதில் தொடர்புபடுத்திக் கொள்ளும் அளவுக்கு நடித்தததால் அனைவருக்கும் பிடித்தமான நபராகவும் மனோகர் இருந்தார்.

முன்னதாக ஒரு தனியார் நிறுவனத்தில் பெரிய பொறுப்பில் பணிபுரிந்து வந்த மனோகருக்கு மேடை நாடகங்களில் அதிகமாக ஆர்வம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் வேலை ஒரு பக்கம், நாடகங்கள் ஒரு பக்கம் என இயங்கி வந்த அடடே மனோகர், இது தவிர சின்னத்திரை தொடர்களிலும், பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர் பெரும்பாலும் காமெடி கதாபாத்திரங்களில் தான் நடிப்பாராம். இது ஒரு பக்கம் இருக்க, சில நாடகங்களை தானே எழுதி இயக்கவும் செய்துள்ளாராம்.

வயதான காலத்திலும் கூட நாடகங்கள் நடித்து வந்த அடடே மனோகர், இதுவரை 3500 க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்து பட்டையைக் கிளப்பி உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி பிரபலங்களாக இருந்த எஸ்வி சேகர், கிரேசி மோகன் ஆகியோருடன் இணைந்து நாடகங்கள் நடித்துள்ள அடடே மனோகர், அவரது இயல்பான நடிப்பின் காரணமாக தான் சின்னத்திரை, பெரிய திரை என அனைத்திலும் கொடி கட்டி பறந்திருந்தார்.

சின்ன மாப்பிள்ளை, பெரிய மாப்பிள்ளை, நிம்மதி உங்கள் சாய்ஸ், ரமணி வெர்சஸ் ரமணி என சுமார் பத்துக்கும் மேற்பட்ட சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரங்கள் நடித்துள்ளவர், மேடை நாடகங்களில் கூட பாட்டு பாடி நடிப்பதும் அவரது சிறப்பம்சமாக பார்க்கப்பட்டது. விவேக், வடிவேலு உள்ளிட்ட காமெடி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள அடடே மனோகரின் மனைவி கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார்.

இந்த தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில் அவர்களுடன் வாழ்ந்து வந்த மனோகர், சமீபத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் தற்போது அவர் காலமானார். சென்னை குமரன்சாவடி பகுதியில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரபலங்கள் பலரும் நேரடியாக வந்து தங்களின் அஞ்சலிகளை செலுத்தி வருகின்றனர்.

மேலும் உங்களுக்காக...